Wednesday, September 18, 2024

வக்பு சட்டத் திருத்த மசோதா - 2024....!

வக்பு சட்டத் திருத்த மசோதா - 2024 ஆலோசனைகளும் - ஆட்சேபனைகளும் என்ற கருத்தரங்கத்தை முஸ்லிம் சமுதாயம் தான் நடத்துகிறது....!

ஆட்சியாளர்கள் தெளிவுப்பெற வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படுகிறது...!!

சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு:

சென்னை, செப்.18- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வரும் 27ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் "வக்பு சட்ட திருத்த மசோதா - 2024 ஆலோசனைகளும் - ஆட்சேபனைகளும்" என்ற பெயரிர் மாபெரும் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. இந்த கருத்தரங்கத்தை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையகமான காயிதே மில்லத் மன்ஸிலில் 18.09.2024 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையின் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், சென்னை மண்டலத்திற்கு பட்ட மாவட்ட நிர்வாகிகள், முஸ்லிம் மாணவர் பேரவை, முஸ்லிம் யூத் லீக், இந்திய யூனியன் மகளிர் லீக், சுதந்திர கிசான் சங்கம், வழக்கறிஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, அகில இந்திய கேஎம்சிசி பிரவாசி லீக் ஆகிய அணிகளின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூக்கர் வரவேற்று பேசினார். அப்போது, கருத்தரங்களை வெற்றிகரமாக நடத்துவது குறித்து அனைவரும் ஆலோசனையும் கருத்துகளையும் அளிக்கலாம் என அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி, கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களுடைய ஆலோசனையும் கருத்துகளையும் வழங்கினார்கள். இறுதியில்  தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நிறைவுரை ஆற்றினார். 

கே.எம்.கே. உரை:

வக்பு சட்டத் திருத்த மசோதா 2024 ஆலோசனைகளும் - ஆட்சேபனைகளும் என்ற பெயரில் வரும் 27ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நாம் மாபெரும் கருத்தரங்கம் ஒன்றை நடத்த இருக்கிறோம். இந்த கருத்தரங்கம் மிகவும் பயன் உள்ளதாக  இருக்க வேண்டும். அதன்மூலம் சமுதாயம் பயன் அடைய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற மாபெரும் கருத்தரங்கம் நடத்த வழிவகை பிறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது நாம் ஆலோசனை நடத்திக் கொண்டு இருக்கிறோம். 

வக்பு சட்டத் திருத்த மசோதா 2024 கருத்து கருத்தரங்கம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற யோசனை நடக்கும் தோன்றியபோது, நாம் தேசிய அளவில் புகழ்பெற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரகுமான் கானை தொடர்பு கொண்டு அவரிடம் ஒப்புதல் பெற்றோம். இதேபோன்று, கேரள மாநில தலைவர்களை தொடர்பு கொண்டு அவர்களிடமும் ஒப்புதல் பெற்று கருத்தரங்கம் நடத்துவதற்காக பணிகளை தொடங்கினோம். தற்போது கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்துவது குறித்து உங்களிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு இருக்கிறோம். 

நீங்கள் இங்கே சொல்லிய ஒவ்வொரு கருத்துகளும், ஆலோசனைகளும் மிகவும் அற்புதமான ஆலோசனைகளாக உள்ளன. அவற்றை உள்வாங்கிக் கொண்டு, கருத்தரங்கை வெற்றி கருத்தரங்கமாக மாற்றி அமைக்க முயற்சிகளை மேற்கொள்வோம். இந்த கருத்தரங்கின் மூலம் புதிய வரலாற்றை படைப்போம். தமிழ்நாட்டில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றாலும், இந்திய அளவில் நம் சமுதாயத்திற்கு பயன் கிடைக்கும் வகையில் இது அமையும். 

மாநில அமைப்பு நடத்தும் கருத்தரங்கம்:

இந்த கருத்தரங்கை அகில இந்திய முஸ்லிம் லீக் அமைப்பு நடத்தவில்லை. மாறாக மாநில அமைப்பு தான் நடத்துகிறது. அகில இந்திய தலைவர்களை அழைத்து கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இதன்மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும், வக்பு சட்டம் குறித்து தெளிவு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் நடத்தப்படுகிறது. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது ஒரு அரசியல் கட்சியமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால், இ.யூ.முஸ்லிம் லீக் அரசியல் கட்சியாக இருந்தாலும், அது ஒரு இயக்கமாக செயல்படுகிறது. ஆங்கிலத்தில்  Movement என்று சொல்வார்கள். அந்த ஆங்கில சொல்லிற்கு ஏற்ப இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து ஒரு இயக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இயக்கம் என்றால் தீவிரவாத இயக்கம் கிடையாது. மிதவாத இயக்கமும் கிடையாது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது ஒரு இதமான இயக்கமாகும். நாட்டில் வாழும் 25 கோடி முஸ்லிம்களுக்கும் சரியான வழிக்காட்டும் ஒரு இயக்கமாகும். 

சமுதாயத்திற்கு வழிக்காட்டுகிறது:

ஒரு ஊரில் ஒரு முஸ்லிம் இருந்தால் கூட, அவரின் மூலம் இ.யூ.முஸ்லிம் லீக் சமுதாயத்திற்கு வழிக்காட்டிக் கொண்டிருக்கிறது. உலமாக்கள், இமாம்கள் போன்றவர்கள் இந்த இயக்கத்திற்கு நல்ல ஆலோசனைகளை தந்து வழிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது 25 கோடி இந்திய முஸ்லிம்களின் ஒரே பிரதிநிதித்துவ இயக்கமாகும். அது சரியான வழியை முஸ்லிம் சமுதாயத்திற்கு காட்டுகிறது. தமிழக்ததில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மஹல்லா ஜமாத், மஸ்ஜித் மற்றும் ஜமாத் மூலம் இணைந்து இருக்கிறார்கள். இந்த ஜமாத்துகளை அடிப்படையாகக் கொண்டு, சமுதாயத்திற்கு இ.யூ.முஸ்லிம் லீக் சேவை ஆற்றிக் கொண்டிருக்கிறது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் மஹல்லா ஜமாத் என்ற அமைப்புகள் இல்லை. ஆனால், ஒவ்வொரு ஊரின் பேரில் ஜமாத்கள் இயங்கி வருகின்றன. 

இந்த ஜமாத்களை அடிப்படையாகக் கொண்டு, நாம் பணிகளைச் செய்ய வேண்டும். அப்படி செயல்படாவிட்டால், நம்முடைய முயற்சிகள் பலன் அளிக்காது. எனவே, பெரிய நகரங்களில் முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் மிகப்பெரிய அளவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். மஹல்லா ஜாமத் மற்றும் உலமாக்களின் ஆலோசனைகளைக் கேட்டு நாம் நடக்க வேண்டும். உலமாக்களின் ஆதரவு எப்போதும் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு இருந்து வருகிறது. அதன்படி தான் கருத்தரங்கில் கலந்துகொள்ள ஜமாத்துல் உலமா முடிவு செய்துள்ளது. அதன் தலைவர் பி.ஏ.காஜா முயினுத்தீன் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். மேலும் ஏராளமான உலமாக்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 

சமுதாய நன்மைக்காக கருத்தரங்கம்:

சமுதாயத்திற்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த கருத்தரங்கை நாம் நடத்த உள்ளோம். அதன்மூலம் சமுதாயத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும். சமுதாயம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சமுதாயத்திற்கு எதிரான அம்புகளை தடுத்த நிறுத்த வேண்டும். சமுதாயம் எப்போதும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அந்த உயர்ந்த நோக்கில் தான் நாம் கருத்தரங்கை நடத்துகிறோம். எனவே ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் திரளாக மக்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். 

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அகில இந்திய உலமா சபை இருந்த நிலையில், முஸ்லிம் லீகிற்கு ஆதரவு தமிழகத்தில் உலமாக்களின் சபை இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கடந்த 1958ஆம் ஆண்டு ஜமாத்துல் உலமா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி, எப்போதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஜமாத்துல் உலமா ஆதரவாக இருந்து வருகிறது. அவர்களின் ஆலோசனைகள் எப்போதும் எங்களுக்கு துணையாக இருந்து வருகின்றன. 

ஏக இறைவனான அல்லாஹ்வின் துணைக் கொண்டு நாம் இந்த கருத்தரங்கை நடத்துகிறோம். இறைவனின் பெயரால் நடத்தப்படும் எந்த நிகழ்ச்சியும் தோல்வி அடைந்தது கிடையாது. நிச்சயம் வெற்றி கிடைத்தே தீரும். அதன்படி, நாம் நடத்தும் கருத்தரங்கமும் நிச்சயம் வெற்றி அடையும். 

முஸ்லிம் சமுதாயம் நடத்தும் கருத்தரங்கம்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே இந்த கருத்தரங்கை நடத்தவில்லை. முஸ்லிம் சமுதாயம் தான் இந்த கருத்தரங்கை நடத்துகிறது. சமுதாயமும், ஆட்சியாளர்களும் தெளிவுப்பெற வேண்டும் என உயர்ந்த எண்ணத்தில் நாம் நடத்தும் இந்த கருத்தரங்கம் நிச்சயம் வெற்றி கருத்தரங்கமாக இருக்கும். இதன்மூலம் சமுதாயத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும். எதிர்காலத்தில் எந்தவித தடைகளும் வராமல் பாதுகாக்க முடியும். சமுதாயத்திற்கு வரும் எதிர்ப்புகளை கண்டு மவுனமாக இருந்தால், எதிர்கால சந்ததிகள் நம்மை குறைவாக மதிப்பிட வாய்ப்பு உருவாகி விடும். எனவே தான், தற்போது எழுந்துள்ள சிக்கல்களை தீர்வு, சமுதாயம் சந்திக்கும் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. நாம் எதிர்ப்பு காட்டாமல் இருந்தால், நம்முடைய இளம் சமுதாயம் நாளை நம்மை மிகவும் கேவலமாக பார்க்கும். இதை கவனத்தில் கொண்டு, வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பாக நடத்தப்படும் இந்த கருத்தரங்கம் வெற்றி கருத்தரங்கமாக அமைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அதற்காக பணியாற்ற வேண்டும். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். 

சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=====================


No comments: