Friday, August 23, 2024

அசாம் முஸ்லிம்கள்....!

 "அசாமில் முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள்"

இந்தியாவில் வாழும் சுமார் 25 கோடி முஸ்லிம்கள், தங்களது தாய் நாட்டை நேசித்து, அதன் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். தாய் நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி என்பதை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்து இருப்பதால் தான், ராணுவத்தில் சேர்ந்து நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளில் ஈடுபட்டு, தங்களது உயிரை தியாகம் செய்கிறார்கள். தாய் நாட்டை, விரோதிகளிடம் இருந்து பாதுகாக்கிறார்கள். மேலும் இந்திய முஸ்லிம்கள், பல்வேறு துறைகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தி, தாய் நாட்டிற்கு தொடர்ந்து பெருமைச் சேர்த்து வருகிறார்கள். இருந்தும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் முஸ்லிம்களை குறிவைத்து அவர்களுக்கு எதிராக பிரச்சினையை எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால், கடும் நெருக்கடிகள் மற்றும் சவால்களை சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். 

அசாம் முஸ்லிம்கள்:

நாடு முழுவதும் குறிப்பாக, வட மாநிலங்களில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாள்தோறும் செய்தித்தாள்கள் மூலம் நாம் பல வேதனைத் தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் வாழும் முஸ்லிம்கள் நாள்தோறும் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது. 

அந்த மாநிலத்தில் தற்போது பா.ஜ.க. ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. மாநில முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இருந்து வருகிறார். இவர் ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார். ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் மதரஸாக்களை ஒழித்துக் கட்ட திட்டங்களை அரங்கேற்றி வருகிறார். பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என மிரட்டுகிறார். 

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “1951ம் ஆண்டு அசாமில் 12 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள்தொகை, தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று பொய்யான ஒரு தகவலை கூறியுள்ளார். உண்மையில், 1951-ல், அசாமில் முஸ்லிம் மக்கள் தொகை 24 புள்ளி 68 சதவீதமாக இருந்தது. 2001ல் 30 புள்ளி 92 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34 புள்ளி 22 சதவீதமாக இருந்தது. முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா மற்றும் பா.ஜ.க. முஸ்லிம்களை வெறுக்கும் காரணமாக இதுபோன்ற தவறான புள்ளிவிவரங்களை, பொய்யான அளித்து வருகிறார். 

அசாம்-சில தகவல்கள்:

அசாமில் இஸ்லாம் இரண்டாவது பெரிய மதமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அறிக்கையின்படி, இஸ்லாமும் அசாமில் வேகமாக வளர்ந்து வரும் மதமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அசாமின் மக்கள் தொகை சுமார் 3 கோடியே 11 லட்சத்து 69 ஆயிரத்து 272 ஆகும். இதில் 1 கோடியே 6 லட்சத்து 79 ஆயிரத்து 345 பேர் முஸ்லிம்கள்.

அசாம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்தபோது, ஆங்கிலேயர்களால் ஏராளமான புலம்பெயர்ந்த வங்காள குடியேற்றவாசிகளை அசாமிற்குள் கொண்டு வந்தனர். அதில் பெரும்பாலும் முஸ்லிம்கள். இந்த புலம்பெயர்ந்த வங்காளிகள் முன்பு அசாமில் இருந்த வங்காளர்களை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக ஊக்குவித்தனர். அசாமின் வளமான நிலம் மற்றும் அதன் பரந்த விரிந்த நிலம் அந்த காலகட்டத்தில் உள்ளூர் பழங்குடி மக்களால் மட்டுமே வசித்து வந்தது. பின்னர் வங்காள மாகாணகத்தில் இருந்து வந்த ஏராளமான நிலமற்ற புலம்பெயர்ந்த விவசாயிகள் அங்கு தங்கினர். இவர்களில் கிட்டத்தட்ட 85 சதவீதம் விவசாயிகள் முஸ்லிம்கள்.

வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் சட்ட விரோதமாக அசாமிற்கு வந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பிரச்சினைக்கு அப்போதைய பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் கீழ் அசாம் மாணவர்கள் அமைப்பின் தலைவர்கள் மற்றும் இந்திய அரசின் தலைவர்கள் அசாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் பிரச்சினை முடிவுக்கு வந்தது. 

வங்கதேசத்திலிருந்து வந்து அஸ்ஸாமில் குடியேறிய முஸ்லிம்கள் என்று அவர்களை ஒரு வரியில் சொல்லிவிடலாம். ஆனால், அவர்கள் அங்கு குடியேறியதற்கான வரலாறு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பாகிஸ்தான் பிரிவினையையொட்டி, வங்கதேசத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அஸ்ஸாம், திரிபுரா என இந்திய எல்லையோர மாநிலங்களில் குடியேறினர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

உண்மை நிலவரம் என்ன?

அசாமில் முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் வங்கதேசத்தில் இருந்து அதிகமான முஸ்லிம்கள் குடிபெயர்ந்து வருவதாகவும் பொய்யான தகவல்களை முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா கூறி வரும் நிலையில், உண்மை நிலவரம் என்ன? என்பது குறித்து கொஞ்சம் ஆய்வு செய்தால், பல உண்மை தகவல்கள் கிடைக்கின்றன. 

அசாமில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், கடந்த 1971-2014ஆம் ஆண்டுளில் அசாமில் வெளிநாட்டைச் சேர்ந்த 43 சதவீத இந்து மக்கள் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் (The Foreigners' Tribunals) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி வெளிநாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 613  இந்துக்கள் அசாமில் தங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்து பதிலில் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். 

அசாமில் சட்ட விரோதமாக குடியேறிவர்கள் குறித்து, கணக்கெடுப்பு நடத்த, கடந்த 1971ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், இந்த புள்ளிவிவரங்கள் தற்போது கிடைத்துள்ளன. அசாமின் கச்சார் மாவட்டத்தில் அதிகளவு வெளிநாட்டவர்கள் தங்கி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களில் இந்துக்களே அதிகம் என்பதும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

இப்படி வெளிநாடுகளைச் சேர்ந்த இந்து மக்கள் அதிகம் அசாமில் தங்கி இருக்கும் நிலையில், அசாம் பா.ஜ.க. அரசு, முஸ்லிம்களை குறிவைத்து பிரச்சாரம் செய்து வருவதும், வெளிநாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அதிகம் அசாமில் குடியேறி வருவதாகவும் புனைக் கதைகளை புனைந்து வருவதும், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், அசாம் பா.ஜ.க. அரசின் முஸ்லிம் விரோத மனப்பான்மை மற்றும் விரோதப் போக்கு என்பது தெளிவாக தெரிகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: