கையால் எழுதுவது மூளையின் செயல்பாட்டிற்கு சிறந்தது: ஆய்வில் தகவல்....!
ராக்கெட் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இன்றைய நவீன வாழ்க்கை முறையில், மனிதர்களின் பழக்க வழக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மனித வாழ்க்கை மிகவும் எளிமையான வாழ்க்கையாக மாறிவிட்டது. எந்தவித உடல் உழைப்பு இல்லாமல், நவீன, நவீன கருவிகள் மூலம் அனைத்துப் பணிகளையும் செய்யும் நிலை தற்போது உருவாக்கி விட்டது. இத்தகைய நிலை, மனிதனுக்கு மிகவும் பயன் அளிக்கும் வகையில் இருந்தாலும், அதனால், பல்வேறு நெருக்கடிகள், துன்பங்கள், துயரங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு காலத்தில் அதாவது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கைகளால் எழுதும் பழக்கம் மனிதர்கள் இடையே இருந்தது. தட்டச்சு இருந்தாலும், பெரும்பாலும் கையில் எழுதி, அதை மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் இருந்து வந்தது. கடிதம், கட்டுரை போன்றவை அனைத்தும் கையில் எழுதப்பட்டு வந்தன. இப்படி, கையில் எழுதும்போது, உடல் உழைப்புடன், மூளையும் இணைந்து செயல்பட்டது. இதனால், மூளை எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வாய்ப்பு கிடைத்தது.
தற்போது, கணினி மயம், உலகை ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது. வீடுகள் முதல் அலுவலகம் வரை, சூப்பர் மார்க்கெட் முதல் பொருட்காட்சிகள் வரை என அனைத்தும் கணினி மயமாகி விட்டது. அடையாள அட்டை அனைத்தும் கணினியில் ஒருசில நொடிகளில் கிடைத்து விடுகிறது. இதனால், நேரம் வீணாகாமல் சேமிக்கப்பட்டு, பல்வேறு நெருக்கடிகள் தவிர்க்கப்படுகின்றன. எனினும், இதில் மனித மூளைக்கு எந்தவித வேலையும் இல்லாமல் போய்விட்டதால், அது மெல்ல மெல்ல தனது சுறுசுறுப்பை இழந்து வருகிறது.
கையால் எழுதுவது நல்லதா?
கையால் எழுதுவதை விட கணினி அல்லது செல்பேசியில் தட்டச்சு செய்வது வேகமானதாக இருந்தாலும், அது மூளைக்கு மிக குறைவாக ஊக்கமளிப்பதாக ஆராய்ச்சியார்கள் நம்புகின்றனர். எனவே, கணினி அல்லது செல்பேசி ஆகியவற்றைப் பயன்படுத்தி, கட்டுரைகள், கடிதங்கள் ஆகியவற்றை எழுதும் பணிகளை செய்வதைவிட, கைகளால் எழுதினால், மூளைக்கு அதிகமான ஊக்கம் கிடைக்கும் என்றும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. கைகளால் எழுதினால், நினைவாற்றல் அதிகமாக இருக்கும் என்றும், எழுதும்போது தவறுகள் ஏற்பட்டால், உடனடியாக திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, கணினி, செல்பேசி ஆகியவற்றை பயன்படுத்தி, எழுத்துப் பணிகளை செய்வதை விட, கையால் எழுதுவதே சிறந்தது, நல்லது என்று உறுதியாக அறிந்துகொள்ள முடிகிறது.
ஆய்வில் தகவல்:
புகழ்பெற்ற ஃபிரான்டியர்ஸ் இன் சைக்காலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை ஒன்றில், தட்டச்சு செய்வதை விட, எழுதுவது மூளையின் செயல்பாட்டிற்கு சிறந்தது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (NTNU) ஆராய்ச்சியாளர்கள் பல்கலைக்கழக மாணவர்களிடம் ஆய்வை ஒன்றை நடத்தினர். இந்த ஆய்வின்போது, அவர்கள் தட்டச்சு மற்றும் கையெழுத்து பங்கேற்பாளர்களின் மூளையின் செயல்பாட்டை பதிவு செய்தனர்.
இந்த ஆய்வின் முடிவுகளில், கையெழுத்தானது கற்றல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், தட்டச்சு செய்யும் போது மூளையைத் தூண்ட முடியாத நிலை இருப்பதாவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இயற்கை தந்த வரம்:
ஏக இறைவன், இயற்கையாகவே அனைத்து உயிரினங்களுக்கு பல நல்ல வசதி, வாய்ப்புகளை வழங்கியுள்ளான். அவற்றை முறையாக பயன்படுத்தினால், மனிதன் நிச்சயம் ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால், சோம்பேறித்தனம், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிமையாதல் போன்ற பல்வேறு காரணங்களால், மனித சமுதாயம் தற்போது இயற்கை தந்த வரங்களை சரியாக பயன்படுத்துவதில்லை. அதன்மூலம் கிடைக்கும் தீமைகளை நன்கு உணர்ந்தபிறகும், ஏனோ மனிதன் இயற்கை வழியில் பயணிக்க தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.
மறைந்த தமிழக முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் ஒவ்வொரு நாளும் தங்கள், கைகளால் மட்டுமே கட்டுரைகள், கடிதங்கள், கவிதைகள் எழுதியதை நாம் அறிய முடிகிறது. அவர்கள் மட்டுமல்ல, பல்வேறு அறிஞர்கள் கணினி, தட்டச்சு ஆகியவற்றை பயன்படுத்துவதை விட, தங்கள் கைகள் மூலம் எழுத்தோவியங்களை வரைந்தார்கள். அதன் காரணமாக அவர்கள் எப்போதும் உற்சாகமாக செயல்பட்டார்கள். தொடர்ந்து அழகிய அற்புதமான இலக்கியங்களை உருவாக்கினார்கள்.
கைகளால் எழுதும்போது, மனதில் இயற்கையாகவே இனம்புரியாத ஒருவித உற்சாகம் ஏற்படும். மேலும் மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இதை பலர் அனுபவப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறார்கள். இத்தகைய ஒரு அனுபவம் கணினி மற்றும் தட்டச்சு பயன்படுத்துவதன் மூலம் நிச்சயம் கிடைக்காது.
நமது மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டு, கற்றல் மற்றும் நினைவாற்றல் மேம்படுத்த வேண்டுமானால், கையால் எழுதுவதை நாம் எப்போதும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கையால் எழுதி, பின்னர், அதை கணினி அல்லது தட்டச்சு மூலம் எழுத்து வடிவமாக்கலாம். இப்படி செய்வதன் மூலம், மூளை சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல், கற்றல் மற்றும் நினைவாற்றல் நிச்சயம் மேம்படும். இதை தான், நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment