Saturday, August 31, 2024

முஸ்லிம் முதியவரை தாக்கி அட்டகாசம்....!

மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக சந்தேகம்....!

முஸ்லிம் முதியவரை தாக்கி அட்டகாசம் செய்த இந்துத்துவ வெறியர்கள்..!

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் இந்துத்துவ அமைப்புச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதற்கு செய்தித்தாள்களில் வரும் செய்திகள் எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றன. 

அந்த வகையில்,  அரியானாவில் மாட்டிறைச்சியை சாப்பிட்டதாக புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவரை ஐந்து பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. 

மகாராஷ்டிராவில், ரயிலில் மாட்டிறைச்சி எடுத்து வந்ததாக கூறி, முஸ்லிம் முதியவரை பஜ்ரங்தள் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த  பயணிகள் சிலர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. முதியவரை சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இருந்து கல்யாண் நகருக்கு ஹாஜி அஷ்ரப் முன்யார் என்ற முதியவர் தனது மகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை, துலே-சிஎஸ்எம்டி விரைவு ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் ஜாடியில், எருமை இறைச்சி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த இறைச்சிக்கு மகாராஷ்டிராக மாநிலத்தில் தடை விதிக்கப்படவில்லை. எனவே, ஹாஜி அஷ்ரப் முன்யார் அதனை தனது உறவினருக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்றுக் கொண்டிருந்தார். 

மாட்டிறைச்சி சந்தேகம்:

ஹாஜி அஷ்ரப் முன்யார் பயணம் ரயில் பெட்டியில், பயணம் செய்த பஜ்ரங்தள் இந்துத்துவ அமைப்புச் சேர்ந்த பயணிகள், அவர் மீது சந்தேகம் அடைந்து, மாட்டிறைச்சியை கொண்டு செல்வதாக கூறி, ஹாஜி அஷ்ரப் முன்யாருடன் வாக்குவாதம் செய்தும் தகாத வார்த்தைகளை திட்டியும், கன்னத்தில் அறைத்தும் தாக்குதல் நடத்தினர். இதனால் முஸ்லிம் முதியவர் மிகவும் அச்சம் அடைந்து வேதனைக்கு ஆளானார். தாம் மாட்டிறைச்சியை கொண்டு செல்லவில்லை என்று முதியவர் எவ்வளவோ சொல்லியும் கெஞ்சியும் அந்த இளைஞர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 

இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கதில் வெளியிட்ட ஏஐஎம்ஐஎம் எம்.பி., இம்தியாஸ் ஜலீல், முஸ்லிம் முதியவர் தாக்கப்படுவதை மகாராஷ்டிரா அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக கண்டனம் தெரிவித்தார். 

அதிர்ச்சி, வேதனை:

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ஹாஜி அஷ்ரப் முன்யார், என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தபோது, அவர் இறங்க வேண்டிய ரயில் ஸ்டேஷனுக்கு முன்பாகவே, இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், அவரை ரயிலில் இருந்து இறக்கி விட்டனர். இதனால் அஷ்ரப் முன்யார் மிகவும் பாதிப்புக்கு ஆளானார். 

இந்த சம்பவம் தங்களுக்கு வேதனையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக ஹாஜி அஷ்ரப் முன்யாரின் மகன் அஷ்பாக் அஷ்ரப் வேதனை தெரிவித்துள்ளார். தங்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகி விட்டதாகவும் அவர் அச்சம் அடைந்துள்ளார். பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர் நடத்திய தாக்குதலில் தனது தந்தையின் இடது கண் பாதிக்கப்பட்டு, தற்போது பார்வை குறைபாடு ஏற்பட்டு விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

வழக்குப்பதிவு குற்றச்சாட்டு:

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் (GRP) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், எப்.ஐ.ஆரில், கொலை முயற்சி குறித்த சட்டப்பிரிவு 307 சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, ஹாஜி அஷ்ரப் முன்யாரின் குடும்பத்தினர் போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். கொலை முயற்சி சட்டப்பிரிவு குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் இருந்து வருகிறது. அத்துடன் ஆயுள் தண்டனையையும் கொடுக்க வழி வகை செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு சாதாரண வழக்காக இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. 

மூன்று பேர் கைது:

முதியவர் ஹாஜி அஷ்ரப் முன்யார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, மும்பை போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, தற்போது மூன்று பேரை கைது செய்துள்ளனர். துலேவில் கைது செய்யப்பட்ட இந்த மூன்று பேரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவரான ஆஷு அவ்ஹாத், மகாராஷ்டிரா மாநிலத்தின் சிறப்பு ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த உயரதிகாரியின் மகன் என தெரியவந்துள்ளது. இவருடன் சேர்ந்து பயணம் செய்த மற்ற பயணிகளிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மாட்டிறைச்சி என்ற பேரில், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும். அதன்மூலம் மட்டுமே, முஸ்லிம் முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்துத்துவ அமைப்புகளால் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: