Saturday, September 7, 2024

பல கோடி பில்லியன் டாலர் இழப்பு....!

"உலக மக்கள் புறக்கணிப்பால் பல கோடி பில்லியன் டாலர் வருவாயை இழந்துவரும் வணிக நிறுவனங்கள்"

பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமிப்பு செய்துள்ள இஸ்ரேல், காஸாவில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று வருகிறது. இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெய்ர்ந்தும், காணாமலும் போயுள்ளனர். ரமலான் நெருங்கி வரும் நிலையில் கூட, காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அமைதி திரும்பக் கூடாது என்று இஸ்ரேல் பிடிவாதமாக உள்ள நிலையில், சர்வதேச சமூகம் இந்த பிரச்சினையில் எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல், தோல்வி அடைந்து வருகிறது. 

இஸ்ரேலின் பிடிவாதம், காஸா மீது தொடர் தாக்குதல் மற்றும் சர்வதேச சமூகத்தின் மௌனம் ஆகியவற்றைக் கண்டித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உலகெங்கிலும் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவானவர்கள், இஸ்ரேலின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக கடும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன், இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை புறக்கணித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய நிலையில், இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஸ்டார்பக்ஸ், மெக்டொனால்ட்ஸ், நெஸ்லே,கோகோ கோலா நிறுவனங்கள் ஆதரவு அளித்து வருவதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் வைரலானது. இதையடுத்து, பாலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்கள், ஸ்டார்பக்ஸ், மெக்டொனால்ட்ஸ், நெஸ்லே,கோகோ கோலா போன்றவற்றைப் புறக்கணித்து வருகின்றனர். 

நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு:

 ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில், பலஸ்தீன ஆதரவு எதிர்ப்பாளர்கள் பல உலகளாவிய பிராண்டுகளை புறக்கணித்து வருகின்றனர். இந்த மேற்கத்திய பிராண்டுகள் இஸ்ரேலை ஆதரிப்பது மட்டுமல்லாமல், தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் தனது இராணுவத்திற்கு ஆயுதங்களை வாங்கவும் பாலஸ்தீனியர்களை ஒடுக்கவும் முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என எண்ணத்தில் இத்தகைய புறக்கணிப்பு உலகம் முழுவதும் உள்ள மக்கள் தற்போது செய்து வருகிறார்கள். 

பெரிய வருவாய் இழப்பு:

பாலிஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் உலகளாவிய அளவில் தற்போது நடைபெற்றுவரும் இந்த புறக்கணிப்பால், இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் என குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்டார்பக்ஸ், மென்டொனால்டின், கோகோ கோலா, நெஸ்லே உள்ளிட்ட பல நிறுவனங்கள் பெரும் அளவுக்கு வருவாயை இழந்து, நெருக்கடிகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

ஸ்டார்பக்ஸ் நிறுவனம்:

இதுதொடர்பாக கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின் படி, ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 11 பில்லியன் டாலர் வருவாயை இழந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதத்தின் 19 நாட்களில், இந்த நிறுவனத்தின் லாபம் 96 புள்ளி 8 சதவீதம் குறைந்துள்ளது. இது அந்நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய இழப்பாகும். சில வாரங்களுக்கு முன்பு, பெருகிவரும் நஷ்டம் காரணமாக 2 ஆயிரம்  ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாததால், அவர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்தது. முக்கியமாக, பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில் அதன் "இஸ்ரேல் சார்பு" பார்வைகளால் பாதிக்கப்பட்ட ஒரே நிறுவனம் ஸ்டார்பக்ஸ் ஆகும். 

மெக்டொனால்டு:

மெக்டொனால்டின் விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கும் வழக்கத்தை விடவும் பெரும் அளவுக்கு குறைந்துள்ளது.  அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை வெறும் 7 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த பிராண்டின் முக்கிய சந்தைகளாக இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் சீனா உள்ளன. இந்த காலாண்டில் மெக்டொனால்டு 5 புள்ளி 5 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அக்டோபர் 2023இல் இஸ்ரேலிய வீரர்களுக்கு இலவச உணவு வழங்குவதாக மெக்டொனால்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

கோகோ கோலா:

கோகோ கோலா நிறுவனத்தின் பங்குகள் பெரும் அளவுக்கு சரிந்துள்ளன. 2023ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், கோகோ கோலாவின் பங்குகள் 7 சதவீதம் சரிந்து பில்லியன் கணக்கான டாலர்களை இழந்தன. ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இந்த பிராண்டை புறக்கணித்துள்ளன. கோகோ கோலா இஸ்ரேலை வெளிப்படையாக ஆதரிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்ரேல்-ஹமாஸ் போர், நுகர்வோர் பானங்களை வாங்கும் முறையை மாற்றியுள்ளதாக கோகோ கோலா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நெஸ்லே:

இதேபோன்று, நெஸ்லே நிறுவன தயாரிப்புகளின் விற்பனை கடும் சரிவு கண்டுள்ளது. பிப்ரவரி 2024- இல், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஃபிராங்கோயிஸ் ரோஜர், "இஸ்ரேல்-ஹமாஸ் போரின் காரணமாக மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் அதன் தயாரிப்புகளின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

பிற இஸ்ரேல் சார்பு பிராண்டுகள்:

பிற இஸ்ரேல் சார்பு பிராண்டுகளின் விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. யுனைடெட் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், இலாய் (ELAI) போயிங், ராயல் கரீபியன், பிஸ்ஸா ஹட், ஜாரா மற்றும் ஸ்நப்சார்ட் (Snapchat) உட்பட நூற்றுக்கணக்கான பிராண்டுகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இஸ்ரேல் சார்பு நிறுவனங்கள் வருவாயை இழந்து, தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டே இருக்கின்றன. 

இஸ்ரேல் சார்பு நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் உலகின் பல நாடுகளில் புறக்கணிக்கப்பட்டு, தொடர்ந்து சரிவு நோக்கிச் செல்லும் நிலையில், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலின் பகை இன்னும் குறையவில்லை. தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுதொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதால், இஸ்ரேல் சார்பு நிறுவனங்கள் மேலும் பெரிய வீழ்ச்சியையும், சரிவையும் சந்திக்கும் என வணிக வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: