Tuesday, September 10, 2024

இரவு நேர உணவு.....!

இரவு நேர உணவு - சில பயனுள்ள தகவல்கள்....!

ஒருவரின் நல்ல ஆரோக்கியத்திற்கு இரவு உணவு மிகவும் முக்கியமானது. மக்களில் பெரும்பாலோர் இரவு உணவில் எண்ணெய் பொருட்களை அதிகம் விரும்புகிறார்கள். அது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இரவு உணவு இலகுவானதாகவும், கொழுப்பு குறைவானதாகவும் இருக்க வேண்டும். இப்படி எளிமையான உணவின் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். 

இரவு நேர உணவின் சில நன்மைகள்:

தற்போதைய கடுமையான பணிச் சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக, சிலர் இரவு நேர உணவை சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்கிறார்கள். அல்லது நீண்ட நேரம் கழித்து உணவை எடுத்துக் கொள்கிறார்கள். இது சரியான அணுகுமுறை இல்லை. இயற்கை மருத்துவர்களின் ஆலோசனைகளின் படி, இரவு நேர உணவு என்பது, இரவு 8 மணிக்கு முன்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு 8 மணிக்குப் பிறகு, உணவு உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அளவுக்கு பலன் அளிக்காது என்றும், மாறாக, பல்வேறு உடல் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடும் என்றும் இயற்கை மருத்துவர்களின் எச்சரிக்கையாக இருந்து வருகிறது. 

சரி, இரவு நேர உணவு எப்படி இருக்க வேண்டும்? எத்தகைய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு, இரவு நேரத்தில் லேசான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது. 

லேசான இரவு உணவை உட்கொள்வதால், உடல் ஊட்டச்சத்துக்களை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. இதன் காரணமாக, செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. ஆரோக்கியமான வயிறு நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. இரவில் லேசான உணவை உண்பவர்கள் தங்கள் எடையை எளிதில் கட்டுப்படுத்தலாம். எனவே, இரவு உணவிற்கு குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அத்துடன், முழு வயிறு சாப்பிடாமல், குறைந்த அளவே சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். 

லேசான உணவு அவசியம்:

இரவு முழுவதும் சரியாகத் தூங்கவில்லை என்றால், இன்றிலிருந்து லேசான இரவு உணவைச் சாப்பிடத் தொடங்குங்கள். முடிவு ஆச்சரியமாக இருக்கும். உண்மையில், முழு வயிறு மற்றும் எண்ணெய் உணவுகள் தூக்கத்தை தொந்தரவு செய்கிறது.  அத்துடன் தூக்கத்தை கெடுத்து உடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்கிறது. 

இரவு உணவில் லேசான உணவை உண்பவர்களின், உடலின் ஆற்றல் அமைப்பான மெட்டபாலிசம் சிறப்பாக இருக்கும். இது தவிர, உங்கள் ஆரோக்கியம் ஓய்வில்லாமல் நன்றாக இருக்கும். இரவு உணவிற்கு கொழுப்பு குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தவிர, லேசான உணவும் உங்கள் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

இரவில் இலகுவான உணவுகளை உண்பதால், உடலை நீண்ட நேரம் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். எண்ணெய் நிறைந்த உணவுகளை உண்பது உடலை மெதுவாக்கி, அதிக எடையை உண்டாக்குகிறது என்பதை நீங்கள் கவனித்தில் கொள்ள  வேண்டும்.

ஆரோக்கியமான மற்றும் லேசான உணவை இரவில் சாப்பிடுவதன் மூலம், நீங்கள் அமிலத்தன்மையிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள். நீங்கள் சாப்பிட்ட பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், இனி லேசான உணவுகளை விரும்பி சாப்பிடுங்கள்.

மீண்டும் ஒருமுறை:

லேசான இரவு உணவில் கிடைக்கும் நன்மைகள் குறித்து மீண்டும் ஒருமுறை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். லேசான இரவு உணவை உட்கொள்வதால், உடல் ஊட்டச்சத்துக்களை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. இதன் காரணமாக, செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. ஆரோக்கியமான வயிறு நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம். எனவே, உடலை நீண்ட நேரம் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இரவில் இலகுவான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 

கடைசியாக, மனித வாழ்விற்கு உணவு மிகமிக முக்கியம் என்பதை நினைவில் கொண்டு, ஏக இறைவன் வழங்கும் நல்ல உணவை, அவனுக்கு நன்றி கூறி எடுத்துக் கொள்ள வேண்டும். ஏக இறைவனுக்கு நன்றி செலுத்தி எடுத்துக் கொள்ளும் உணவில் எப்போதும் பரக்கத் (நன்மைகள்) இருக்கும். அதன்மூலம் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: