Saturday, August 10, 2024

கற்றல் மையங்களாக.....!

 கற்றல் மையங்களாக மஸ்ஜித்கள்: 

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள அக்பர் நகரின் அமைதியான சுற்றுப்புறம். அந்த அமைதியான சுற்றுப்புறச் சூழ்நிலையில், பள்ளிப் பைகளுடன் சிறுவர், சிறுமிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு அடுக்கு மஸ்ஜித்துக்கு செல்கின்றனர். அங்கு செல்லும் இந்த இளம் தளிர்கள், பாதணிகளை வெளியில் வைத்துவிட்டு, மிகவும் ஆர்வத்துடன் ஒரே நேரத்தில் முதல் மாடிக்கு ஏறுகிறார்கள். 

முதல் மாடிக்கு செல்லும் அவர்கள், அங்கே தங்கள் பைகளை கீழே வைத்து, பழுப்பு நிற காகிதத்தால் மூடப்பட்ட புத்தகங்களை வெளியே எடுத்து, பிரார்த்தனை கம்பளங்கள் மீது அமைக்கப்பட்ட சிறிய படிப்பு மேசைகளை நோக்கி நடக்கிறார்கள். வெள்ளை பலகைகளில் பரந்த புன்னகையுடன் அவர்களுக்காக மூன்று இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். மஸ்ஜித் இமாம் அஸர் (மாலை) தொழுகையை முடித்தவுடன், இளம் தளிர்களுக்கான வகுப்புகள் தொடங்குகின்றார்.

மஸ்ஜித் என்று நினைக்கும் போது வழிபாட்டு முறையும் அரபு மொழியும் நினைவுக்கு வரும். இருப்பினும், இத்தகைய வழிபாட்டுத் தலங்களின் வலைப்பின்னல் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கும் மக்தாப்களாக (பகுதிநேரப் பள்ளிகளாக) மாறியுள்ளன.

கல்விக்கு முக்கியத்துவம்:

இஸ்லாமிய மார்க்கம் கல்விக்கும் அறிவுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கமாகும். அறிவைத் தேடுவதை இஸ்லாம் ஒரு கடமையாகக் கருதுகிறது. 'அறிவைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்' என்று இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். கல்வி ஒரு விருப்ப முயற்சி மட்டுமல்ல, ஒருவரின் மத நடைமுறையின் முக்கிய அங்கமாகும். 

"கல்வியை தேடும் வழியில் ஒருவன் நடந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்திற்கு செல்லும் வழியாக அதை ஆக்குகின்றான். மலக்குகள், கல்வியை தேடுபவனை திருப்தியுற்று தங்களின் இறகுகளை தாழ்த்துகின்றனர். ஒருவர் கல்வியை எடுத்துக் கொண்டால், அவர் மாபெரும் பாக்கியத்தை எடுத்துக் கொண்டவர் ஆவார்" என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதன் மூலம், ஒருவருடைய வாழ்க்கையில் கல்வி எவ்வளவு முக்கியத்துவமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். 

ஏக இறைவனின் திருவாக்கான திருமறையில், "என் இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக!' என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக" (திருக்குர்ஆன் 20:114) இறைவன் அறிவுறுத்தி இருப்பதன் மூலம், கல்விக்கு இஸ்லாமிய மார்க்கம் மிகமிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பதை புரிந்துகொள்ளலாம். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இஸ்லாமிய குடும்பங்களில் கல்வி குறித்து மிகப் பெரிய அளவுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகிறது. ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், அவருக்கு கல்வியறிவு மிகவும் முக்கியம். இதை அறிந்தும் அறியாமல் முஸ்லிம்கள் இருந்து வரும் நிலையில், தற்போது அவர்கள் மத்தியில் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு மஸ்ஜித் நிர்வாகம் கற்றல் குறித்து இளம் தளிர்கள் மத்தியில் அழகிய முறையில் பிரச்சாரம் செய்து வருகிறது. அவர்களின் அறிவுப்பசிக்கு தீனி போட்டு வருகிறது. 

கற்றல் மையம்:

ஹைதராபாத்தில் உள்ள அக்பர் நகரில் நிறைய மஸ்ஜித்துக்கள் இருந்து வருகின்றன. பழைய நகரமான இங்கு வசிக்கும் மக்கள் மத்தியில் கற்றல் குறித்தும், கல்வி குறித்தும் மிகப் பெரிய அளவுக்கு அக்கறை இல்லாமல் இருந்து வந்தது. இதனை மாற்றி அமைத்து, குழந்தைகள் மத்தியில் மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோர்களின் மத்தியிலும் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அங்குள்ள சில இளைஞர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு தற்போது அதில் ஓரளவுக்கு வெற்றியையும் பெற்று இருக்கிறார்கள். 

இங்குள்ள மஸ்ஜித் ஒன்று புத்திசாலித்தனமாக மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கும் மக்தாப்களாக (பகுதிநேரப் பள்ளிகளாக) மஸ்ஜித் மாறியுள்ளது. இங்கு அனைவருக்கும் இலவச கல்வியை வழங்குகிறது. கணிதம், அறிவியல், ஆங்கிலம், தெலுங்கு போன்ற பாடங்கள், இளம் தளிர்களுக்கு கற்று தரப்படுகின்றன. மாணவர்களுக்கு எளிய முறையில் கல்வியை சொல்லித்தர தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு குழந்தைகளுக்கு எத்தகைய முறையில் கல்வியை போதிக்க வேண்டும் என்பதையும் எப்படி அவர்களை ஆதரித்து அரவணைப்பது என்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆர்வத்துடன் கல்வி பயிலும் தளிர்கள்:

அமைதியான சுற்றுப்புறத்தில் உள்ள மஸ்ஜித்தை நோக்கிச் பள்ளியை செல்லும் குழந்தைகள், இரண்டு அடுக்கு கொண்ட அந்த மஸ்ஜித்திற்கு நுழைந்து, நுழைவாயியில் தங்கள் காலணியை கழற்றிவிட்டு, பின்னர், முதல் மாடிக்கு ஏறுகிறார்கள். அங்கே தங்கள் பைகளை கீழே வைத்து, பழுப்பு நிற காகிதத்தால் மூடப்பட்ட புத்தகங்களை வெளியே எடுத்து, பிரார்த்தனை கம்பளங்கள் மீது அமைக்கப்பட்ட சிறிய படிப்பு மேசைகளை நோக்கி நடக்கிறார்கள். அங்கு வெள்ளை பலகைகளில் பரந்த புன்னகையுடன் அவர்களுக்காக மூன்று இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். 

பின்னர் அஸர் தொழுகை முடிந்தவுடன், குழந்தைகளுக்கான பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. மார்க்கக் கல்வி மட்டுமல்லாமல், உலகக் கல்வியும் இங்கு மிக அழகிய முறையில், குழந்தைகள் மிகவும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் சொல்லித் தரப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மஸ்ஜித் கற்றல் மையத்திற்கு வரும் குழந்தைகள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கல்வியில் தங்களது கவனத்தை செலுத்துகிறார்கள். இந்த குழந்தைகளின் ஆர்வத்திற்கு மேலும் தீனி போடும் வகையில், அவர்களுக்கு பாடங்கள் போதிக்கப்படுகின்றன. 

பாரம்பரிய தொடர்பு:

மஸ்ஜித்துகளில் கல்வி சொல்வி தருவது இஸ்லாமிய பாரம்பரியமான தொடர்புடையது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கட்டிய மஸ்ஜிதுந்நபவி மஸ்ஜித் எப்படி இருந்தது என்பதை நாம் தெரிந்து கொண்டால், கல்விக்கு எந்தளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். 

மஸ்ஜிதுந்நபவி மஸ்ஜித், கல்விக் கூடமாக, பண்புப் பயிற்சியின் பட்டறையாக, ஏழைகளின் தங்குமிடமாக, அநாதைகளுக்கு அடைக்கலமாக , ஆதரவற்றோர்க்கு ஆதரவாக, கைதிகளை அடைக்க சிறைச் சாலையாக, நீதிமன்றமாக, ஆலோசனை அரங்கமாக , நாடாளுமன்றமாக , மருத்துவமனையாக , வழிப்போக்கர்களின் கூடாரமாக, முஸ்லிம் அல்லாதவருக்கு இஸ்லாத்தைச் சொல்லும் அழைப்பு மையமாக, மார்க்க அறிஞர்களை உருவாக்கும் மதரஸாக்களாக, ஜகாத்தை திரட்டி விநியோகிக்கும் இடமாக, போர்க் கனிமத்துப் பொருள்களை பங்கு வைத்துக் கொடுக்கும் மைதானமாக, ராணுவத் தளமாக, விளையாட்டுத் திடலாக, மார்க்கத் தீர்ப்பு வழங்கும் தீர்ப்பிடமாக, பொருளியல் வாழ்வியல் பிரச்னைக்கு தீர்விடமாக எனப் பலப் பரிமாணங்களில் மஸ்ஜிதுந்நபவி மஸ்ஜித் இருந்தது. 

இதன்மூலம் தொழுகை நடத்த மட்டுமே மஸ்ஜித்துகள் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் மாறாக கற்றல் மையங்களாக இயங்கி வந்தன என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த இஸ்லாமிய பாரம்பரியம் உலகின் பல நாடுகளில் தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில், ஹைதராபாத் அக்பர் நகரின் மஸ்ஜித்தில் மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியும் சொல்லித் தரப்படுகிறது. இதன்மூலம் இங்குள்ள மஸ்ஜித்துகள் இப்போது துடிப்பாக மாறியுள்ளன. கற்றல் மையங்களாக உருவாகியுள்ளன.  இந்த கற்றல் மையங்களில் உள்ளூர் மாணவர்கள் பலன் பெறுகின்றனர். அவர்களிடையே கணிதம், அறிவியல், ஆங்கில அறிவு விரிவடைகிறது. கல்வி எல்லைகள் விரிவடைகின்றன. ஹைதராபாத் அக்பர் நகரில் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி நாடு முழுவதும் உள்ள மஸ்ஜித்துகளிலும் உருவாக்க வேண்டும். மஸ்ஜித்துகள் வழிப்பாட்டு மற்றும் அழகிய கற்றல் மையங்களாக மாற வேண்டும். இதன்மூலம் இஸ்லாமிய மார்க்கம் குறித்து நல்ல புரிந்துணர்வு இளம் சிறார்கள் மத்தியில் ஏற்பட்டு, ஒரு அழகிய, ஒழுக்கமான, ஏக இறைவனுக்கு பணிந்து வாழும் சமுதாயம் உருவாக்கும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: