Sunday, August 25, 2024

அநீதி....!

"பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களின் வீடுகள் இடிப்பு" 

அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்?

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றுவரும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக அடிக்கடி மிகப்பெரிய அளவுக்கு அநீதிகள் நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க. ஆளும் மற்றொரு மாநிலமான உத்தரக்காண்ட்டில், பொதுசிவில் சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அசாமில், முஸ்லிம் வெறுப்பு மிகவும் உச்சத்தில் இருந்து வருகிறது. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இலவசமாக கல்வி பயிலும் மதரஸாக்களை மூட அம்மாநில பா.ஜ.க. அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்கள் மீது ஏன் இந்தளவுக்கு பாசிச அமைப்புகளுக்கு வெறுப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு, முஸ்லிம்கள் அமைதியாக ஓர் இறைக் கொள்கையில் உறுதியுடன் இருப்பது, அவர்களை கோபத்தில் ஆழ்த்துகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது. பா.ஜ.க. மற்றும் பாசிச அமைப்புகள் கொடுக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முஸ்லிம்கள் அமைதியுடன் நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஆற்ற வேண்டிய பணிகளையும் கடமைகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். எனினும் அவர்கள் மீதான துன்பங்கள், தாக்குதல்கள் நின்றுவிடவில்லை. தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

முஸ்லிம்களின் வீடுகள் இடிப்பு:

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேசத்தில் கடந்த ஜுன் மாதம் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ற பேரில், 11 முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டன. இடிக்கப்பட்ட வீடுகள், பசு வதை மற்றும் பசு கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்குச் சொந்தமானது என மண்ட்லா நிர்வாகம் கூறுகிறது.

மத்தியப் பிரதேசத்தின் மண்ட்லா மாவட்டத் தலைநகரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் பைன்ஸ்வாஹி உள்ளது. இந்த இடத்தில் ஈத்கா குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கு முன்பு 30 வீடுகள் இருந்தன. தற்போது அது பாழடைந்த பகுதி போல காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் குப்பை குவியல்கள், உடைந்த சுவர்கள் காணப்படுகின்றன. குழந்தைகள் மற்றும் பெண்கள் அங்கே தங்கள் பொருட்களை இன்னும் தேடுகின்றனர். குழந்தைகள் தங்கள் விளையாட்டுப் பொருட்களையும், பெண்கள் குப்பைகளுக்கு அடியில் புதையுண்டு கிடக்கும் விலையுயர்ந்த பொருட்களையும் தேடுகின்றனர்.

"யாரோ ஒருவர் செய்த குற்றத்திற்காக வேறொருவர் தண்டிக்கப்படுகிறார். எங்கள் வீட்டில் இருந்து எதுவும் கிடைக்கவில்லை. எங்கள் வீடு திடீரென இடிக்கப்பட்டது" என்று வீட்டை இழந்த ரோஷினி என்று முஸ்லிம் பெண்மணி கண்களில் கண்ணீருடன் கூறுகிறார். "குறைந்தபட்சம் எங்களை எச்சரித்திருந்தால், நாங்கள் எங்கள் உணவுப் பொருட்களை வெளியே எடுத்திருப்போம். பல நாட்களாகியும் எங்களுக்கு ஒரு பிடி உணவுகூடக் கிடைக்கவில்லை" என்று அவர்  வேதனை தெரிவிக்கிறார்.  தன்னுடைய குழந்தைகள் பசியுடன் இருக்கும் நிலையில், இப்போது என்ன செய்வது? எங்கே போவது என்று தெரியாமல், ரோஷினி தவித்துக் கொண்டிருக்கிறார். 

நிலைமை குறித்து விவரிக்கும் 70 வயதான அப்துல் ரஃபீக், ஜுன் 16ஆம் தேதி நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இந்த குடியிருப்பை சேர்ந்த 11 முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டன என்று கண்ணீர் விட்டு கூறுகிறார். 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வீடு இடிப்பு:

பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்தர்பூரில், முன்னாள் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவரான ஹாஜி ஷாஜத் அலியின் மாளிகை சமீபத்தில் இடிக்கப்பட்டது. சத்தர்பூர் நகரில் நடந்த வகுப்புவாத வன்முறை தொடர்பாக அலியின் பெயர் வந்தது. இதையடுத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது மாளிகை இடிக்கப்பட்டது. பாலிவுட் படங்களில் காட்டப்படும் அரண்மனையின் மாதிரியாக இந்த வீடு வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது, ஹாஜி ஷாஜத் அலியின் மாளிகை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 

மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், உத்தரப் பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான புல்டோசர் நடடிவக்கைகள் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டால், அவர்கள் முஸ்லிமாக இருந்தால், உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து, முஸ்லிம் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி, அதை அகற்றி விடுகிறது. இதற்கு அரசு கூறும் காரணம், ஆக்கிரமிப்பு என்பதாக இருந்து வருகிறது. 

உத்தரப் பிரதேசத்தில் பிரக்யாராஜ் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக ஜாவித் முகமது என்பவரின் வீடு இடிக்கப்பட்டது. ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டுள்ளதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  புல்டோசர் மூலம் ஜாவித்தின் வீடு இடிக்கப்பட்டுள்ளது. இப்படி, முஸ்லிம்களுக்கு எதிராக புல்டோசர் நடடிவகைககள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

இந்தியா கூட்டணி கண்டனம்:

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் முஸ்லிம் சிறுபான்மையினரின் வீடுகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

“ஒருவரின் வீட்டை இடித்து அவர்களது குடும்பத்தை வீடற்றவர்களாக ஆக்குவது மனிதாபிமானமற்றது மற்றும் நியாயமற்றது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் சமூகத்தில் இதுபோன்ற செயல்களுக்கு இடமில்லை" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும், முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுவதற்கு தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மதசார்பற்ற நாட்டில், முஸ்லிம்கள் மீது இப்படி குறிவைத்து நடத்தப்படும் அநீதிகள் மிகவும் வேதனை அளிப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். 

அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்?

நடந்துமுடிந்த 18வது நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க பெரும்பான்மை பலத்தை பெறவில்லை. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அக்கட்சியை நிராகரித்து இருப்பது தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இருந்தும், தேர்தல் முடிவுகள் மூலம் பா.ஜ.க. படிப்பினை பெறவில்லை. இந்திய தாய் நாட்டை உண்மையாக நேசிக்கும் முஸ்லிம்கள், மீது எப்போதும் வெறுப்புடன் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் இருந்து வருகின்றன. அதன் காரணமாக தான், சிறு தவறுகளை செய்துவிட்டாலும், அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால், மிகப்பெரிய அளவுக்கு நடவடிக்கைகள் பாய்கின்றன. 

மதசார்பற்ற நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும். ஆனால், தற்போது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. மாறாக, வெறுப்பு, வெறுப்பு என்ற கொள்கையை கையில் எடுத்துக் கொண்டு, முஸ்லிம்களை எப்போதும் விரோதிகளாக நினைத்துக் கொண்டு, பா.ஜ.க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் அனைவரும் மிகப்பெரிய அளவுக்கு வசதி படைத்தவர்கள் அல்லது செல்வந்தர்களாக இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் சம்பாதித்து அதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்லும் சாதராண ஏழை, எளிய மக்கள் தான் இந்திய முஸ்லிம்கள் ஆவார்கள். சரியான கல்வி, உரிய வேலைவாய்ப்பு, நல்ல பொருளாதார மேம்பாடு எதுவும் முஸ்லிம்களுக்கு கிடைப்பது இல்லை. வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அல்லது வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகின்றன. நல்ல கல்வி மறுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் வாழும் வீடுகள் புல்டோசர் மூலம் இடித்து தள்ளுவது மிகப்பெரிய அநீதி அல்லவா. இந்த அநீதிக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதுதான் முஸ்லிம்கள் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வியாகும். 

=================================

No comments: