Sunday, September 15, 2024

செய்யாதீர்கள்....!

சம்பளத்திற்காக வேலை செய்யாதீர்கள்....!

வாழ்க்கையில் நீங்கள் சாதிக்க வேண்டுமானால், கஷ்டப்பட்டு உழைப்பதால் மட்டுமே வெற்றி கிடைத்து விடாது. நீங்கள் உங்கள் இலட்சியத்திற்காக இஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். அப்போது தான் வெற்றி உங்களை தேடி வரும். உங்களிடம் உழைப்பு இருந்தால், நீங்கள் உழைக்க தயாராக இருந்தால், நிச்சயம் உலகம் உங்கள் பின்னால் ஓடி வரும். நீங்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற பக்தி மட்டுமே பயன் தராது. உழைப்பு, உழைப்பு என்ற எண்ணம் மட்டுமே எப்போதும் உங்கள் மனதில் இருக்க வேண்டும். 

சம்பளத்திற்காக மட்டுமே வேலை செய்தால், நிச்சயம் நீங்கள் வெற்றி பெறவே முடியாது. ஒரு நிறுவனத்தில் நீங்கள் சம்பளத்திற்காக உழைத்துக் கொண்டே இருந்தால், உங்கள் இலட்சியத்தை நோக்கி நகரவே முடியாது. எனவே சம்பளத்திற்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் உருவாக வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் தங்களுடைய நேர்மை, நியாயம் மூலம் மட்டுமே உயர்ந்து இருக்கிறார்கள். வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால், நிச்சயம் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது. 

தோல்விகளில் இருந்து பாடங்கள்:

வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமானால், தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தொழிலில் இறங்கும்போது, உடனே இலாபம் கிடைத்து விடாது. இதனால் வேதனை அடைந்து அந்த தொழிலில் இருந்து பின் வாங்கக் கூடாது. ஒரு மாதம் நஷ்டம் கிடைக்கும். அடுத்த மாதம் அந்த நஷ்டம் சிறிது குறையும். பின்னர், இலாபம் உங்களை தேடி வரும். எனவே, தொழில் இறங்கியவுடன் வெற்றியும், இலாபமும் கிடைத்து விடாது என்பதை உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். 

பல்வேறு கஷ்டங்களை சகித்துக் கொண்டு வாழ்ந்தால், நாணயத்தை கைவிடாமல் செயல்பட்டால், நிச்சயம் வெற்றி உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு யாருக்கும் அறிவு கிடையாது. உங்கள் மூளை சொல்லும் செய்தியை கேட்டு வாழ்க்கையில் செயல்படுங்கள். ஏக இறைவன் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிவை தான் தந்துள்ளான். அந்த ஆறறிவை நீங்கள் சிறப்பான முறையில் பயன்படுத்துவதில் தான், உங்களின் வெற்றியும், சாதனையும் அமையும். 

எப்போதும் எளிமையாக இருப்பது கவுரவக் குறைவு இல்லை. வாழ்க்கையில் தோல்விகளில் இருந்து தங்களது ஒவ்வொரு அடியையும் தொடங்கிய பலர், மிகப்பெரிய அளவுக்கு வெற்றி பெற்றபிறகும், எளிமையாக வாழ்ந்து இருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏராளமான உதாணரங்கள் உலகில் நிறைந்து உள்ளன. 

ஒரு வெற்றியாளர்:

அத்தகைய பல வெற்றியாளர்களில் ஒருவர் தான் வீ. க. தனபாலன் அல்லது வீரசங்கிலி கண்ணையா தனபாலன். 1954ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், மதுரா குழும நிறுவனங்களின் தலைவராக உள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் கலைமாமணி விருது பெற்றவர். வீழ்ச்சிகளைக் கடந்து தனக்கான பாதையை உருவாக்கிக்கொண்ட இவர், தற்போது வீ.கே.டி.பாலன் என்று அன்பாக அழைக்கப்படுகிறார். 

1970-களில் திருச்செந்தூரிலிருந்து சென்னையை நோக்கி வந்த பாலனுக்கு  சென்னையில்  சொந்தமோ நண்பர்களோ எவருமில்லை. ஒதுங்கக் கூரையில்லாமல், கிடைத்த இடங்களிலெல்லாம் ஒதுங்கி தன்னைப் பாதுகாத்துக்கொண்ட அந்த மனிதருக்கு, எதிர்காலத்தின் மீது அளப்பரிய நம்பிக்கையும் ஆசையுமிருந்தன. 

சென்னையில் தனக்கானதொரு கூரையில்லாத மனிதன் எதிர்கொள்ளும் துயரமும் நெருக்கடிகளும் அசாதாரணமானவை. அழுக்கும் வெக்கையும் நிரம்பிய மனிதனாக சென்னையின் தெருக்களில் தனக்கானதொரு வேலையைத் தேடியலைந்த பாலன் என்ற அந்த இளைஞனுக்கு ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சின. தன்னைப்போலவே ஒதுங்கக் கூரையில்லாத சில இளைஞர்களோடு ஒரு நாள் உறங்கிக்கொண்டிருந்த அவரை எழுப்பிய காவல்துறையினர் தங்களோடு அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து இருக்கிறார்கள். இப்படி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சென்னையில் தனது வாழ்க்கையை தொடங்கிய பாலன், அண்ணா மேம்பாலத்தின் அருகாமையிலிருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே அமெரிக்க விசாவுக்காக வருகிறவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவேண்டி முந்தைய நாளே வந்து படுத்துக்கொள்வார்கள் என்பதை அறிந்து,  அப்படி வர முடியாதவர்களுக்கு இடம் பிடித்துக் கொடுப்பதை தனது வேலையாக மாற்றிக் கொண்டார். 

வாய்ப்புகள் யாருக்கும் தானே சென்று கதவுகளைத் தட்டுவதில்லை. நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஒரு விடிகாலையில் தற்செயலாகத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கிய அவர், அதன் பிறகு தனது அன்றாட வேலையாக அதை மாற்றிக்கொள்கிறார். அவரிடமிருந்த உற்சாகத்தையும் துடிப்பையும் கவனித்த ஒரு டிராவல்ஸ் நிறுவன முதலாளி தன்னிடம் வேலைக்கு வரச்சொல்லி அழைக்கிறார். பாலன் புதிய வாய்ப்பு கிடைக்க, தனக்கான வெளிச்சம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் ஒப்புக்கொள்கிறார்.

வேலைக்குச் சேர்ந்த டிராவல்ஸில் கடுமையாக உழைக்கத் தொடங்கிய அவர், அந்தத் தொழிலில் இருக்கும் நுட்பங்களை, சக மனிதர்களை அணுகும் விதத்தையெல்லாம் கற்றுக்கொள்கிறார். அதோடு, வெவ்வேறு அலுவலகங்களில் சிறு சிறு வேலைகளைப் பார்க்கத் தொடங்க சென்னை நகரமும் வாழ்வும் மெல்ல பிடிபடத் தொடங்குகிறது. சில மாதகால சென்னை வாழ்க்கை அவருக்கு டிராவல்ஸ் தொழிலில் உள்ள நிறையபேரை அறிமுகப்படுத்தியிருந்தது. வெவ்வேறு வேலைகளில் கிடைத்த சிறு வருமானங்களைக் கொண்டு தனக்கான கூரையைத் தேடத் தொடங்கி அதை அமைத்துகொள்கிறார். 

`எந்த ஒரு மனிதனையும் தோற்கடிக்க முடியாது. ஒரு மனிதனை அழிக்க முடியும். ஆனால் தோற்கடிக்க முடியாது.’ என்ற வரிகள் ஒரு ஆங்கில நாவலில் வருகிறது. மனிதர்கள் நம்பிக்கையைக் கைவிடும்போதுதான் தோற்றுப் போகிறார்கள். வாழ்வின் மீதும், உலகின் மீதும் சிறு துளி நம்பிக்கை எஞ்சியிருந்தால் போதும். நமக்கான வெளிச்சம் கிடைத்தே தீரும். இது எளிமையான மனிதர் பாலன் தனது வாழ்க்கையின் மூலம் இளைஞர்களுக்கு மறைமுகமாக சொல்லியுள்ள செய்திகளாகும். 

ஆலோசனைகள் மூலம் பாதிப்பு:

ஒரு தொழில் தொடங்கும்போது எல்லோரிடமும் ஆலோசனைக் கேட்பது சரியான அணுகுமுறை இல்லை என்பது வாழ்க்கையில் சாதித்தவர்களின் கருத்தாக இருந்து வருகிறது. மனதில் சரியாக இருக்கும் என நினைத்து செயல்பட்டால், நிச்சயம் அதன்மூலம் வெற்றி கிடைக்கும். அப்படியே தோல்வி கிடைத்தாலும், பின்னர், தோல்வியில் இருந்து பாடங்களைப் பெற்று மீண்டும், வெற்றிப்படிகளை நோக்கிச் செல்ல முடியும். எல்லோரிடமும் ஆலோசனைக் கேட்டுக் கொண்டே இருந்தால், நிச்சயம் உங்களுக்கு தோல்வி தான் கிடைக்கும். சிலர் சரியான ஆலோசனை சொல்வார்கள். சிலர், தப்பான யோசனையை கூறி, உங்களை குழப்பி விடுவார்கள். இதன்மூலம் நீங்கள் சிறப்பான முறையில் வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியாது. 

எல்லோரிடமும் ஆலோசனைக் கேட்கும் எண்ணத்தை கைவிட்டு, தைரியமாக, ஏக இறைவன் மீது முழு நம்பிக்கையுடன் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள். சம்பளத்திற்காக மட்டுமே வாழும் வாழ்க்கை, உங்கள் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்யலாம். ஆனால், வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு நிச்சயம் கொண்டு செல்ல உதவாது. மிகப்பெரிய உந்துதலுடன் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை தைரியமாக தொடங்கி, அதற்காக மன உறுதியுடன் செயல்பட்டால், தோல்வி என்ற அடிகளில் இருந்து பின் வாங்காமல், சரியான உழைப்புடன் செயல்பட்டால், வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நீங்களும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: