Saturday, August 24, 2024

விருந்தோம்பல்....!

உறவுகளை வளர்க்கும் விருந்தோம்பல்....!

இஸ்லாமிய வாழ்வியல் முறையில் விருந்தோம்பலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விருந்தோம்பல் ஈமானின் ஒரு அங்கம் என்று இஸ்லாம் கூறுகிறது. தமிழர்களின் பண்பாட்டிலும் விருந்தோம்பல் முக்கிய அம்சமாக இடம்பெற்றிருந்தது. அக்காலத் தமிழர்கள் விருந்தையும், விருந்தினர்களையும் உயர்வாகக் கருதினார்கள். விருந்து கொடுக்கும் பண்பாட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்களே என்றும் கூறலாம். விருந்தோம்பல் மூலம் மனிதர்கள் மத்தியில் நல்ல உறவுகள் மேலும் மேம்படுகின்றன. மக்கள் மத்தியில் அன்பு தழைத்து வளர்கிறது. 

இத்தகைய உயர்ந்த பண்பு, தற்போது மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. விருந்தினர்களை அழைப்பது, அவர்களுக்கு தங்கள் அன்பின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது நவீன விஞ்ஞான உலகில் காண்பது அரிதாகிவிட்டது. அப்படியே விருந்தோம்பல் செய்தாலும், நட்சத்திர விடுதிகளில் கேளிக்கைகளுடன் விருந்துகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய விருந்தோம்பல், நிச்சயம் அன்பை வளர்த்து உறவுகளை மேம்பட செய்யாது. மாறாக, பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே இருக்கும். இதனால் வாழ்க்கையில் எந்தவித நன்மையும் கிடைக்காது. 

விருந்தோம்பல் குறித்து இஸ்லாம்:

நாம் ஆரம்பத்திலேயே சொன்னப்படி, விருந்தோம்பல் என்ற பண்புக்கு இஸ்லாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. "விருந்தினர்களை உபசரிக்காதவரிடம் இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும் இருக்க முடியாது" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

"யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

இதேபோன்று, "யார் விருந்தழைப்பை ஏற்க மறுக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

இதன் காரணமாக தான், இஸ்லாமியர்கள் மத்தியில் விருந்தோம்பல் என்ற பண்பு மிகச் சிறந்த முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தபோது, வீடுகளில் விருந்தாளிகள் வந்துசென்றுக் கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாக வீடுகளில் எப்போதும் ஆனந்தம் தழைத்துக் கொண்டே இருக்கும். உறவினர்களின் இடையே அன்பு பாலம் மேலும் வலுப்பெறும். ஒருவர் மற்றொருவர் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்டு, உதவிக்கரம் நீட்டும் பண்பை மிகச் சிறந்த முறையில் வெளிப்படுத்துவார்கள்.

அண்மையில் உம்ரா பயணத்திற்காக புனித மக்கா மற்றும் மதினா நகரங்களுக்கு நான் சென்றபோது, அங்கு வாழும் மக்களிடையே விருந்தோம்பல் என்ற பண்பை கண்டு வியப்பு அடைந்தேன். குறிப்பாக, மதினா நகரில், மிகப்பெரிய அளவுக்கு விருந்தோம்பல் குணம் இருந்து வருகிறது. தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவருக்கும், உணவு அளித்தும், உதவி செய்தும் மகிழ்ச்சி அடையும் மதினாவாசிகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த விருந்தோம்பல் என்ற அழகிய பண்பை இன்றும் தங்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து, அதன்மூலம், மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். அத்துடன், மதினாவிற்கு வரும் பல நாட்டு மக்களையும், தங்களுடைய அழகிய விருந்தோம்பல் என்ற குணத்தின் மூலம், வியப்பு அடையச் செய்து வருகிறார்கள். விருந்தோம்பல் குணம் மனிதனுக்கு மனரீதியாக மிகப்பெரிய அளவுக்கு ஆனந்தம் தந்து, அவனை எப்போதும் உற்சாகத்துடன் செயல்பட வைக்கும் என்பதை, மதினா மக்களின் முகங்களை காணும்போது அறிய முடிந்தது. 

தமிழர் போற்றும் விருந்தோம்பல்:

தமிழர்கள் பெரிதும் போற்றும் விருந்தோம்பல் என்னும் பண்பாடு அக்காலம் முதல் இக்காலம் வரை சிறந்து விளங்குகிறது. விருந்தோம்பல் என்பது இல்லற வாழ்வியல் நெறி முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அக்காலத்தில் விருந்தோம்பல் சாதி மதம் பார்க்காமல் நடைபெற்றதை தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அக்கால மக்களின் தலையாய பண்புகளில் முதன்மையானது விருந்தினரை உபசரித்தல் என்பதாக இருந்து வந்தது. மக்களுக்கு எவ்வளவு சுமைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் இறக்கிவைத்து விட்டு தன்னை நாடி வந்த மனிதர்களுக்கு விருந்து உபசரிப்பர். 

இவ்வாழ்வில் ஈடுபட்ட தலைவனும், தலைவியும் அறவழியில் சேர்க்கும் பொருளை விருந்தினருக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு காலையும் விருந்தினரை எதிர்பார்ப்பவரின் வாழ்க்கை பருவகால மாற்றத்தால் பாதிக்கப்படுவதில்லை என்றும் திருவள்ளூவர் தனது குறளில் மிக அழகாக கூறியுள்ளார். இதன்மூலம், விருந்தோம்பல் என்பது தமிழர்களின் பண்பாட்டில் எப்போதும் இடம்பிடித்த ஒரு அழகிய கலாச்சாரம் என்பது மிக தெளிவாக தெரிகிறது. 

விருந்தோம்பல் குறித்த பயனுள்ள குறிப்புகள்:

இஸ்லாமியர்களின் ஒவ்வொரு வீட்டிலும் உறவினர்களுக்கு வாராந்திர அல்லது மாதாந்திர விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த விருந்து ஏற்பாடு என்பது உறவினர்கள் ஒன்று சேர ஒரு சாக்கு ஆகும். இந்த உறவினர்கள் சந்திப்பில் மகிழ்ச்சி உண்டாகும். இருப்பினும், விருந்துக்கு ஏற்பாடு செய்வது மற்றும் நிர்வகிப்பது நிச்சயமாக கடினமான பணியாகும். உண்மையில், ஒரு இல்லத்தரசி விருந்தை அற்புதமாக நடத்துவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டும்.  அதில், வீட்டை சுத்தம் செய்தல், விருந்தினர்களுக்கு நேரம் கொடுப்பது, நல்ல முறையில் உணவு சமைத்து பரிமாறுவது போன்றவை அடங்கும். இந்த சோர்வு மற்றும் கவலையைத் தவிர்க்க, சில பயனுள்ள குறிப்புகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விருந்துக்கு எவ்வளவு பேர் எதிர்பார்க்கப்படுகிறார்கள், எத்தனை பெரியவர்கள், எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற பட்டியலை உருவாக்குவதன் மூலம் உணவு தயாரிப்பதை எளிதாக்குவதற்கு மிகவும் உதவும். அத்துடன், முதலில், விருந்துக்கு என்ன சமைக்க வேண்டும் என்பதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பே தீர்மானிக்க வேண்டும். மெனுவை மனதில் வைத்து, அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள், சந்தையில் இருந்து வாங்க வேண்டியவை, வீட்டில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தையும் எழுதுங்கள். பயன்படுத்தப்படும் அனைத்து பாத்திரங்களையும், அவற்றை முன்பே எடுத்து, அவற்றை கழுவி ஒரு மேஜையில் வைக்கவும். அனைத்து, தட்டுகள், கரண்டிகள், பாத்திரங்கள், கிண்ணங்கள், முதலியன, ஏனெனில் உணவு பரிமாறும் போது பாத்திரங்கள் தேடும் சிரமம் குறையும். விருந்தினர்களின் எண்ணிக்கை மற்றும் எத்தனை உணவுகளை அவர்கள் பயன்படுத்தலாம் என்பதை மதிப்பிடவும். உணவில் எத்தனை உணவுகள் உள்ளன, என்ன வகையான பாத்திரங்கள் தேவைப்படும், அவற்றை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.

விருந்தினரின் இருக்கை அமைப்பை சரியாகச் செய்வது மிகவும் முக்கியம். இருக்கை வசதி குறைவாக இருந்தால், அனைவரும் அதிருப்தி அடைவார்கள். அதனால்தான் நீங்கள் இடத்தை உருவாக்க அல்லது மரச்சாமான்களை முன்னும் பின்னுமாக நகர்த்த சில பொருட்களை பேக் செய்ய வேண்டும் என்றால், அதை ஒரு நாள் முன்னதாகவே செய்யுங்கள். குடிப்பதற்கு குளிர் மற்றும் வெற்று நீர் இரண்டையும் வழங்கவும். சிலருக்கு குடிக்க குளிர்ந்த நீர் தேவைப்படும், மற்றவர்களுக்கு குடிக்க சாதாரண தண்ணீர் தேவை. எனவே உங்கள் தயாரிப்பை முழுமையாக வைத்திருங்கள்.

முந்தின நாள் இரவு செய்யக்கூடிய ஸ்வீட் டிஷ் ஏதாவது இருந்தால் கண்டிப்பாக செய்து பாருங்கள். அது உங்கள் வேலையை எளிதாக்கும். நீங்கள் பிரியாணி சமைப்பதாக இருந்தால், இரவில் மசாலா தயார் செய்யுங்கள். பான் செய்ய விரும்பினால், தக்காளியை அரைக்கவும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் கபாப் செய்யுங்கள். சில பெண்கள் சமைத்த பின் பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்வார்கள். ஆனால் அதேநேரத்தில் சமையலறை மூடப்பட்டிருந்தால், நீங்கள் சுத்தம் செய்ய நேரம் எடுக்க வேண்டியதில்லை. மேலும் உணவுகள் குவியலாக இருக்காது.

அதிக அலங்காரங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். விருந்தினர்கள் சிரமங்களை எதிர்கொள்ளாத வகையில் மேஜை அலங்காரம் மற்றும் நாற்காலிகள் போன்றவற்றை எளிமையாக வைத்திருங்கள். விருந்தினர்கள் வருவதற்கு முன், மேஜை அல்லது மேசையை அமைக்கவும், இது போன்ற பிற பணிகளுக்கு, குழந்தைகள், மனைவி அல்லது சகோதரர் மற்றும் சகோதரி போன்றவர்களின் உதவியை எடுத்துக் கொள்ளலாம். அதன் மீது தட்டுகள், கரண்டிகள், கண்ணாடிகள் போன்றவற்றை வைப்பதன் மூலம் அவசர உணவுகள் எந்த வித சலசலப்புமின்றி பரிமாறப்படும். அதேபோல, சாப்பிட்டவுடன் பாத்திரங்களை எடுத்து உடனடியாக சுத்தம் செய்யும் பொறுப்பும் முன்கூட்டியே யாரிடமாவது ஒப்படைக்கப்பட வேண்டும்.

விருந்தினர்கள் வருவதற்கு முன் உங்கள் வேலையை முடித்துவிட்டு, குளித்துவிட்டு, நல்ல வாசனை திரவியம் மற்றும் லேசான ஒப்பனை போட்டு தயாராகுங்கள். இது உங்களை நன்றாக உணர வைக்கும், மேலும் உங்கள் விருந்தினர்களும் உங்களைப் பற்றி நன்றாக உணருவார்கள். வீட்டிற்கு வரும் உறவினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுங்கள். அமைதியாக இருங்கள். நன்றாக சிரித்து மகிழுங்கள். இதன்மூலம் விருந்தோம்பல், சிறந்த விருந்தோம்பலாக அமைந்து உறவுகள் மத்தியில், அன்புடன் மகிழ்ச்சியும் மேலும் பெருகும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: