Monday, July 17, 2023

தூக்கமின்மை.....!

                                      தூக்கமின்மை - அலட்சியம் வேண்டாம்...!

ஏக இறைவன் மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் கொடுத்துள்ள மிகப்பெரிய வரம் மற்றும் பரிசு தூக்கம் ஆகும். மனிதன் சரியான அளவுக்கு தூங்கினால், அவனுக்கு உடல், மன ரீதியாக எந்த பிரச்சினைகளும் ஏற்படாது என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும், தூக்கத்தின் அருமையை அறிந்துக் கொள்ளாமல், பலர், நீண்ட நேரம் கண் விழித்து தங்களுடைய உடல்நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள்.  சிலருக்கு தூக்கமின்மை என்ற பிரச்சினை இருந்து வருகிறது. அதுகுறித்து கவலைப்படாமல் அதை அவர்கள் இலேசாக எடுத்துக் கொள்கிறார்கள். 

தூக்கமின்மை:

தூக்கம் தொடர்பான பிரச்சினைகளை நாம் இலகுவாக எடுத்துக் கொள்ள கூடாது. தொடர்ச்சியான தூக்கமின்மை உடல்நலம் மற்றும் நல்வாழ்வை பாதிக்கிறது. ஐ.டி. எனப்படும்  தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் பலர், வீட்டில் இருந்து வேலை செய்யும்போதும், இரவில் சரியாக தூங்குவதில்லை. இதனால் காலை நேரத்தில் தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகளை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பணியின் அழுத்தமே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தூக்கமின்மை பிரச்சினையை சரி செய்ய அவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு நிலைகள் மிகப்பெரிய அளவுக்கு பலன் அளிப்பது இல்லை. இதனால், உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், வேலை பளூவும் அதிகமாகி விடுகிறது. தூக்கமின்மை காரணத்தால், குடும்ப உறவுகளும் சீர்குலைகின்றன.

தூக்கமின்மையால் ஆபத்து:

சிலருக்கு தூக்கமின்மையால், லேசான தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணிநேர தூக்கத்துடன் கடுமையான தூக்க சுகாதாரத்தைப் பின்பற்றுதல், சாப்பிடுவதற்கும் உறங்குவதற்கும் நிலையான வழக்கமான உணவு, போன்ற வாழ்க்கை முறையை நாம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தினசரி நடைப்பயிற்சி, யோகா மற்றும் தியானம், உள்ளிட்டவைகளை செய்து வருவது தூக்கமின்மையால் ஏற்படும் ஆபத்துகளை தடுக்க முடியும். 

தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட பலருக்கு அவர்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் சிலவற்றை மருத்துவ ஆலோசனைகளின்படி செய்யப்பட்டது. இப்படி செய்யப்பட்ட மாற்றங்கள் மூலம், தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட பெண் அல்லது ஆண் ஆகியோரின் பணி உற்பத்தித்திறன், மனநிலை மாற்றங்கள் மற்றும் ஆற்றல் நிலைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. 

சூழ்நிலைகளை மாற்ற வேண்டும்:

தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு காண படுக்கையறை சூழல் மற்றும் தூக்கம் தொடர்பான பழக்கங்களை மேம்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். இதன்மூலம் ஒருவர் சிறந்த தூக்கத்தைப் பெறலாம். தூக்க அட்டவணையை வைத்து தினசரி வழக்கமான தூக்கத்தை ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை தருகிறார்கள். 

அடிக்கடி தேநீர், காபி, குளிர் பானங்கள் மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவததைத் தவிர்க்க வேண்டும் என்றும், இரவில் தாமதமாக சாப்பிடுவதை கைவிட்டு, சரியான நேரத்தில் சாப்பிடுவதை பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தரும் ஆலோசனையாகும். இதேபோன்று, படுக்கையறை இருட்டாகவும் அமைதியாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். படுக்கைக்கு முன் குறைந்தது ஒரு மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பது, செல்போனில் பேசுவது, சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அத்துடன் ஒவ்வொரு நாளும், மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் அவசியம். 

குறைவாக தூங்கும் இந்தியர்கள்:

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவின் நகர்ப்புற மக்களில் 61 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார்கள் என தெரியவந்துள்ளது.  வேலை அழுத்தம், சமூக சூழ்நிலைகள் ஆகியவற்றால், அனைத்து தரப்பு மக்களிடையேயும் கவலையளிக்கும் விளைவுகளுடன் தூக்கமின்மை இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீரற்ற உடல் செயல்பாடு மற்றும் உணவு முறைகள் காரணமாக இந்த தூக்க நேரம் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை மேலும் சுருங்கியுள்ளது. இதனால் குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகளை ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

தூக்கமின்மை இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவதற்கு வழிவகுக்கிறது. இது உயர் இரத்த அழுத்தம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற நாட்பட்ட கோளாறுகளுக்கு வழிவகுக்கும். தூக்கமின்மை இருதய அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நீடித்த தூக்கமின்மை மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது. இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. உடல் பருமன், பலவீனமான நோய் எதிர்ப்பு, தொற்று நோய்கள், மனநல கோளாறுகள், மற்றும் பக்கவாதம் போன்றவற்றுக்கும் தூக்கமின்மை முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 

இளைஞர்கள் அலட்சியம்:

இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இளைஞர்கள் தூக்கமின்மைக்கு ஆளாகிறார்கள்.  இதனால் அவர்கள் நீண்ட காலத்திற்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியன் ஜர்னல் ஆஃப் ஸ்லீப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நரம்பியல் உளவியல் பரிசோதனையில் இந்தியாவில் 31-50 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில்  தூக்கமின்மை அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில்,  87 சதவீத இந்தியர்கள் தூங்குவதற்கு முன் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர் என்றும்,  25-34 வயதிற்குட்பட்டவர்களில் 78 சதவீதம் பேர் தாமதமாக எழுந்து சமூக ஊடகங்களில் உலாவுகிறார்கள் அல்லது இணையத்தளங்களை அதிகமாகப் பார்க்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. 

அலட்சியம் வேண்டாம்:

மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், தூக்கத்தின் அளவு மற்றும் தரத்தை எதிர்மறையாக பாதிக்கும் நாள்பட்ட தூக்கக் கோளாறுகளுக்கு மக்கள் அரிதாகவே சிகிச்சை பெறுகிறார்கள். வாகனம் ஓட்டும்போது தூங்குவது போன்ற பிரச்சினைகளுக்கு  விபத்துகளுக்குப் பிறகே மருத்துவ ஆலோசனை பெரும்பாலும் பெறப்படுகிறது.

18 நாடுகளில் ஃபிட்பிட் நடத்திய 2019 ஆய்வில், உலகில் தூக்கமின்மை உள்ளவர்களில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். சராசரியாக ஏழு மணி நேரம் ஒரு நிமிடம் தூங்குகிறார்கள். ஆரோக்கியமான பகல்நேர பழக்கவழக்கங்கள், வழக்கமான இரவு மற்றும் தூக்க அட்டவணை, தூக்கத்திற்கு ஏற்ற படுக்கையறை சூழலை உருவாக்குதல் மற்றும் தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்தல் போன்ற அடிப்படை வாழ்க்கை முறை மாற்றங்கள் சிறந்த தூக்க விளைவுகளை ஊக்குவிக்கும். தூக்கத்தை ஆதரிக்க அடிக்கடி மருந்துகளை பயன்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும் என  ஹார்வர்டு-இணைந்த ப்ரிகாம் மற்றும் பாஸ்டனில் உள்ள பெண்கள் மருத்துவமனையின் நடத்தை இயக்குனர் டாக்டர் சுசான் பெர்டிஷ் கூறியுள்ளார். 

எனவே, தூக்கமின்மை பிரச்சினையை நாம் அலட்சியம் செய்யக் கூடாது. ஏக இறைவனின் அருட்கொடையான தூக்கத்தை சரியான அளவுக்கு பயன்படுத்திக் கொண்டு தூங்க வேண்டும். அதற்காக எந்த நேரமும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது. அப்படி தூங்கிக் கொண்டே இருந்தால், வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: