Tuesday, August 27, 2024

முத்தமிழ் முருகன் மாநாடு....!

 அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - ஒரு பார்வை

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் வாழும் அனைத்துச் சமுதாய மக்களின் நலன்களை பேணும் வகையில் ஆட்சி செய்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சகோதர சமுதாய மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு தேதிகளில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை, தமிழக அரசின் சார்பில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அந்த துறையின் அமைச்சர் சேகர்பாபு, மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்து, மாநாட்டை, வெற்றி மாநாடாக மாற்றியுள்ளார்.  மாநாட்டில் முதல் நாள் மட்டும் நடந்த கலைநிகழ்ச்சிகளில் 600 கலைஞர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் 4 நீதிபதிகள், தமிழக ஆதீனங்கள், ஆன்மிக பெரியோர்கள், உலகம் முழுவதும்  இருந்து வந்த வெளிநாட்டு பக்தர்கள் கலந்துகொண்டு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்து  ‘எல்லோருக்கும் எல்லாம்‘ என்று உரையாற்றினார். மாநாட்டுக்கு 25 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் நாள்  மட்டும் லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள். இதன் மூலம் முருகனுக்கு, தமிழ்நாடு அரசு எடுக்கிற மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்பது தெரியவந்தது. முதல் நாள் மட்டும் 50 ஆயிரம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது, இதேபோல் ஒன்னேகால் லட்சம் பக்தர்கள் உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். முதலமைக்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்த இந்த மாநாடு வெற்றி பெற்றிருக்கிறது. பக்தர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த மாநாட்டு கண்காட்சி மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எல்லோருக்கும் எல்லாம்:

தமிழக அரசைப் பொருத்தவரை எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இரு நாட்கள் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் திருவண்ணா மலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் ரத்தினகிரி தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஆகியோர் குத்து விளக்கினை ஏற்றினர்.

அதனை தொடர்ந்து பிரதான நுழைவுவாயிலை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர்கள் முன்னிலையில் ரத்தினகிரி தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் 100அடி கொடிக்கம்பத்தில் மாநாட்டு கொடியேற்றினார். அடுத்த நிகழ்வாக முருகன் கண்காட்சி அரங்கினை அமைச்சர் ஐ.பெரியசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆன்மீகப் பெரியோர்கள், நீதி அரசர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் என பலர் உரையாற்றினர். மாநாட்டில் 2 நாட்களும் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், பல்துறை சார்ந்தவர்களின் உரை , சிந்தனை மேடை, நாட்டியம்,வாய்பாட்டு, பக்தி இசை, கருத்தரங்கு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சேகர்பாபு என்ற பண்பாளர்:

மாநாட்டில், கோவில்களில் தமிழுக்கு முன்னுரிமை தரும் வகையில் தமிழ் மொழியில் கும்பாபிஷேகம் மற்றும் வழிபாடு நடத்த நடவடிக்கை மேற்கொள்வது. முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிலைத்த அடையாளமாக முத்தமிழ் முருகன் ஆய்வு மையம் அமைக்க அரசுக்கு பரிந்துரைப்பது. சித்த மருத்துவத்தை ‘தமிழர் சித்த மருத்துவம்‘ என அழைத்திட அரசுக்கு பரிந்துரைப்பது. பழனியில் ‘தமிழர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்‘ அமைக்க அரசுக்கு பரிந்துரைப்பது என்பன உள்ளிட்ட 21 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டை முன்னின்று வெற்றிகரமாக நடத்திய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அனைத்துச் சமுதாயக மக்களிடையே எப்போதும் சகோதரப் பாசத்துடன் பழகும் பண்பாளர். குறிப்பாக இஸ்லாமிய சமுதாய மக்களின் தோழனாக எப்போதும் இருந்து, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு காணும் ஒரு சகோதரராக இருந்து வருகிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக அவர் பொறுப்பு ஏற்றப்பிறகு, அக்கிரமிப்பு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான  நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவர். தாம் கொண்ட கொள்கையில் எப்போதும் உறுதியுடன் இருக்கும் அவர், மற்ற சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பு அளித்து அவர்கள் நடத்தும் விழாக்களில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் குணம் கொண்டவர். இப்படி, உயர்ந்த எண்ணம் கொண்ட அமைச்சர் சேகர்பாபு, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை, வெற்றிகரமாக நடத்தி இருப்பது, அவரது ஆன்மிக பக்திக்கு ஒரு சிறந்த சான்றாக இருந்து வருகிறது. தமிழக அரசின் சார்பில் இதுபோன்ற மாநாட்டை நடத்துவது குறித்து சிலர் விமர்சனம் செய்து வந்தாலும், ஒரு அரசு என்பது அனைத்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசாக இருக்க வேண்டும் என்பது தான் உண்மையான ஆட்சியாளர்களுக்கு அழகாகும். அந்த வகையில் இந்த மாநாட்டை நடத்தியதற்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  

முஸ்லிம் மன்னர்களும் கோவில்களும்:

வரலாற்றில் இஸ்லாமியர்கள் மன்னர்கள் பற்றி பலவிதமான கருத்துக்கள் உள்ளன. ஆனால் இஸ்லாமிய மன்னர்கள் பலர் இந்துக் கோவில்கள் கட்டுவதற்கு நிலங்களை நன்கொடைகளாக வழங்கியதும், பல கோவில்களின் திருப்பணிகளுக்கு உதவியதும், பல கோவில்களை பாதுகாத்து வந்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வரலாற்று ஆய்வாளரான பிரதீப் கேசரிவானி என்பவர் 2015ம் ஆண்டு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கையில், உத்திர பிரதேசத்தின் அரைல் பகுதியில் திரிவேணி சங்கம கரையில் அமைந்துள்ள சோமேஸ்வர் மகாதேவ் ஆலயம் கட்டுவதற்கு நில வழங்கியவர் முகலாய மன்னர் அவுரங்கசீப் தான். அந்த கோவில் கட்டுவதற்கு அவர் பணம் மற்றும் நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளதற்கான சான்று, அந்த கோவிலில் அனுமன் சிலைக்கு அருகில் உள்ள தூண் ஒன்றில் 15 வரியில் சமஸ்கிருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோமேஸ்வரர் மகாதேவ் கோவில் மட்டுமல்ல உஜ்ஜைனி மகா காலேஸ்வரர் கோவில், சித்திரக்கூடம் பாலாஜி கோவில், கவுகாத்தி உமாநாத் கோவில், சரன்ஜயில் உள்ள ஜெயின மத கோவில்கள், தென்னிந்தியாவில் சில கோவில்கள் கட்டுவதற்கும் அவுரங்கசீப் நிலம் அளித்துள்ளதாக நீதிமன்றங்களில் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அக்பர், ஜகாங்கீர் ஆகியோரும் 16ம் நூற்றாண்டில் பல கோவில்கள், மடங்களை அமைக்க நிலங்களை நன்கொடையாக கொடுத்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் அவர்களின் மத நம்பிக்கையின் படி வழிபாடுகளை செய்வதற்கு உரிமை உண்டு என்பதில் அக்பர் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

தமிழகத்தின் சென்னையில் உள்ள பிரபல கோவில்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு முன்புறம் 2080 சதுர மீட்டர் பரப்பளவில் கோவில் குளம் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த குளத்தை கட்டியவர் முத்தியப்ப முதலியார். 300 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் குளத்தை அமைப்பதற்கு அப்போது இந்த பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப்பிடம் சென்று கேட்டுள்ளார் முத்தியப்ப முதலியார். சில நிபந்தனைகளின் பேரில் ஆற்காடு நவாப் திருக்குளத்திற்கான நிலத்தை வழங்கி உள்ளார். இதனை ஏற்ற முத்தியப்ப முதலியார் மூன்றே நாட்களில் திருக்குளத்தை அமைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் மயிலை கற்பகல் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. முத்தியப்ப முதலியார், ஆற்காடு நவாப்பிற்கு அளித்த வாக்குறுதியின் பேரில் தற்போது வரை ஆண்டுதோறும் நடைபெறும் தெப்ப உற்சவத்தின் போது, நவாப் வம்சத்தவர்கள் வந்து முதல் மரியாதையை ஏற்ற பிறகே உற்சவங்கள் நடத்தப்படும் வழக்கம் உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் இஸ்லாமிய மன்னர்கள் பலர் இந்துக் கோவில்கள் கட்டுவதற்கும் அவற்றை பராமரிப்பதற்கும் நிலம், பணம் ஆகியவற்றை நன்கொடையாக அளித்துள்ளனர். கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், சபரிமலை செல்வதற்கு முன் எரிமேலியில் உள்ள வாபர் கோவிலில் வழிபட்டு, செல்லும் வழக்கம் இன்னும் உள்ளது. இதேபோல் தமிழகத்திலும் பல கோவில்களில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் வந்து முதல் மரியாதையை வாங்கிய பிறகே கோவில் உற்சவங்கள் துவங்கும் வழக்கமும் உள்ளது.

முத்தமிழ் முருகன் மாநாடு :

இந்தியாவில் 4 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துவரும் நிலையில், இந்த சமூக மக்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஒரு சிறந்த ஆட்சியாளரின் பண்பாகும். அந்த வகையில், தமிழகத்தில் அனைத்துச் சமுதாய மக்களையும் அரவணைத்துக் கொண்டு, அவர்களின் நலனில் உண்மையான அக்கறையுடன் செயல்படும் அரசாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. எனவே தான் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், அவற்றை புறந்தள்ளிவிட்டு, அனைத்துலக முத்தமிழ முருகன் மாநாட்டை, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஒரு வெற்றி மாநாடாக நடத்தி முடித்துள்ளது. 

சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: