Thursday, September 5, 2024

8 லட்சத்திற்கும் அதிகமான மனுக்கள்....!

 

க்பு வாரிய சட்டத் திருத்த மசோதா:

பொதுமக்களிடம் இருந்து 8 லட்சத்திற்கும் அதிகமான ஆலோசனை மனுக்கள் குவிந்தன

நாடாளுமன்றக் கூட்டுக்குழு தீவிர பரிசீலனை

புதுடெல்லி, செப்.06-ஒன்றிய பா... அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சட்டம் குறித்து பொதுமக்களிம் இருந்து 8 லட்சத்திற்கும் அதிகமான ஆலோசனைகள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், .யூ.முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கூட்டுக்குழு கூட்டம்:

இதையடுத்து டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு, அதன் தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் இரண்டு முறை கூடி முக்கிய ஆலோசனை நடத்தியது. மேலும், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கலாம் என நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிவித்தது. இதுதொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு மசோதா தொடர்பாக விரிவான ஆலோசனைகளையும், கருத்துகளையும் பொதுமக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும், வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

குவிந்த ஆலோசனை மனுக்கள்:

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் என அனைத்து தரப்பிடம் இருந்தும் ஆலோசனைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளையும் கருத்துகளையும் ஒன்றாக திரட்டி, ஒருங்கிணைந்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பி வருகிறது.

அந்த வகையில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமான ஆலோசனை மனுக்கள் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்றாவது கூட்டத்தில் எதிர்ப்பு:

பொதுமக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கருத்து மற்றும் ஆலோசனை மனுக்கள் குவிந்து வரும் நிலையில், கடந்த வியாழன் கிழமையன்று (05.09.24) நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் 3வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், ரயில்வே, சாலை போக்குவரத்து, நகர்புற மேம்பாடு உள்ளிட்ட அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது மசோதாவை அமல்படுத்தலாம் என நகர்புற மேம்பாடு அமைச்சக அதிகாரிகள் கருத்து கூறியபோது, கூட்டுக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மஸ்ஜித்துகள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் சொத்துக்களை அரசு எப்படி உரிமை கோர முடியும் என்றும் கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். நாள் முழுவதும் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

மனுக்கள் பரிசீலனை:

இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள ஆலோசனை மனுக்கள் அனைத்தும் தீவிர பரிசீலனையில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிசீலனைக்குப் பிறகு மசோதா தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு:

இதனிடையே, வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மசோதா அறிமுகம் செய்யப்படும்போது, பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களிப்பார்கள் என ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார். முஸ்லிம் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகள் தம்மை சந்தித்து மசோதா குறித்து அம்சம் தெரிவித்தாக குறிப்பிட்டுள்ள நவீன் பட்நாயக், அவரின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது கட்சி ஒருபோதும் துணை நிற்காது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.


-    சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

 

No comments: