Friday, August 9, 2024

உயர்ந்த உள்ளங்கள்….!

 

இரண்டு உயர்ந்த தாய் உள்ளங்கள்….!

ஏக இறைவன் அனைத்து உயிரினங்களுக்கும் ‘தாய்’ என்னும் மிகப்பெரிய அருட்கொடையை வழங்கி அற்புதம் நிகழ்த்தி வருகின்றான். குறிப்பாக, மனித சமுதாயத்திற்கு தாய் மூலம் கிடைக்கும் அன்பு, அரவணைப்பு, பணிகள் ஆகியவற்றை எப்போதும் அளவிடவே முடியாது. இதன்மூலம் ஒவ்வொரு மனிதனும், இந்த அற்புதமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டே இருக்கின்றான். எனவே தான் இஸ்லாத்தில் ‘தாய்க்கு’ அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாயின் பெருமையை எடுத்து கூறியபோது, ‘தாயின் காலடியில் சொர்க்கம் உண்டு’ என்று மிக அழகாக கூறியிருக்கிறார்கள். இதற்கு, தாயின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்பது பொருளாகாது. மாறாக, தாய்மையை மதித்து அரவணைத்து, அன்பு செலுத்தி அம்மா என்ற தாய்க்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாய், தந்தை குறித்து இப்படி கூறியிருக்கிறார்கள். ‘தாய், தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தபிறகும் அவர்களுக்கு நன்மை செய்வதன் மூலம் யார் சொர்க்கம் செல்லத் தவறிவிட்டானோ அவன் பேரிழப்புக்குரியவன்’. என்ன ஒரு அழககான அற்புதமான வார்த்தைகள்.

ஏக இறைவன் கூட தனது திருமறையில், பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு அறிவுறுத்தி இருக்கிறான். இப்படி, மிக அழகான உறவாக, பெருமையாக தாய் இருந்து வருகிறார். உலகில் பல்வேறு சமயங்களில் மனித உறவுகளை தாண்டி, ஒருசில தாய்மார்கள், காட்டும் அன்பு, செய்யும் செயல்கள் நம்மை வியப்பு அடைச் செய்கின்றன. அந்த வகையில், அண்மையில் இரண்டு தாய்மார்கள், காட்டிய அன்பு, பேசிய வார்த்தைகள், இந்தியா-பாகிஸ்தான் மக்களை மட்டுமல்லாமல், உலக மக்களின் கவனத்தைதையும் ஈர்த்து கவர்ந்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வரலாறு:

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் கைப்பற்ற, இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89 புள்ளி 45 மீட்டர் தூரம் எறிந்தார். அர்ஷத் நதீம் 92 புள்ளி 97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார். கிரெனடா நாட்டின் ஆண்டன்சன் பீட்டர்ஸ் 88 புள்ளி 54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

நீரஜ் சோப்ரா முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தனது அற்புதமான திறமையின் மூலம் நீரஜ் சோப்ரா இந்திய நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையை தேடி தந்து வருகிறார்.

தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் பதக்கம் வென்று சாதனை புரிந்து இருப்பதை இருநாட்டு மக்களும் பெருமையாக கொண்டாடி வருகிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் மத்தியில் ஒருவித கசப்பை, வெறுப்பை விதைக்க சில சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. ஆனால், இரு நாட்டு மக்களும், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி, நல்ல நட்புறவுடன் இருக்கவே விரும்புகிறார்கள். இதற்கு, நீரஸ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீமின் வெற்றி நல்ல உதாரணமாக இருந்து வருகிறது.

நீரஜ் சோப்ராவின் தாய் பெருமை:

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா, வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து கருத்து கூறியுள்ள அவரது தாயார் சரோஜ் தேவி, "வெள்ளி பதக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்று தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீம் கூட என் மகன்தான். அந்த வெற்றிக்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது. ஒவ்வொரு வீரரும் கடினமான உழைப்பிற்கு பிறகே அந்த இடத்திற்கு வருகிறார்கள். " என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்று விட்டாரே என்று நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி வேதனை அடையவில்லை. மாறாக, தங்கப்பதக்கம் வென்ற அர்ஷத் நதீம் கூட என் மகன்தான். அந்த வெற்றிக்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது’ என்று கூறியிருப்பதை கேட்கும்போது, நல்ல உள்ளங்கள் எப்போதும் பெருமையுடன் நடந்துகொள்ளும் என்பதை உணர முடிகிறது. இதன்மூலம் நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி, இந்திய மக்களின் இதயங்களை மட்டுமல்லாமல், பாகிஸ்தான் மக்களின் இதயங்களிலும் மிக உயர்ந்த இடத்தில் அமர்ந்துவிட்டார்.

அர்ஷத் நதீம் தாயின் அன்பு:

வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் தாய், தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் கூட தன் மகன்தான் என்று கூறி இந்திய மக்களின் அன்பை உலகிற்கு எடுத்துக் கூற, அர்ஷ்த் நதீமின் தாய், நீரஜ் சோப்ராவை புகழ்ந்து கூறி, தாமும் ஒரு அன்பு தாய் தான் என்பதை நிரூபித்துள்ளார். ‘வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவும் என்னுடைய மகன் தான். அவர் நதீமின் நண்பர், சகோரரும் கூட. விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் ஒரு அங்கம்தான். நிறைய பதக்கங்கள் வெல்ல இறைவன் நீரஜை ஆசிர்வதிக்கட்டும். அவர்கள் இருவரும் சகோதரர்கள் போன்றவர்கள். நான் நீரஜுக்காக பிராத்திக்கிறேன்’ என மிக அழகாக அனைவரும் பெருமை அடையும் வகையில் நதீமின் தாய் கூறியிருக்கிறார்.  

விளையாட்டில் வெற்றி, தோல்வி இயல்பானது. இதை இரண்டு வீரர்களின் தாய்கள் மிக நன்கு அறிந்து இருக்கிறார்கள். எனவே தான் அனைவரும் பெருமை கொள்ளும் வகையில், தங்களது பிள்ளைகளின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இங்கு இந்தியா, பாகிஸ்தான் என்ற பாகுபாடு ஏற்படவில்லை. நாம் அனைவரும் சகோதரர்களே என்ற உணர்வே அந்த நல்ல உள்ளம் கொண்ட இரண்டு தாய்க்கும் ஏற்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக தான், நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் ஆகிய இரண்டு பேரையும் இரண்டு தாய்மார்களும், தங்களது பிள்ளையாகவே கருதி இருக்கிறார்கள்.

கடின உழைப்பே வெற்றிக்கு வழி:

பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கமும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கமும் தங்களது திறமையின் மூலம் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த திறமையை வளர்த்துக் கொள்ள அவர்கள் செய்த முயற்சிகள், கடின உழைப்பு ஆகியவை ஒவ்வொரு இளைஞர்களுக்கு நல்ல பாடங்களாக இருந்து வருகின்றன. இருவரும் மிகப்பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. சாதாரண நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, மற்றும் அர்ஷத் நதீம், இன்று உலகம் வியக்கும் வகையில் சாதனை நிகழ்த்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக தான், தங்களின் வெற்றியை ஒருவர் மற்றொருவர் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்கிறார்கள்.

தெளிவாக இருக்கும் மக்கள்:

நாம் எப்போதும் விளையாட்டை, விளையாட்டாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டிப் போட்டியை வைத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய அளவுக்கு வெறுப்பு விதைக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இரு நாட்டு மக்களில் சிலர் இப்படி நடந்துகொள்வது மிகவும் வேதனை அளிக்கிறது. இதன்மூலம், இருநாட்டு மக்களிடையே ஒருவித கசப்பு ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இரு நாட்டு மக்களில் பெரும்பாலானோர் நல்ல உள்ளங்களை கொண்டு, சகோதர நேசத்துடன் இருக்கவே விரும்புகிறார்கள். வெறுப்பை விதைக்க விரும்பவில்லை. அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி மற்றும் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமின் தாய் ஆகிய இரண்டு நல்ல உள்ளங்கள் இருந்து வருகிறார்கள். தங்களது அழகிய செயல்கள் மூலம் உலகிற்கு இரண்டு பேரும் அன்பு என்ற கருத்தை கூறி, அதை மேலும் வலிமைப்படுத்தி இருக்கிறார்கள். அன்பு, சகோரத்துவத்தை மிக அழகிய முறையில் இரண்டு நாட்டு மக்கள் முன்பு எடுத்து கூறி இருக்கிறார்கள்.

-            எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: