-
வரி பயங்கரவாதம் -
ஒன்றிய பா.ஜ.க. அரசு, கடந்த 2017-ஆம் ஆண்டு நாடு முழுவதும் சரக்கு மற்றும் சவை வரியை (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தியது. பா.ஜ.க. அரசின் இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு ஆரம்பம் முதலே பொருளாதார வல்லுநர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இந்த எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது. இதன் விளையாக நாட்டில் தொழில் துறை பெரிதும் நசிந்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் புள்ளிவிவரங்களுடன் கூறி வருகிறார்கள்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் கடும் பாதிப்பை சந்தித்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத காரணத்தால், வேலையின்மை பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ‘வரி பயங்கரவாதம்’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. வரி பயங்கரவாதம் என்ற சொல் தற்போது, நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
ஜி.எஸ்.டி.
ஒரு பார்வை:
உணவுக்கு வரி, உரங்களுக்கு வரி, விதைகளுக்கு வரி, இந்தியா முழுவதும் விவசாய கருவிகளுக்கு வரி, டீசல், பெட்ரோல் வரி என வரி உள்ளது. போக்குவரத்து வாகனங்களுக்கு 28 சதவீத வரி என அனைத்துக்கும் வரி கட்ட வேண்டியுள்ளது. தற்போது நாட்டில் உள்ள 90 சதவீத பொருள்களுக்கு வரி இருக்கிறது. ஏழை எளிய மக்களிடமிருந்து ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஜி.எஸ்.டி. தொகை பெறப்படுகிறது. இதுதான் உணவின் விலை அதிகரித்ததற்குக் காரணம்.
விலையேற்றத்தால் அவதியுறும் மக்கள் தங்கள் வீடுகளில் உணவின் அளவை பாதியாகக் குறைத்துவிட்டார்கள். 75 சதவீத இந்தியர்களால் ஆரோக்கியமான உணவைப் பெற முடிவதில்லை. இந்திய மக்கள் பலரும் பசியில் வாடுகின்றனர். உலகளாவிய பசி குறியீடு தரவரிசையில் 2014-ல் 120 நாடுகளில் 55-வது இடத்தில் இருந்த இந்தியா, 2023-ல் 125 நாடுகளில் 111-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் 6 கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
பற்பசை, சோப்பு, ஷேவிங் பொருட்கள், ஹேர் ஆயில், ஷாம்பூ, முகப்பவுடர், கிரீம், கைக்கடிகாரம், உணவு உள்ளிட்டப் பொருட்களுக்கு தலா 18 சதவீத வரி, டூத் பிரஷ்க்கு 5 சதவீத வரி, ஆடைகள், வாடகை கார், ஆகியவற்றிற்கு 5 முதல் 12 சதவீதம் வரி, எழுதுக்கோலிற்கு 12 சதவீதம், ஸ்டேஷனரிக்கு 18 முதல் 28 சதவீதம் வரி, மின்விசிறிக்கு 18 சதவீதம் வரி என பொதுமக்கள் வரி செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
பொதுவாக நாட்டில் வாழும் மக்களிடையே நேரடி வரி மூலம் மட்டும் இல்லாமல் மறைமுகமாகவும் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. அப்படி, மறைமுகமாக வசூல் செய்யப்படும் வரியாக ஜி.எஸ்.டி. இருந்து வருகிறது. மக்களுக்கு தெரியாமலேயே மக்களிடம் இருந்து வரி வசூல் செய்யப்படுகிறது. ஒரு ரூபாய் வருவாய் ஈட்டினால், சுமார் 55 பைசா வரியாக சென்று விடுகிறது என புள்ளிவிவரங்களை சுட்டிக் காட்டி, சமூக ஆர்வலர்கள், பொருளாதார வல்லுநர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ராகுல் காந்தி குற்றச்சாட்டு:
எனவே தான், இந்த ஜி.எஸ்.டி. முறையை ஆரம்பம் முதல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ஒன்றிய அரசின் வரி விதிப்பு குறித்து அண்மையில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஒன்றிய அரசு "வரி பயங்கரவாதத்தில்" ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி தனது பெரிய கார்ப்பரேட் "நண்பர்களின்" செல்வத்தை அதிகரிக்க நடுத்தர வர்க்கத்தின் முதுகை உடைப்பதாக அவர் விமர்சனம் செய்து குற்றம் சாட்டினார். மேலும், கார்ப்பரேட் வரி வசூலை விட, தனிநபர் வருமான வரி வசூல் அதிகம் என்று ஒரு விளக்கப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். ஒன்றிய அரசு கார்ப்பரேட் 'நண்பர்களை' விலையாகக் கொடுத்து நடுத்தர வர்க்கத்தை சுமையாக்குகிறது என்றும் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
"வரி பயங்கரவாதம்' என்பது பா.ஜ.க. ஆட்சியின் ஆபத்தான முகம். இதுதான் உண்மை. இந்தியாவில், இன்று வரி இலக்கு முழுவதுமாக வருமானத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கம், அவர்களின் சம்பளம் பல ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை. வருமானம் அப்படியே உள்ளது. வருமான வரி பெருமளவில் அதிகரித்து வருகிறது. "பயங்கர பணவீக்கத்தின் இந்த காலகட்டத்தில், எல்லாவற்றுக்கும் அதிக ஜி.எஸ்.டி. செலுத்தி பிழைக்கும் நடுத்தர மக்கள் சிந்திக்க வேண்டும். உங்கள் வருமானம் பெரிய கார்ப்பரேட்கள் அல்லது வணிகர்களின் வருமானத்தை விட அதிகமாக இருக்கிறதா? உங்களுக்கு அரசாங்க வசதிகளால் ஏதேனும் சிறப்பு பலன் கிடைக்கிறதா? இல்லை, அப்படியானால் உங்களிடமிருந்து ஏன் இந்த கண்மூடித்தனமான வரி வசூலிக்கப்படுகிறது?" என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
"நீங்கள் (மக்கள்) பயமுறுத்தப்படும்போது, அவர்களின் (அரசாங்கத்தின்) விருப்பத்தை திணிப்பதன் மூலம் உங்கள் பாக்கெட் வெட்டப்படுகிறது, இது 'வரி பயங்கரவாதத்தின்' சக்கரவியூகம்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, தனது 'நண்பர்களின்' செல்வத்தை காப்பாற்றவும் அதிகரிக்கவும் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் முதுகை உடைக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, “இந்த வரி பயங்கரவாதம் மற்றும் அநீதிக்கு எதிராக அனைத்து கடின உழைப்பாளி, நேர்மையான இந்தியர்களுடன் தாம் நிற்பதாக உறுதியுடன் கூறியுள்ளார்.
மாற்றம் அவசியம் தேவை:
தற்போது, ஜி.எஸ்.டி. முறையால் நாட்டு மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருவது தெளிவாக தெரிய வருகிறது. எனவே, மக்கள் நலன் பாதிக்காத வகையில் வரி விதிப்பு இருக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். நாட்டில் வாழும் 140 கோடிக்கும் அதிகமான மக்களில் பெரும்பாலான மக்கள், ஏழை மற்றும் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த சாதாரண மக்கள் ஆவார்கள். அதிக வரிச் சுமையைச் சந்திக்கச் சக்தி இல்லாதவர்கள். இதனை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டு, எளிமையான வரி முறையை அமல்படுத்த வேண்டும். வரி விதிப்பால், ஏழை, எளிய மக்கள் பாதிப்பு அடையாமல் இருக்க வழி வகைகளை உருவாக்க வேண்டும். அதன்மூலம் மட்டுமே, மக்களின் வாழ்க்கையில் ஒளி பிறந்து மகிழ்ச்சி உருவாகும். வேலைவாய்ப்புகள் பெரும். இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பிரச்சினையை சந்திக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்படாது.
-
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment