Thursday, August 8, 2024

பேச்சு....!


வக்பு வாரிய திருத்த மசோதாவை அறிமுகம் செய்து

அரசியலமைப்பு சட்டத்தை மோடி அரசு மீறியுள்ளது...! 

புதிய சட்டத்தின் மூலம் வக்பு வாரிய அமைப்பு சீர்குலைக்க

மோடி அரசு முயற்சி…!! 

மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்

இ.டி.முஹம்மது பஷீர் பேச்சு

 

புதுடெல்லி, ஆக.09-வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா நாட்டின் அரசிலமைப்பு சட்ட விதிகளுக்கு எதிரானது என்று மக்களவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மலப்புரம் தொகுதி உறுப்பினர் இ.டி.முஹம்மது பஷீர் குற்றம்சாட்டியுள்ளார்.

வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா மக்களவையில் 08.08.2024 அன்று ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. அப்போது நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர் இ.டி.முஹம்மது பஷீர், அரசியலமைப்பு சட்ட விதிகள் 14, 15, 25, 26 ஆகியவற்றை மீறும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கடுமையாக விமர்சனம் செய்தார். நாட்டில் இந்து-முஸ்லிம்கள் இடையே பிரச்சினையை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெறும் வகையில் மோடி அரசு, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அதிகாரம் பறிக்க முயற்சி:

வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா மூலம், வக்பு வாரிய அமைப்பை முற்றிலும் சீர்குலைக்க அரசு விரும்புகிறது. வக்பு வாரியம் செய்துவரும் அனைத்தும் பணிகளையும் பறித்து, அதற்கு இருக்கும் அதிகாரம் ஆகிவற்றை கைப்பற்றி, மாவட்ட ஆட்சியர்களிடம் கொடுக்க இந்த அரசு விரும்புகிறது. அரசின் இந்த நடவடிக்கை மற்றும் முயற்சி நாட்டின் மதசார்பற்ற கொள்கையையும், சூழ்நிலையையும் வெகுவாக பாதிக்கும். முஸ்லிம்கள் தங்களுடைய சொத்துக்களை வக்பு செய்து நன்கொடையாக வழங்குகிறார்கள். அதற்கு தடை விதிக்கும் வகையில் இந்த சட்டம் இருந்து வருகிறது.

மேலும், வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா என்பது, வக்பு வாரியத்தின் அமைப்பின் நல்ல பணிகளை சீர்குலைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வக்பு வாரியத்திற்கு எந்த அதிகாரமும் வழங்காமல், அனைத்து அதிகாரங்களையும் மாவட்ட ஆட்சியர்களிடம் கொடுக்க இந்த அரசு விரும்புகிறது. புதிய மசோதா மூலம் மாவட்ட ஆட்சியர்தான், இனி வக்பு வாரியத்தின் தலைவர் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கும் நடவடிக்கையாகும்.

ஆக்கிரமிப்பை மீட்க முடியாது:

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்த வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா நிறைவேறினால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வக்பு வாரிய சொத்துக்களை மீட்கவே முடியாது. அந்த வகையில் இந்த மசோதாவில் சட்ட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வக்பு வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்ற நிலையில் இந்த சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வக்பு வாரியத்தின் உறுப்பினர்களாக நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வக்பு வாரிய குழுக்களிலும் பிற மதத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க மசோதாவில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செயலாகும்.

குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி:

வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா மூலம் நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த அரசு விரும்புகிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழு உமர் கான் தலைமையில் அமைக்கப்பட்டு அதில் நானும் உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். அந்த குழு அற்புதமான அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை அளித்த பரிந்துரைகளை மீறி, மீண்டும் நீங்கள் உங்கள் வழக்கமான விதிகளை கொண்டு வந்து இருக்கிறீர்கள்.

நிர்வாகத்தை கொலை செய்ய முயற்சி:

நீங்கள் கொண்டு வந்துள்ள இந்த மசோதா மூலம் வக்பு நிர்வாகத்தை கொலை செய்ய முயற்சி செய்துள்ளீர்கள். மேலும், நாட்டில் பாசிச கொள்கையை விதைக்க அரசு முயற்சி செய்கிறது. நாட்டில் பாசிசத்தை ஒருபோதும் பரப்பு முயற்சி செய்யாதீர்கள். புதிய புதிய முயற்சிகளை இதுபோன்ற முயற்சிகளை நீங்கள் செய்துக் கொண்டே இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட விபரீத முயற்சிகளை செய்ய வேண்டாம். நாட்டின் ஒற்றுமையை மதசர்பின்மையை சீர்குலைக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். இந்து-முஸ்லிம் என நீங்கள் பிரித்து பார்க்க விரும்புகிறீர்கள். அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பாசிசம் ஒருநாள் நிச்சயம் விழும். எனவே, அரசு கொண்டுள்ள இந்த வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

இவ்வாறு இ.டி.முஹம்மது பஷீர் பேசினார்.

மக்களவையில் இ.டி.முஹம்மது பஷீர் பேசியபோது அடிக்கடி அவரது மைக் அனைக்கப்பட்டு, இடையூறு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

-    சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

No comments: