Wednesday, September 11, 2024

அறிவுறுத்தல்....!

ஹஜ் பயணிகளின் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து வழங்க வேண்டும்...!

அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவுறுத்தல்....!

புதுடெல்லி, செப்.12-ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் இஸ்லாமியர்களின் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஹஜ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. 

வரும் 2025ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகளை இந்திய ஹஜ் கமிட்டி ஏற்கனவே தொடங்கி, விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொண்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை அளிக்க வரும் 23ஆம் தேதி கடைசி நாள் என அண்மையில் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்து இருந்தது. இதையடுத்து, ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் இஸ்லாமியர்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்து வருகிறார்கள். 

பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு அறிவுரை:

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு இந்திய ஹஜ் கமிட்டி சுற்றறிக்கை ஒன்றை கடந்த 11.09.24 அன்று அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில், ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நோக்கத்தில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்துள்ள முஸ்லிம்களின் விண்ணப்பங்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, உடனடியாக பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்துள்ள அனைவரின் பாஸ்போர்ட்களையும் வரும் 23ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அத்துடன் ஜனவரி 1, 2026 ஆண்டு வரை செல்லத்தக்க வகையில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அதிக முன்னுரிமை:

ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பம் செய்துள்ள முஸ்லிம்களின் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது தனி மற்றும் அதிக முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், காவல்துறையினரின் விசாரணை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, எந்தவித காலதாமதம் இல்லாமல் உரிய நேரத்தில் பாஸ்போர்ட கிடைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது. புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள கடைசி நேரத்தில் பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பம் செய்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையை இந்திய ஹஜ் கமிட்டி அனுப்பி வைத்துள்ளது. 

==============================

No comments: