Thursday, August 29, 2024

ஆலோசனைகள் வரவேற்பு...!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்தஆலோசனைகள்  பொதுமக்கள் வழங்கலாம்-நாடாளுமன்றக் கூட்டுக்குழு அறிவிப்பு


புதுடெல்லி, ஆக.30-ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சட்டம் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், இ.யூ.முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

முதல் கூட்டம்:

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில், மசோதா குறித்து குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்தனர். இதையடுத்து வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை அரசு கையகப்படுத்தாது என்றும் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்றும், நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பால் விளக்கம் அளித்து இருந்தார்.

ஆலோசனைகள் வரவேற்பு:

இந்நிலையில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கலாம் என நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு மசோதா தொடர்பாக விரிவான ஆலோசனைகளையும், கருத்துகளையும் பொதுமக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும், வரவேற்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் என அனைத்து தரப்பிடம் இருந்தும் ஆலோசனைகள் வழங்கலாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆலோசனைகள் ஆங்கிலம் மற்றும்இந்தி மொழியில் இரண்டு பக்கங்கள் கொண்டு இருக்க வேண்டும், இந்த ஆலோசனைகள் அனைத்தும் மக்களவை செயலகத்தின் இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அனுப்ப வேண்டிய முகவரி:

அதன்படி, Joint Secretary (JM) Lok Sabha Secretariat, Room No.440, Parliament House Annexe, New Delhi-110 001 என்று முகவரிக்கு ஆலோசனை அடங்கிய கடிதங்களை அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்கள் 23034440, 23035284 மற்றும் ஃபேக்ஸ் எண் 23017709 மூலமாகவும் இ.மெயில் முகவரி jpcwaqf-Iss@sansad.nic.in என்று முகவரி மூலமாகவும் ஆலோசனைகளை 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரகசியம் பாதுகாக்கப்படும்:

வக்பு வாரிய சட்டத் திருத்தம் குறித்த முழு விவரங்கள் மக்களவை இணையதளத்தில் இருப்பதாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அனுப்பும் ஆலோசனைகள், கருத்துகள் குறித்த ரகசியம் காக்கப்படும் என்றும், எனவே பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் ஆலோசனைகளை வழங்கலாம் என்றும், மக்களவைச் செயலகம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: