வக்பு சொத்துக்களை பாதுகாப்பது ஒரு கடமையாகும். அதில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது....!
சென்னையில் நடைபெற்ற வக்பு கருத்தரங்கில் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர், எம்.பி.,உறுதி...!
சென்னை, செப்.29- உயர்ந்த நல்ல காரியங்களை செய்வதற்காக நம் முன்னோர்கள் வழங்கிய வக்பு சொத்துக்களை பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும் என்றும் அதில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது என்றும் சென்னையில் நடைபெற்ற வக்பு சட்டத் திருத்த மசோதா தொடர்பான கருத்தரங்கில் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி., தெரிவித்துள்ளார். கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் சிறப்புரையாற்றினார். அப்போது பேசியதாவது:
இஸ்லாமிய சமுதாயம் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடியான நேரத்தில், சென்னையில் இந்த கருத்தரங்கம் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருத்தரங்கமாகும். குறிப்பாக, இந்த கருத்தரங்கில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.ரகுமான் கான் அவர்கள் கலந்துகொண்டு இருப்பது அதைவிட சிறப்பான ஒன்றாகும். வக்பு வாரிய சொத்துக்கள் குறித்து, நன்கு அறிந்துகொண்டு, அதை பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம் சமுதாய தலைவர்களில் மிகவும் முன்னணியில் இருப்பவர் ரகுமான் கான் அவர்கள் என்றால், அது மிகையாகாது. ரகுமான் கான் 2013ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்று இருந்ததுடன், ஒன்றிய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் மிகவும் சிறப்புடன் செயல்பட்டவர். மாநிலங்களவை துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த அவர், மிகவும் சிறப்பான முறையில் தனது பணிகளை நிறைவேற்றியவர்.
அத்தகைய ஒரு சிறந்த ஆளுமையை நாம் அனைவரும் மதிக்கிறோம். அவரது கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்க ஆவலுடன் இருக்கிறோம். வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து அவர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதினார். எனக்கு அந்த கடிதம் கிடைத்தது. கடிதத்தில் இருந்த ஒவ்வொரு வார்த்தைகளும் என் மனதை மிகவும் தொட்டன.
2013ஆம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தம்:
வக்பு வாரிய சட்டம் தொடர்பாக கடந்த 2013ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் ஒருசிறந்த மைல்கல்லாக இருந்து வருகிறது. வக்பு சொத்துக்களை பாதுகாக்க செய்யப்பட்ட அனைத்து அம்சங்களையும், திருத்தங்களையும் நாங்கள் வரவேற்று இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் கூட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் குறித்து நான் வரவேற்று பேசினேன். இப்படி, சிறப்பான திருத்தங்களை கொண்டு வந்து, வக்பு சொத்துக்களை பாதுகாக்க ரகுமான் கான் அவர்கள், தற்போது இங்கு வந்து மேலும் சிறப்பான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் நம் மத்தியில் தெரிவிக்க இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
மசோதாவிற்கு ஏன் எதிர்ப்பு?
தற்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா 2024 மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு மசோதாவாகும். இந்த மசோதாவை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம். கடுமையாக விமர்சனம் செய்கிறோம் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். அது தொடர்பாக நான் முழு விவரங்களை இங்கு கூற விரும்பவில்லை. ஆனால், எளிமையான முறையில் சொல்ல வேண்டுமானால், இந்த மசோதா, சட்டமாக நிறைவேற்றப்பட்டால், வக்பு வாரியத்திற்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் ஒன்றிய அரசின் கைகளில் சென்றுவிடும். தேசிய வக்பு கவுன்சில், மாநில வக்பு வாரியங்கள் என அனைத்து அமைப்புகளிடம் தற்போது இருந்துவரும் அதிகாரங்களையும் உரிமைகளையும் ஒன்றிய அரசு கைப்பற்றிவிடும்.
வக்பு வாரியங்களில் தற்போது இருக்கும் உறுப்பினர்களுக்கு சில அதிகாரங்களும் உரிமைகளும் இருந்து வருகின்றன. அந்த அதிகாரங்கள் மூலம் வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க முடியும். இத்தகைய உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வக்பு வாரியம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பாகும். அத்தகைய வகையில் அந்த அமைப்புக்கு அதிகாரங்கள் உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் அரசியல் நோக்கத்துடன் வக்பு வாரியத்தின் அனைத்து உரிமைகளையும் அதிகாரங்களையும் கைப்பற்றி, தம்மிடம் வைத்துக் கொள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் காரணமாக தான் நாங்கள் இந்த வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறோம். வக்பு வாரிய சொத்துக்களை மிகவும் எளிமையான முறையில் கைப்பற்றி தம்மிடம் கொண்டு வந்துவிட அரசு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
முன்னோர்களின் விருப்பம்:
நம்முடைய முன்னோர்கள் நல்ல நோக்கத்திற்காக கொடுத்த தங்களது சொத்துக்களை சமுதாய நன்மைக்காக மட்டும் கொடுக்கவில்லை. தங்களுடைய மறுமை நன்றாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள். தாங்கள் வழங்கிய சொத்துக்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள்.
ஆனால், நமது முன்னோர்கள் வழங்கிய அனைத்து சொத்துக்களையும், தன்னுடைய சட்டத் திருத்தம் மூலமும், அதிகாரம் மூலமும் கைப்பற்ற அரசு திட்டமிட்டுள்ளது. வக்பு சொத்துக்கள் தொடர்பாக, வாரியம் முடிவு செய்துவரும் நிலையில், அத்தகைய ஒரு நிலையை மாற்றிவிட்டு, வக்பு சொத்துக்கள் எவை என்பது குறித்து அரசே முடிவு செய்யலாம் என இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில நேரங்களில் மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்துக் கொள்ளலாம் என்ற நிலை மசோதாவில் உருவாக்கப்பட்டுள்ளது. வக்பு வாரிய சொத்துக்கள் குறித்தும், அதன் ஆக்கிரமிப்புகள் குறித்தும் பிரச்சினை வரும்போது, அது யாருடைய சொத்து என்பதை மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்து தீர்மானிக்கலாம் என இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் வக்பு சொத்துக்கள் குறித்து பிரச்சினை வந்தால், அதை உரிய முறையில் விசாரணை நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது. வக்பு வாரியம் சரியான முறையில் விசாரணை நடத்தி, முடிவு எடுக்கலாம் என்ற சட்டம் தற்போது இருக்கிறது. ஆனால் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதா சட்டமாக மாற்றப்பட்டால், வக்பு சொத்துக்கள் குறித்து பிரச்சினை வந்தால், அவை அனைத்தும் வக்பு சொத்துக்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். மாவட்ட ஆட்சியரே வக்பு சொத்துக்கள் குறித்து முடிவு செய்து அறிவிப்பை வெளியிடுவார்.
வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் வாரியத்திற்கு சொந்தமானதா அல்லது அரசுக்கு சொந்தமானதா என்ற கேள்வி வந்தால், அதற்கு மாவட்ட ஆட்சியரே முடிவு செய்து அறிவிப்பை வெளியிடலாம் என அரசு மசோதாவில் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நமது முன்னோர்கள் நல்ல நோக்கத்திற்காக கொடுத்த தங்களது சொத்துக்கள் அனைத்தும் வக்பு வாரியத்திடம் இருந்து பறிபோகும்.
புதிய புதிய முறையில் பிரச்சினையை உருவாக்கி வக்பு சொத்துக்களை சிறிது சிறிதாக அவர்கள் கைப்பற்றி விடுவார்கள். தங்களுடைய சதி திட்டங்கள் மூலம் இதுபோன்ற பிரச்சினையை அடிக்கடி ஏற்படுத்தி, வக்பு சொத்துக்களை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள். இப்படி பல தவறான அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தையும் நான் இங்கு கூற நேரம் இல்லை என்பதால், சுருக்கமாக பேசுகிறேன்.
முக்கிய அம்சங்கள்:
வக்பு சொத்து குறித்து தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி, எந்தவொரு நபரும் தம்முடைய சொத்தை வக்பு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றி முஸ்லிமாக இருக்கும் ஒருவர் மட்டுமே, வக்பு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் மீண்டும் பிரச்சினையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அத்துடன் இஸ்லாமிய மார்க்கத்தை 5 ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றும் நபர் மட்டுமே வக்பு செய்ய முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதை யார் தீர்மானம் செய்வது? அவர் முஸ்லிமா அல்லது சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவரா என்பதை எப்படி முடிவு செய்ய முடியும். அதை யார் தீர்மானிப்பார்கள். சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், தனது சொத்தை வக்பு செய்தால், அதை எப்படி தடுக்க முடியும். அவரது நல்ல நோக்கத்தை எப்படி சீர்குலைக்க முடியும். மேலும் இந்த வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மதசார்பின்மை கொள்கையை சீர்குலைக்கும் வகையில் இருந்து வருகிறது.
சொத்துக்களை கைப்பற்ற முயற்சி:
கடந்த 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் தங்களது சொத்துக்களை வக்பு செய்வதாக வாய் வழியாக அறிவிப்பு வெளியிட்டார்கள். அதை பின்பற்றி வக்பு வாரியம் அந்த சொத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, நல்ல பல காரியங்களை செய்து வருகிறது. ஆனால், இந்த பா.ஜ.க. அரசு, அந்த சொத்து யார் கையில் உள்ளதோ, அவர்களே அதனை அனுபவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தற்போது எடுத்துள்ளது. இதன்மூலம் பல ஆண்டுகளாக வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
இதுபோன்ற பல தவறான அம்சங்கள் இந்த மசோதாவில் உள்ளன. வக்பு சொத்துக்கள் அனைத்தும் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டங்களை உருவாக்கியுள்ளது. ஆக்கிரமிப்பு சொத்துக்களை அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து இருப்பர்களின் கட்டுப்பாட்டிலேயே கொடுத்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏராளமான வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மேடையில் அமர்ந்துள்ள தலைவர்கள் மிகவும் சிறப்பான முறையில் விளக்கமாக கூறி இருக்கிறார்கள். எனவே நான் அதுகுறித்து விரிவாக பேச விரும்பவில்லை. தற்போது அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத் திருத்த மசோதா மூலம், வக்பு சொத்துக்கள் குறைந்த விலைக்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவிடும். சந்தை விலைக்கு ஏற்ப வக்பு சொத்துக்களை விற்கும் வகையில் சட்டம் உருவாக்கப்படவில்லை.
வக்பு சொத்துக்களை அதிகளவு ஆக்கிரமிப்பு செய்து இருப்பது யார் என கேள்வி எழுப்பினால், அதற்கு அரசு என்று தான் பதில் கிடைக்கும். டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில், வக்பு சொத்துக்களை அரசு ஆக்கிரமிப்பு செய்துள்ளது. சச்சார் குழு கூட இதனை உறுதி செய்துள்ளது. வக்பு சொத்துக்கள் அரசு ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில், தற்போது அரசு என்ன சொல்கிறது. ஒரு வக்பு சொத்தை அரசு பயன்படுத்தி வந்தால், அது அரசு சொத்தாகவே கருதப்படும். அதை வக்பு சொத்தாக கருதக் கூடாது என தற்போது அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் இருக்கும் வக்பு சட்டத்தில் ஒரு வக்பு சொத்தை அரசு அனுபவித்து வந்தாலும், அது அரசு சொத்தாக கருதப்பட மாட்டாது. வக்பு சொத்தாகவே கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. வக்பு சொத்துக்கள் குறித்து ஆதாரப்பூர்வாக நிரூபிக்கப்பட்டாலும், அது அரசின் கையில் இருந்தால், வக்பு சொத்தாக கருதப்பட மாட்டாது என தற்போது புதிய சட்டத் திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆக்கிரமிப்பு அனைத்தையும் தங்கள் கைகளிலேயே வைத்துக் கொள்ள அரசு திட்டமிட்டு காரியங்களை ஆற்றி வருகிறது.
எனவே தான் முந்தைய முக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாம் சில திருத்தங்களை கொண்டு வந்து, வக்பு சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்தோம். ஆனால் தற்போது அநீதிக்கு எதிராக பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, வக்பு வாரிய சொத்துக்களை கைப்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வக்பு வாரியத்தில் மற்றவர்கள்:
தற்போது நடைமுறையில் இருக்கும் வக்பு சட்டத்தில், வாரியத்தில் உறுப்பினர்களாக முஸ்லிம்கள் மட்டுமே இருக்க வேண்டும் என விதி இருக்கிறது. செயல் அலுவலர் கூட முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பது விதியாகும். தற்போது பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களில் இந்த விதிகள் அனைத்தும் உடைக்கப்பட்டுவிட்டன. வக்பு வாரியத்தில் முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்றும் முஸ்லிம் அல்லாத இரண்டு பேர் உறுப்பினர்களாக இருக்கலாம் என்றும் விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றி, வக்பு சொத்துக்களை அனைத்தையும் கைப்பற்றி தங்களது சொத்துக்களாக மாற்றிக் கொள்ள அவர்கள் முயற்சிகளை தொடங்கி இருக்கிறார்கள்.
அநீதிக்கு எதிராக தொடர் போராட்டம்:
எனவே, நாம் தொடர்ந்து போராட வேண்டும். அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும். வக்பு சொத்துக்களை கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் உறுதியாக போராடி, அரசுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர்ந்து வக்பு சொத்துக்களை பாதுகாக்க குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். நாடாளுமன்றத்தில் மட்டும் நாம் குரல் எழுப்பவில்லை. ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சிகளிடமும் நாம் ஆலோசனைகளை மேற்கொண்டோம். இதுதொடர்பாக கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சரை சந்தித்து நாம் ஆலோசனை செய்தோம். இந்த ஆலோசனை மிக நல்ல முறையில் இருந்தது. அவர் வக்பு சொத்துக்கள் குறித்து நல்ல புரிதலுடன் இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட ஜார்க்கண்ட் முதலமைச்சர் மிகச் சிறந்த முறையில் பா.ஜ.க.வின் சதித்திட்டங்களை உணர்ந்துகொண்டு, எங்களிடம் நீண்ட நேரம் பேசியது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
இதேபோன்று மதசார்பின்மை கொள்கையில் உறுதிகொண்ட, ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளுடன் நாங்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அதன்மூலம் வக்பு சொத்துக்களை பாதுகாக்க நாங்கள் உறுதியுடன் போராடுவோம். இதுதொடர்பான பல அறிவிப்புகளை எங்களது தலைமை அறிவிக்கும்.
ஒவ்வொருவரின் கடமை:
வக்பு சொத்துக்களை பாதுகாப்பது என்பது ஒரு கடமையாகும். அதில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது. அதில் எந்தவித சக்தியும் நம்மை தடுத்து நிறுத்த முடியாது. அத்துடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களிடமும் நாங்கள் ஆலோசனை நடத்த வேண்டும். கருத்துகைள எடுத்துக் கூற வேண்டும். இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும். இந்த அற்புதமான கருத்தரங்கை ஏற்பாடு செய்த தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளுக்கு என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இ.டி.முஹம்மது பஷீர் பேசினார்.
-சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்