Monday, September 9, 2024

வக்பு சொத்துக்கள்....!

"அமானிதமான வக்பு சொத்துக்களை பாதுகாப்பது முஸ்லிம்களின் கடமை" 

- இறைவன் வழங்கிய பொறுப்புகுறித்து பதில்சொல்லியே ஆக வேண்டும் -

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மூலம், ஒரு கூட்டம் வக்பு சொத்துக்கள் மீது தற்போது குறிவைத்துள்ளது. அதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளை எதிர்த்து, பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், சமூக நலச் சிந்தனையாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். அத்துடன், மசோதா தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு சிறப்பான ஆலோசனைகள், கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

இதுஒருபுறம் இருக்க, வக்பு சொத்துக்கள் மீது முஸ்லிம்களே குறிவைத்து, அதை அபகரித்து வருவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அமானிதமான வக்பு சொத்துக்களை அபகரிப்பது முறையல்ல, மாறாக அதை பாதுகாப்பது தான் ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும். அத்துடன் ஒருவருக்கு ஒரு பதவி அல்லது பொறுப்பை ஏக இறைவன் கொடுத்தால், அதை மிகச் சிறப்பான முறையில் நிறைவேற்ற வேண்டும். இறைவன் வழங்கிய பொறுப்பு குறித்து நாளை மறுமை நாளில், பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற சிந்தனை, பதவி அல்லது பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்களின் உள்ளத்தில் இருக்க வேண்டும். 

இத்தகைய சூழ்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசில், வீட்டு வசதி மேம்பாடுத்துறை அமைச்சராக இருக்கும் பி.இசட்.ஜமீர் அகமது கான்,  அண்மையில் வக்பு சொத்துக்கள் தொடர்பாக ஆற்றிய உரை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜமீர் அகமது கான் மற்றும் அவரது செயல்பாடுகள், பணிகள், உரைகள் குறித்து முஸ்லிம் சமுதாயம் அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். 

ஜமீர் அகமது கான்:

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 1966ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் ஒன்றாம் தேதி பிறந்த ஜமீர் அகமது கான், சாம்ராஜ்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். நேஷனல் டிராவல்ஸ் நிறுவனத்தை நிறுவிய பிபி பஷீர் அகமது கான், 1950களின் முற்பகுதியில் இறந்த பிறகு, அவரது மூத்த மகன் பி அதாவுல்லா கான் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார், அதைத் தொடர்ந்து அவரது சகோதரர்கள் பி ஜியாவுல்லா, பி சனாவுல்லா, பி அன்வருல்லா, பி ரஹ்மத்துல்லா, பி நூருல்லா மற்றும் பி சிராஜுல்லா. அவர்களைத் தொடர்ந்து பி அதாவுல்லா கான் மற்றும் அவரது சகோதரர்கள் தலைமையிலான மூன்றாம் தலைமுறையினர் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இத்தகைய பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த ஜமீர் அகமது கான், எப்போதும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதை தனது கடமையாகவும், பொறுப்பாகவும் நினைத்து வருகிறார். 

முஸ்லிம் சமுதாயம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு கண்டு வரும் ஜமீர் அகமது கான், வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து அருமையான கருத்துகளை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடைபெற்ற வக்பு வாரிய சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், வக்பு சொத்துக்கள் விவகாரத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஏக இறைவனுக்கு பயந்து நடத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  வக்பு சொத்துக்கள் ஒரு அமானிதம் என்றும் அதை சரியான முறையில் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், "ஒருவருக்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டால், பதவி கிடைத்தால், அந்த பதவியை சிறப்பான முறையில் பயன்படுத்தி, பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். மாறாக, தவறான முறையில் பயன்படுத்தினால், ஏக இறைவனுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. 

ஆக்கிரமிப்பு ஆகற்ற வேண்டும்:

வக்பு சொத்துக்கள் என்பது ஏக இறைவனின் சொத்துகளாகும். இதை புரிந்துகொண்டு, எந்தவித முறைகேடுகளில் யாரும் இறங்கக் கூடாது. ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது. ஆக்கிரமிப்பு செய்து இருந்தால், உடனே அதை கைவிட்டு, வக்பு வாரியத்திடம் கொடுத்து விட வேண்டும். மனதில் ஏற்படும் ஊசலாட்டங்களை கைவிட்டு, வக்பு சொத்துகளில் இருந்து ஒரு பைசா கூட சாப்பிடக் கூடாது. அடுத்த நொடியில் நமக்கு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். 

நாம் செய்யும் தவறுகளுக்கு நாம் தான் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்ல நம்முடன் மற்றவர்கள் யாரும் வர மாட்டார்கள். எனவே, வக்பு சொத்துக்களை எப்படி பாதுகாப்பது, ஏழை, எளிய மக்களுக்கு எப்படி, அதன் பயன்களை கொண்டு சேர்ப்பது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். சரியான முறையில் வக்பு சொத்துக்களை பாதுகாத்து, பராமரிக்க உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் கர்நாடகா காங்கிரஸ் அரசு தனது பணிகளை செய்து வருகிறது. வக்பு வாரியத்தின் சொத்துக்கள் என்பது சமுதாயத்திற்கு நன்மை செய்வதற்காக வக்பு செய்யப்பட்ட சொத்துக்கள் என்பதை நாம் அனைவருக்கும் எடுத்துக் கூறி வருகிறோம். அந்த வகையில் நடவடிக்களை எடுத்து வருகிறோம். அதன்மூலம் ஆக்கிரமிப்புகளை தடுத்து வருகிறோம். 

தீர்வு காண முயற்சி:

ஆக்கிரமிப்பு எங்கே நடந்துள்ளது? என்பன போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வக்பு சொத்துக்களை பாதுகாக்க நாம் அனைவரும் உரிய முறையில் பணியாற்ற வேண்டும். அந்த வகையில் நானும் என்னுடைய கடமையை ஏக இறைவனுக்கு பயந்து செய்து வருகிறேன். எனவே, நீங்கள் ஒவ்வொரு வேளையும் தொழுகை நடத்தும்போது, சமுதாயத்திற்கு மேலும் சிறப்புடன், துடிப்புடன் பணியாற்ற ஜமீர் அகமது கானுக்கு வலிமையும் சக்தியும் அளிக்க வேண்டும் என ஏக இறைவனிடம் துஆ கேட்க வேண்டும். பணம், புகழ் ஆகியவற்றை விட சமுதாயத்திற்கு சேவை செய்வது தான் எனக்கு பெருமை அளிக்கும், மறுநாளில் பயன் அளிக்கும்"

கர்நாடக மாநில முஸ்லிம் அமைச்சர் ஜமீர் அகமது கான் ஆற்றிய இந்த உரை மிகவும் எளிமையான உர்தூ மொழியில் இருந்தது. அதேநேரத்தில் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. வக்பு வாரிய சொத்துக்கள் எப்படி மீட்கப்பட வேண்டும்? பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஜமீர் அகமது கான் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். வக்பு சொத்துக்கள் விவகாரத்தில் அல்லாஹுக்கு பயந்தவர்களாக முஸ்லிம்களாக நாம் நடந்துகொள்ள வேண்டும். அத்துடன் வக்பு வாரிய பணிகளை முடக்கும் செயல்களையும் தடுத்த நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: