Sunday, September 1, 2024

முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அழைப்பு....!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா விவகாரம்:

நாட்டு மக்கள் அனைவரும் கருத்துகளை அனுப்பி வைக்க 

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அழைப்பு....! 

டெல்லி, செப்.2- வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து பொதுமக்கள், சமூக அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்றக் கூட்டுக் குழு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், முஸ்லிம்கள் அனைவரும் தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மூலம் அனுப்ப வேண்டும் என அந்த வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. 

வேண்டுகோள்:

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து பொதுமக்கள் 15 நாட்களுக்குள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்றக் கூட்டுக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். 

இந்நிலையில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மௌலானா ஃபஸ்லுர் ரஹீம் முஜாதிதி அறிவிப்பு (31.08.2024) ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பான கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக் குழு தெரிவித்து இருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த நேரத்தில், நாட்டின் குடிமகன் என்ற வகையில் தங்கள் கருத்துகள் ஜே.பி.சி.க்கு (நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு) அனுப்பி வைப்பது அனைவரின் பொறுப்பு என்று கூறியுள்ள மௌலானா ஃபஸ்லுர் ரஹீம், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் மூலம் இந்த விஷயத்தில் வலுவான, தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த கருத்தை தெரிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, முஸ்லிம்கள் அனைவரும் தமது சமய மற்றும் நம்பிக்கைப் பொறுப்பை விழித்துக்கொண்டு அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

கருத்துகள் அனுப்ப வேண்டிய முறை:

நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு (JPCக்கு) கருத்தை அனுப்ப https://tinyurl.com/is-no-waqf-amendment என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். இணைப்பு வேலை செய்யவில்லை என்றால், அதை Google Chrome-இல் நகலெடுத்து ஒட்ட வேண்டும். இணைப்பு திறந்த பிறகு ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் ஓபன் ஜிமெயில் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். ஜிமெயிலைத் திறந்து அனுப்பு பொத்தானைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் கருத்துகள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை (JPC-ஐ) அடையும் என்று கருத்துகள் அனுப்பும் முறை குறித்து மிகத் தெளிவாக மௌலானா ஃபஸ்லுர் ரஹீம் முஜாதிதி விளக்கியுள்ளார். 

கருத்துகளை உடனே அனுப்ப வேண்டும்:

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து 15 நாட்களுக்குள் கருத்துகளை அனுப்ப வேண்டும் என நாடாளுமன்றக் கூட்டுக் குழு அழைப்பு விடுத்து இருப்பதால், முஸ்லிம்கள் அனைவரும் தங்களது கருத்துகளை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மூலம் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இதன்முலம் வக்பு வாரியத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர ஆட்சியாள்ர்கள் மூலம் செய்யப்படும் முயற்சிகளை தடுத்தி நிறுத்த வேண்டும். 

===============================

No comments: