Friday, August 30, 2024

சூடான விவாதம்:


க்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில்

சூடான காரசார விவாதம்: 

திமுக காங்கிரஸ்,மற்றும் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த

தெலுங்கு தேசம்,ஐக்கிய ஜனதா தளம் வெளிநடப்பு

புதுடெல்லி, ஆக.31-வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில், காரசார விவாதம் நடைபெற்று, காங்கிரஸ், திமுக மற்றும் ஆளும் கட்சியை ஆதரிக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது கூட்டம்:

வக்பு வாரிய சட்டத் திருத்தம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் கடந்த ஆக்ஸ்ட் 22ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. முதல் கூட்டம் நடைபெற்றபோது,  குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்தனர். இதையடுத்து வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை அரசு கையகப்படுத்தாது என்றும் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்றும், நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பால் விளக்கம் அளித்து இருந்தார். மேலும், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து முஸ்லிம் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் ஆலோசிக்கப்படும் என அவர் உறுதி அளித்து இருந்தார்.

இந்நிலையில், கூட்டுக் குழுவின் இரண்டாவது கூட்டம் வெள்ளிக்கிழமை (30.08.24) அன்று குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. குழுவில் நடைபெற்றுள்ள 31 உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டம், காலை 11 மணிக்கு தொடங்கிய இரவு 7 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், இந்தியன் முஸ்லிம் சிவில் உரிமைகள்(ஐஎம்சிஆர்) அமைப்புச் சேர்ந்த வழக்கறிஞர் பூசைல் அகமது அய்யூபி, அகில இந்திய சன்னி ஜாமியாதுல் உலமா அமைப்பு  உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினர் பங்கேற்று, தங்களது கருத்துகளை மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் எடுத்து வைத்தனர்.

சூடான விவாதம்:

கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வக்பு வாரிய நிர்வாகம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் நிர்வாகிக்கும் அதிகாரம் எப்படி மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கலாம்? என கேள்வி எழுப்பினார்கள். இதனால், பா.ஜ.க. ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இடையே சூடான விவாதம் நடைபெற்றது.

வக்பு வாரியம் என்பது முஸ்லிம்களின் அடையாளம் என்றும் அதை எப்படி மாற்றி அமைக்க முடியும் என்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி., முஹிபுல்லா கேள்வி எழுப்பினார். இதேபோன்று பேசிய அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அஸாவுத்தின் உவைசி, வக்பு வாரிய சொத்துகள், மாநில அரசுகளின் நிர்வாத்தின் கீழ் மற்றும் கட்டுப்பாட்டில் மட்டுமே வர வேண்டும் என வலியுறுத்தினார். வக்பு சொத்துக்கள் குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக தானம் செய்யப்பட்ட நிலையில், வக்பு என்ற பெயரை மாற்றி அமைத்து, புதிய சட்டம் கொண்டு வருவது, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்பு சொத்துகளை மீட்க வழி ஏற்படாது என்றும் மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்படும் சூழல் ஏற்படும் குற்றம்சாட்டினார். இதேபோன்று பேசிய ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், அரசியலமைப்புச் சட்டத்தை பா.ஜ.க. சிறிதும் கூட மதிக்கவில்லை என்று விமர்சனம் செய்தார். 

வெளிநடப்பு:

வக்பு வாரிய சட்டம் 1995 பிரிவு 40-இன் கீழ் வக்பு நிலமா, இல்லையா என்பதை வக்பு வாரியங்களே தற்போது முடிவு செய்து வரும் நிலையில், இந்த பிரிவு 40-ஐ நீக்குவதன் நோக்கம் குறித்து, திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பினார். இதற்கு சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சக அதிகாரிகள் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பங்கேற்றவர்கள் எழுப்பிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் இருந்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் இணைந்து தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கிய கட்சிகயைச் சேர்ந்த எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் அனுமதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


-    சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: