இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த என்ன வழி......?
உலக மக்களில் பெரும்பாலனோர் இன்று சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகளில், இரத்த அழுத்தம் மிகமிக முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்தியாவில் நான்கு ஒருவருக்கு இரத்த அழுத்தப் பிரச்சினை இருந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், நவீன விஞ்ஞான முறை வாழ்க்கை நடைமுறைகள் என பல்வேறு காரணங்கள் இரத்த அழுத்தம் உருவாக்க காரணங்களாக இருந்து வருகின்றன. இரத்த அழுத்தம் என்பது தற்போது இளம் வயதினரையும் தொற்றிக் கொண்டுள்ளது. இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு, சிலர் உயிரிழப்பதை நாம் நாள்தோறும் நாளிதழ்களில் செய்திகளாக படித்து வருகிறோம்.
இரத்த அழுத்தம் இருப்பதை அறிந்துகொண்டு, அதற்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில், சரியான முறையில், உரிய நேரத்தில் சிகிச்சிசை பெறுவது மிகவும் முக்கியமாகும். இல்லையெனில் பின்னர் மிகப்பெரிய அளவுக்கு உடல் பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இரத்த அழுத்தப் பிரச்சினைக்கு மருந்து, மாத்திரைகள் மூலம் மட்டுமல்லாமல், இயற்கையான உணவு முறைகள் மற்றும் பழக்க வழக்கங்கள், பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும். இதை பலர் தங்களது செயல்களில் மூலம் நிரூபித்து இருக்கிறார்கள். இரத்த அழுத்தம் மட்டுமல்லாமல், சர்க்கரை நோய் பிரச்சினைக்கும் இத்தகைய முறையில் ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது நிரூபனமாகி இருக்கிறது.
ஆய்வின் மூலம் தகவல்:
பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்கள், லேசான நடைப்பயிற்சியை வழக்கமாக்கிக் கொண்டால், சராசரி இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம். இது ஒரு ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின்படி, மக்கள் தங்கள் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க ஏதாவது செய்ய முடியும் என்றால், அது மெதுவான வேகத்தில் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என தெரியவந்துள்ளது.
பொதுவாக பகலில், அலுவலக நேரத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். ஆனால் இதைத் தவிர்க்க, சிறிது நேரம் நிற்பதோ அல்லது நடப்பதோ உதவியாக இருக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது, ஆராய்ச்சியாளர்கள் ஒன்பது உடல் பருமன் உள்ளவர்களின் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவை ஒரு வாரத்திற்கு கண்காணித்து, பின்னர் ஒரு நாளைக்கு 10 முதல் 30 நிமிடங்கள் வரை ஐந்து இடைவெளியில் நிற்க அறிவுறுத்தினர்.
நடைப்பயிற்சி அல்லது நின்றதன் விளைவாக இவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த சிறிய வாழ்க்கை முறை மாற்றம் 24 மணி நேர காலத்தில், இரத்த சர்க்கரை அளவை 5 முதல் 12 சதவீதம் வரை குறைக்கும் என தெரியவந்துள்ளது.
நடைப்பயிற்சி மூலம் தீர்வு:
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த என்ன வழி என்ற கேள்விக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆய்வு, நடைப்பயிற்சி நல்ல தீர்வு என உலகிற்கு மிக அழகாகச் சொல்லியுள்ளது. இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சினைகளுக்கு உலகில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி, அவ்வவ்போது, தங்களது முடிவுகளை உலகின் முன் வைத்து வருகிறார்கள். இந்த ஆய்வுகளில் பெரும்பாலான முடிவுகள், நடைப்பயிற்சி நல்ல தீர்வு என தெரிவிக்கின்றன.
மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு எளிதான முறையில் எந்தவித செலவு இல்லாமல் சிகிச்சை அளிக்க வேண்டுமனால், நடைப்பயிற்சி போன்ற சில பழக்க வழக்கங்கள் கட்டாயம் தேவை. மருத்துவர்கள் கூட, தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள். அதன்மூலம் உங்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவு குறையும் என யோசனை தெரிவிப்பதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். மக்களுக்கு சாதாரணமாக தெரியும் நடைப்பயிற்சி, பல்வேறு நோய் பிரச்சினைக்கு நல்ல தீர்வாக இருந்து வருகிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
உணவு முறையில் கவனம்:
இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பிரச்சினைகளுக்கு, நடைப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் மூலம் தீர்வு கிடைத்தாலும், உணவு முறையில் நாம் எப்போதும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான, சத்தான உணவுகளை விரும்பி சாப்பிடுவதில் ஆர்வம் கொள்ள வேண்டும். தற்போதைய வேகமான உலகில் துரித உணவு (Fast food) என்ற கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இந்த கலாச்சாரம் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. இதன் காரணமாக வீட்டில் சமைத்து சாப்பிடும் பழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. துரித உணவு முறையில் ஆர்வம் கொண்டு விட்டதால், ஆரோக்கியமான உணவை சாப்பிடும் பழக்கத்தை மனிதன் இழந்து வருகின்றன.
இப்படி, வாழ்க்கை முறையில் தானே உருவாக்கிக் கொண்ட மாற்றங்கள் காரணமாக தன்னையும் அறியாமல், பல நோய்களை விரும்பி மனிதன் அழைத்துக் கொண்டே இருக்கிறான். தான் ஈட்டும் வருவாயில், பெரும்பாலான தொகையை மருத்துவர்களுக்கும், மருந்துக்கும், மாத்திரைகளுக்கு செலவழிக்க வேண்டிய நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளன. எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் மிகமிக அவசியம் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நல்லுறவுகளைப் பேணுதல்:
குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல உறவுகளைப் பேண நாம் பழகிக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மனம் எப்போதும் உற்சாகமாக இருக்கும். மனமும், மூளையும் உற்சாகமாக இருந்தாலே, நம்மை நோய்கள் தாக்காது என்பது மனநல மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள் ஆகும். இதன் காரணமாக தான், இஸ்லாத்தில் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. உறவுகளை சிறந்த முறையில் பேணி காக்க வேண்டும் என அறிவுத்தப்பட்டு வருகிறது. தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், அண்டை வீட்டார், வழிப்போக்கர் என அனைவரிடமும் அன்பு செலுத்தி, வாழ இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
நல்ல உறவுகளை பேணி வளர்ப்பதன் மூலம், நம்முடைய வாழ்க்கை முறையில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும். நோய்கள் குறித்த சிந்தனைகள் நமக்கு ஏற்படாது. அதுவே மிகப்பெரிய வரம் என கூறலாம். எப்போதும் நோய்கள் பற்றிய சிந்தனையில் மூழ்கி இருப்பதை விட, நல்ல ஆரோக்கியமான சிந்தனைகளுடன் வாழ்வது, நோய்களில் இருந்து விடைப்பெற சிறந்த வழியாக இருந்து வருகிறது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைக்கும் நடைப்பயிற்சி, சரியான உணவு முறைகள், நல்ல உறவுகளை பேணுதல் போன்றவற்றின் மூலம் ஓரளவு தீர்வு காண முடியும். அதற்காக நாம் முயற்சி செய்வோமா?
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment