Thursday, August 15, 2024

செவிலியர் சபீனா நேர்காணல்…!

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஷிஹாப் தங்ஙள்

மனிதநேய மையம் உருவாக்கிய வீர மங்கை…! 

 வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை துணிச்சலுடன் சென்று பாதுகாத்து, மையத்திற்கு பெருமைச் சேர்ந்த மனிதநேய பெண்மணி….!! 

தமிழக அரசின் வீர தீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது பெற்ற முஸ்லிம் செவிலியர் சபீனா….!!

 

-    மணிச்சுடர் நாளிதழக்கு அளித்த சிறப்பு நேர்காணல் -

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த துப்பு குட்டி பேட்டை பகுதியில் இயங்கி வரும் இ.யூ.முஸ்லிம் லீக் ஷிஹாப் தங்ஙள் மனிதநேய மையம் (IUML Shihab Thangal Centre for Humanity) என்ற தனியார் தொண்டு அமைப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி, மிகப்பெரிய சேவையை செய்து வருகிறது. நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களுக்கு சிகிச்சை மற்றும் பல்வேறு மருத்துவ உதவிகளையும் அளித்து வருகிறது.

இந்த மனிதநேய தொண்டு நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செவிலியராக முஸ்லிம் பெண்மணி சபீனா பணிபுரிந்து வருகிறார். தனது மனிதநேய பணிகளால் அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர், வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு, துணிச்சலுடன் சென்று சிகிச்சை அளித்து, பாதுகாத்து, தான் பணிபுரியும் ஷிஹாப் தங்ஙள் மனிதநேய மையத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.

இவரது துணிச்சல் மற்றும் மனிதநேய சேவையை பாராட்டி, தமிழக அரசின் சார்பில் சுதந்திர தினத்தன்று, வீர தீர செயல்களுக்கான கல்பனா சால்வா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருது பெற்று சென்னை சேப்பாக்கம் அரசின் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த செவிலியர் சபீனாவை, மணிச்சுடர் நாளிதழ் சார்பில் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அத்துடன், மணிச்சுடர் நாளிதழுக்காக சிறப்பு நேர்காணல் அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்டு செவிலியர் சபீனா அளித்த நேர்காணல் இதோ உங்கள் பார்வைக்கு:

ஷிஹாப் தங்ஙள் மனிதநேய மையம்:

 

நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். என்னுடைய மண வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால், தற்போது நான் என் பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய ஒரே பெண் தற்போது கோவையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் நீலகிரி இ.யூ.முஸ்லிம் லீக் ஷிஹாப் தங்ஙள் மனிதநேய மையத்தில் (IUML Shihab Thangal Centre for Humanity) பணிபுரிந்து வருகிறேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று நல்ல சிறப்பான மருத்துவச் சேவையை இந்த மையம் அளித்து வருகிறது. இத்தகைய மனிதநேய மையத்தில் பணிபுரிவது எனக்கு பெருமையாக இருந்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் வயநாடு நிலச்சரிவு மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து சிகிக்சை அளிக்க வேண்டும் என எங்களுக்கு மனிதநேய மையத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, நாங்கள் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க சென்றோம்.

துணிச்சலுடன் முடிவு:

 

இந்த குழுவில் இருந்த மூன்று பேரில் ஒரே பெண் செவிலியர் நான் தான். சூரல் மலைப்பகுதிக்கு சென்றபோது, அதிகமாக பாதிக்கப்பட்ட முண்டக்கை கிராமத்தில்  பெண்களுக்கு சிகிச்சை அளிக்க பெண் செவிலியர் வேண்டும் என ராணுவத்தினர் கேட்டனர். அப்போது, நான் தைரியமாக ஆற்றை கடந்து சிகிச்சை அளிக்க முன்வந்தேன். சூரல்மலை பகுதியில் இருந்து முண்டக்கை பகுதிக்கு செல்லும் ஆற்றுப்பாலம் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், ஆற்றை கடந்து செல்வதற்கு ராணுவத்தினர் அந்தரத்தில் தொங்கியபடி செல்லும் ஜிப்லைன் அமைத்து அதன் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த ஜிப்லைன் மூலமாக ஆற்றைக்கடந்து செல்வதற்கு சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகும். ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும், தண்ணீருக்கு மேல் ஜிப்லைனில் தொங்கியபடி செல்வது ஆபத்தான செயலாகும். இதில் புதிதாக தொங்கி செல்வதற்கு அதிக மன தைரியம் வேண்டும் என்பதால் அது குறித்து என்னிடம் ராணுவத்தினர் கருத்து கேட்டனர். ஆனால், நான் ஜிப்லைனில் தொங்கியப்படி ஆற்றைக்கடந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒப்புக்கொண்டேன். பின்னர், மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையுடன் ராணுவத்தினர் அமைத்த ஜிப்லைனில் தொங்கியபடி முண்டக்கை பகுதிக்கு சென்றேன்.

அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் தங்கி இருந்து நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தேன். பின்னர், மீண்டும் அங்கிருந்து ஜிப்லைன் மூலமாக ஆற்றை கடந்து வந்தேன். தொடர்ந்து, சூரல்மலை பகுதியில் தங்கியிருந்து நிலச்சரிவில் காயமடைந்து மீண்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தேன்.

கூடலூர் மையத்தில் பெற்ற அனுபவம்:

 

கூடலூர் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடைசி நிலையில் இருக்கும் பலருக்கு நேரடியாக சென்று சிகிச்சை அளித்த அனுபவம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என தைரியம் என்னிடம் ஏற்பட்டது. பின்னர், முண்டக்கை பகுதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொருவராக ஜிப்லைன் மூலம் ஆற்றை கடந்து சூரல்மலை முகாமிற்கு கொண்டு வர சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் ஆகும். இதனால், முண்டக்கை பகுதியில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு பெண் செவிலியர் வேண்டும் என கேட்டதும் உடனடியாக நான் முன்வந்து அப்பகுதிக்கு சென்றேன்.

ஜிப்லைனில் மருந்துகள் அடங்கிய பையை கையில் பிடித்தபடி சென்றதால் கீழே வெள்ளப்பெருக்கை பார்க்கும் போது தலை சுற்றல் ஏற்பட்டது. முண்டக்கை பகுதிக்கு சென்றதும் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தேன். இதில், முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்ட காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தேன். சில நேரம் பாதிக்கப்பட்டவர்களுடன் இறந்தவர்களின் உடல்களையும் ஒரே வாகனத்தில் கொண்டு வருவார்கள். அந்த உடல்களை பார்ப்பதற்கு அச்சம் ஏற்பட்டாலும், அவர்களுக்கு எந்தெந்த பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை நேரில் பார்த்தேன். சுமார் 35க்கும் மேற்பட்டவர்களுக்கு கையில் கொண்டு சென்ற மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க முடிந்தது.

நான் எப்போதும் தைரியமாக இருக்கும் பெண்மணி. பள்ளி பருவம் முதல் கொண்டே எனக்கு வீர தீர செயல்களில் ஈடுபடுவதில் மிகவும் ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக, எந்தவித அச்சமும் இல்லாமல் வயநாடு பேரிடர் பணிகளில் துணிச்சலுடன் பணிபுரிய முடிந்தது.

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் எனக்கு அழைப்பு வந்தபோது, என்னை அங்கு போக வேண்டாம் என சிலர் அறிவுறுத்தினார்கள். ஆனால், நான் மற்றும் என்னுடன் வந்த இரண்டு செவிலியர்கள் அதை கேட்கவில்லை. இங்கே இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணி செய்ய விரும்பினோம். எந்தவித அச்சமும் இல்லாமல், துணிவுடன் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் நாங்கள் செய்தோம்.

வயநாட்டிற்கு செல்லும்போது மனநிலையில் எந்தவித அச்சமும் இருக்கவில்லை. துணிவுடன் சென்று நோயாளிகளை சந்திக்க வேண்டும் என்ற மனநிலையே இருந்தது. இப்போது நினைவுக்கும் போது பயமாக உள்ளது. ஆனால், அன்று அப்படி பயம் வரவில்லை. துணிவு தான் வந்தது. மேலே செல்லும்போது கொஞ்சம் பயம் இருக்கதான் செய்தது.

பெருமை அளிக்கும் கல்பனா சாவ்லா விருது:


எனது மனிதநேய சேவைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, தமிழக அரசின் சார்பில் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டு, அதை சுதந்திர தினத்தன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இருந்து நேரில் பெற்றது பெருமையாக உள்ளது. மேலும், தமிழக அமைச்சர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். ஊட்டியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்த பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக அரசு சார்பில் நினைவு பரிசு வழங்கி, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேறு உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியது மகிழ்ச்சி அளித்து. வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்தது இந்த தருணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

மருத்துவ சேவைக்கு பாராட்டு:

 

தன் உயிரையும் பொருட்படுத்தாது, துணிச்சலாக செயல்பட்டு, வயநாடு நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு உதவி செய்த செவிலியர் சபீனாவின் மருத்துவ சேவைக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் சபீனாவிற்கு பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் குறித்தும் அவர்களின் துணிச்சல் மற்றும் தைரியம் குறித்தும் போலியாக கருத்துகள் பரப்பப்படும் நிலையில், கல்வி மற்றும் துணிச்சல் மூலம் செவிலியர் சபீனா, முஸ்லிம் பெண்கள் குறித்த பொய்யான கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அத்துடன், தாம் பணிபுரியும், நீலகிரி இ.யூ.முஸ்லிம் லீக் ஷிஹாப் தங்ஙள் மனிதநேய மையத்திற்கு, தனது மனிதநேய சேவை மூலம் பெருமையை சேர்த்துள்ளார். அதற்காக செவிலியர் சபீனாவை மீண்டும் ஒருமுறை வாழ்த்திவிட்டு விடைப் பெற்றோம்.


-    சந்திப்பு: சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

No comments: