Wednesday, September 4, 2024

டாக்டர் யாஹ்யா......!

"நேர மேலாண்மை மற்றும் அர்ப்பணிப்பு பண்புகளை கற்பித்த ஆசிரியர்கள்"

- ஆசிரியர்களுக்கு புகழாரம் சூட்டும் டாக்டர் யாஹ்யா -

தமிழகத்தின் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் டாக்டர் ஜி.எம். யாஹ்யா, அண்மையில்  தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலியின் தாய்வழி மாமாவான டாக்டர் யாஹ்யா, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருந்தியல் துறையில் பேராசிரியராக இருந்த இவர், இன்று புகழ்பெற்று விளங்கும் பல மருத்துவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். மருத்துவத்துறையில் சாதனை புரிந்துவரும் பலர், யாஹ்யாவின் மாணவர்கள் என்று தங்களை பெருமையுடன் கூறி மகிழ்ச்சி அடைகிறார்கள். 

சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் பணியாற்றிய அவர், ஆகஸ்ட் 1982 இல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் டீனாக ஓய்வு பெற்றார். ஜி.எம்.யாஹ்யாவின் வாழ்க்கைப் பாதை பயணம், பல நல்ல அனுபவங்களை தந்த பயணமாக இருந்துள்ளது. சமீபத்தில் 100 வயதை எட்டிய யாஹ்யா, இளம் தலைமுறையினருக்கு ஒரு வளமான அனுபவமாக இருந்து வருகிறார். 

அரசு கல்வி நிறுவனங்களில் படிப்பு:

சென்னையில் கடந்த 1924, ஆகஸ்ட் 24ஆம் தேதி  பிறந்த யாஹ்யா, 5 ஆம் வகுப்பு வரை மாநகராட்சிப் பள்ளியில் படித்து, உயர்நிலைப் பள்ளியை மதரஸா-இ-ஆஜாமிலும், இடைநிலைப் படிப்பை முகமதியன் கல்லூரியிலும் முடித்தார். பின்னர், 1944ஆம் ஆண்டில் அவர், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அவருடைய பெற்றோர்கள் கல்லூரியில் நுழைவதற்கு முன்பே யாஹ்யாவிற்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால்,  அவர் காதல் என்ற வலையில் சிக்கி, தானே ஒரு பொருத்தத்தைக் கண்டுபிடித்துவிடுவார் என்று யாஹ்யாவின் கவலைப்பட்டனர். எனவே, கல்லூரியில் சேருவதற்கு முன்பே திருமணம் செய்துவிட்டு, தங்களுடைய மகனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் ஒளியையும் அவர்கள் ஏற்றி வைத்தனர்.  டாக்டர் யாஹ்யாவிற்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர். 

வாழ்க்கை நெறிமுறை:

தன்னுடைய வாழ்க்கை பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ள டாக்டர் யாஹ்யா, தாம் ஒரு சாதாரண மாணவன் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் 60 சதவீதம் அளவுக்கு மட்டுமே மதிப்பெண்களை பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். அப்போது கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு முறை நடைமுறையில் இருந்ததால், தமக்கு சென்னை மருத்துவக் கல்லுரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தாக கூறும் அவர், தற்போது 99 சதவீத மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் கூட, மருத்துவப் படிப்புகளில் சேருவது மிகவும் கடினமாக மாறிவிட்டது என வேதனை தெரிவிக்கிறார். 

நூறு வயதை எட்டியபோதிலும், மிகவும் உற்சாகமாக இருக்கும் யாஹ்யா, தினமும் நடைப்பயிற்சி செய்வதை நிறுத்தவில்லை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹாலில் தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்ததாக கூறும் அவர், தற்போது 15 நிமிடங்கள் மட்டுமே நடைப்பயிற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறார். வாழ்க்கையில் ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் இருக்க நடைப்பயிற்சி மிகவும் உதவுகிறது என்றும் யாஹ்யா பெருமையுடன் கூறி மகிழ்ச்சி அடைகிறார். 

ஆசிரியர்களுக்கு மரியாதை:

ஒரு நூற்றாண்டைச் சேர்ந்த கல்வியாளர் டாக்டர் யாஹ்யா, தன்னுடைய ஆசிரியர்களை இப்போதும் பெருமையுடன் நினைவுக்கூர்ந்து மகிழ்ச்சி அடைகிறார்.  தனது ஆசிரியர்கள் தமக்கு நேர மேலாண்மை மற்றும் அர்ப்பணிப்பு பண்புகளை மிக அழகான முறையில் கற்பித்தார்கள் என்று கூறி மகிழ்ச்சி அடையும் அவர், டாக்டர் சதாசிவம், டாக்டர் ஏ.வேணுகோபால், டாக்டர் ரத்தினவேலு சுப்ரமணியம் போன்ற தன்னுடைய அருமையான ஆசிரியர்களை நினைவுக்கூர்ந்து, அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருந்தாகவும், அதன்மூலம் தன்னுடைய வாழ்க்கையில் நல்ல மறுமலர்ச்சி ஏற்பட்டதாகவும் கூறுகிறார். 

தன்னுடைய ஆசிரியர் டாக்டர் ரத்தினவேலு சுப்ரமணியம் எழுதிய மருத்துவ நூல் ஒன்று, மருத்துவ மாணவர்களுக்கு நல்ல பயன் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் அதைப் படித்து தாம் பல மருத்துவக் குறிப்புகளை அறிந்துகொண்டதாகவும் யாஹ்யா தெரிவிக்கிறார். பேராசிரியர் டாக்டர் ஈஸ்வரய்யா என்ற ஆசிரியரிடம் இருந்து மருந்தியல் குறித்து ஏராளமான தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாக அவர் பெருமை அடைகிறார். 

நல்ல ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுக்கும்போது, தங்களிடம் எப்போதும் குறிப்புகளை வைத்துக் கொண்டு இருப்பது இல்லை. பாடம் நடத்துவதற்கு முன்பே அனைத்துக் குறிப்புகளை மனதில் எழுதி வைத்துக் கொண்டு, வகுப்புக்கு வந்து பாடம் நடத்துகிறார்கள் என்பதையும் தாம் தன்னுடைய ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மூலம் அறிந்துகொண்டதாக யாஹ்யா தெரிவிக்கிறார். 

தன்னுடைய ஆசிரியர் கே.ராமசந்திரன், அனைத்துப் பாடங்களையும் மறுசூழச்சி முறையில் கூறுவதை அறிந்து தாம் வியப்பு அடைந்தாகவும், இதேபோன்று டாக்டர் மோகன் ராவ், மிகச் சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். 

மாணவர்களுக்கு கற்பித்தல்:

ஆசிரியர் என்ற முறையில், தம்முடைய மாணவர்கள் அனைவரும் நல்ல ஞானம் உள்ள மாணவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் திருப்தி அடையும் வகையில் பாடங்களைச் சொல்லித் தர வேண்டும் என தாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு அதன்படி, செயல்பட்டதாக கூறும் டாக்டர் யாஹ்யா,  ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத்தை மாணவர்கள் கவனத்துடன் கேட்டால், அதன்மூலம் நல்ல அறிவு கிடைத்து, அதை செயல்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கிறார். தம்முடைய ஆசிரியர்களை போன்று தாமும் வகுப்பிற்குள் செல்லும்போது, குறிப்புகளை எதையும் எடுத்துக் கொண்டு செல்வதில்லை என்கிறார் டாக்டர் யாஹ்யா. பென்சிலின் பயன்படுத்துவது குறித்து தன்னுடைய மாணவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் யாஹ்யா, நோயாளிகளின் உடல்நிலையை பரிசோதிக்காமல், பென்சிலின் பயன்படுத்தக் கூடாது என்றும், இதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். 

மருத்துவத்துறையில் அனுபவம்:

டாக்டர் யாஹ்யா, தன்னுடைய மருத்துவ வாழ்க்கையை சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து தொடங்கியுள்ளார். மருத்துவ ஆசிரியர், உதவி பேராசிரியர் என தன்னுடைய வாழ்க்கைப் பயணம் தொடங்கிய அவர், பின்னர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தார். பின்னர், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறை தலைவராக தாம் நியமிக்கப்பட்டதாகவும், அங்கு தாம் முதல் நாள் வகுப்பிற்கு சென்றபோது, அந்த வகுப்பு மாணவர்களால் நிறைந்து இருந்தாகவும் அவர் நினைவுக் கூறி மகிழ்ச்சி அடைகிறார். 

தம்மை  ஒரு சிறந்த பேராசிரியராக மாணவர்கள் முன்னரே அறிந்து இருந்தாகவும் எனவே, தம்மை ஆவலுடன் காணவும், தம்முடைய பாடம் சொல்லும் முறையை அறிந்துகொள்ளவும், திரளாக வந்து இருந்தாக பின்னர் தாம் அறிந்தபோது, தமக்கு பெருமை ஏற்படதாகவும் யாஹ்யா கூறுகிறார். அப்போதைய மாணவர்கள் அனைவரும் சுகாதாரத்துறை அமைச்சருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். ஆசிரியர் நல்ல முறையில் பாடம் நடத்தவில்லை எனில், அதுகுறித்து அமைச்சரிடம் புகார் அளித்து விடுவார்கள் என்றும் அவர் நினைவுக்கூறுகிறார். 

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறை தலைவராக இருந்தபோது, சக பேராசிரியர் கிஜர் அஹ்மதுடன் இணைந்து சர்க்கரை நோயாளிகளை குணப்படுத்த தேவையான மருந்துகளை கண்டுபிடிக்க ஆராய்ச்சியில்  டாக்டர் யாஹ்யா ஈடுபட்டார். டாக்டர் யாஹ்யாவின் பணிகள் குறித்து  நினைவுக்கூறும் அறுவைச் சிகிச்சை மருத்துவர் முஹம்மது ரிலா, கடந்த 1977-78 ஆண்டில் யாஹ்யா மருந்தியல் குறித்து தமக்கு பாடம் நடத்திய ஒரு ஜென்டில்மேன் என்று புகழாரம் சூட்டுகிறார். மேலும், தாம் சந்தித்த பேராசிரியர்களில் டாக்டர் யாஹ்யா ஒரு சிறந்த பேராசிரியர் என்றும் நேர மேலாண்மையை தவறாமல் கடைப்பிடிக்கும் குணம் அற்புதமான மனிதர் என்றும் பெருமை அடைகிறார். இதுபோன்ற அருமையான குணம் கொண்ட பேராசிரியர்களை தற்போதை காண்பது அரிது என்றும், மருத்துவ மாணவர்களுக்கு மருந்துவியல் பாடம் நடத்துவது சுலபம் இல்லை என்றும், அந்த பாடத்தை மாணவர்கள் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் டாக்டர் யாஹ்யா சொல்லி தந்து மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியுள்ளார். அதன் காரணமாக டாக்டர் யாஹ்யாவின் பணிகளை அவரது மாணவர்கள் இன்னும் நினைவுக்கூர்ந்து மகிழ்ச்சி அடைகிறார்கள். 

டாக்டர் யாஹ்யா ஒரு கண்டிப்பான பேராசிரியர் என்றாலும், மாணவர்களுக்கு எப்போதும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்துள்ளார். வகுப்பிற்கு குறைந்த நாட்கள் வந்ததால், சில மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் செய்தபோது, டாக்டர் யாஹ்யா, தம்முடைய அற்புதமான பணிகள் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு, மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு உருவாக்கினார். இந்த பணி, பல மருத்துவ மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது. இதை இன்று மருத்துவர்களாக உள்ள பலர் நினைவுக்கூர்ந்து மகிழ்ச்சி அடைகிறார்கள். 

- நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ்

- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: