வரலாற்று புகழ்பெற்ற மும்பை ஜுமா மஸ்ஜித்.....!
உலகின் பல்வேறு நாடுகளில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு மஸ்ஜித்துகளுக்கும் ஒரு அழகிய வரலாறு இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் உள்ள மாநிலங்களில் இஸ்லாமிய பராம்பரியத்துடன் நல்ல கலை நுட்பத்துடன் பல மஸ்ஜித்துகள் கட்டுப்பட்டுள்ளன. இஸ்லாமிய கட்டிக் கலை மற்றும் பழமையான தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மஸ்ஜித்துகள், அனைத்து தரப்பு மக்களின் மனங்களையும் கவர்ந்து வருகின்றன.
டெல்லி, லக்னோ, போபால், சென்னை, ஹைதரபாத், கொல்கத்தா என இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள பல மஸ்ஜித்துகளுக்கு ஒரு சிறப்பான வரலாறு இருந்து வருகிறது. அந்த வகையில் மும்பையில் அனைத்து மக்களின் இதயங்களை கவர்ந்து, புகழ்பெற்று இருக்கும் ஜுமா மஸ்ஜித்திற்கு இருக்கும் சிறப்பையும் அதன் வரலாற்றையும் நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
இயற்கையான நிலத்தடி நீரூற்று குளத்தில்:
சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த மும்பை ஜுமா மஸ்ஜித், இயற்கையான நிலத்தடி நன்னீர் நீரூற்றுகளால் உருவாக்கப்பட்டுள்ள குளத்தின் மேல் சிறப்பான, அழகான கட்டிக் கலையுடன் எழுப்பட்டுள்ளது. இந்த குளம் மற்றும் அதன் ஆழத்தில் ஒரு சுவாரஸ்யமான கதையை கொண்டுள்ளது. இந்த குளம், ஒரு பணக்கார பாம்பே நில உரிமையாளர் மோமின் சாஹாப் என்பவருக்கு சொந்தமானது. அந்த நில உரிமையாளர் கடந்த 1775-ஆம் ஆண்டில் குடிமக்கள் குழுவிற்கு இந்த குளத்தை 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு, பரந்து விரிந்த மஸ்ஜித்தின் பணி அதே குளத்தைச் சுற்றியும் மேலேயும் தொடங்கியது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு, மஸ்ஜித், 1802-இல் அதன் முதல் ‘ஜுமா நமாஸ்’ (வெள்ளிக்கிழமை பிரார்த்தனை) க்காக திறக்கப்பட்டது.
கடந்த 2020 மற்றும் 2021 கொரோனா பேரிடர் காலங்களை தவிர, இங்கு வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் ஈத் போன்ற பிற முக்கியதொழுகையின்போது சுமார் 6 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. 250 ஆண்டுகளாக சிறப்பாக பராமிரிக்கப்பட்டு, மக்களின் இதயத்தை கவர்ந்து வரும் இந்த ஜுமா மஸ்ஜித், மக்களால் நிதியளிக்கப்பட்ட பம்பாயின் முதல் ஜும்ஆ மஸ்ஜித் என்ற வரலாற்றை உருவாக்கியது.
ஒரு அழகிய வரலாறு:
ஜுமா மஸ்ஜித்தில் உள்ள குளத்தை வாங்குவதற்கும், 2 மினாரட்டுகளுடன் கூடிய அற்புதமான மஸ்ஜித்தைக் கட்டுவதற்கும், மயானம் இருக்கும் இடத்தைப் பெறுவதற்கும், அன்றைய 'சேத்ஜிகள்' (பணக்கார தொழிலதிபர்கள்) ஹம்சாபாய், இரு சகோதரர்கள் நாது பட்டேல் மற்றும் பிகான் பட்டேல் போன்றவர்கள் மிகப்பெரிய அளவுக்கு பங்களிப்பை வழங்கினர். சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் கூட ஒரு பைசாவைக் கொடுத்தனர். ஒரு பைசா என்பது அந்தக் காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பெரிய மதிப்பைக் கொண்டிருந்தது .
பின்னர், ஒரு பெரிய தொழிலதிபர், முஹம்மது அலி ரோகே-I, திடீரென்று இறந்த தனது இளம் மகளின் நினைவாக, ஜுமா மஸ்ஜித்தின் முதல் தளத்தை கட்டுவதற்காக ஒரு தொகையை நன்கொடையாக வழங்கினார். அதேநேரத்தில் அவரது மகன் முகமது அலி ரோகே-II, தனது பங்களிப்பை மற்றும் உழைப்பின் மூலம் செய்த பணிகளால், 1835-இல் மஸ்ஜித் கட்டி முடிக்கப்பட்டது.
மஸ்ஜித் செங்கற்கள் மற்றும் கற்களால் ஆனது. பிரதான கிழக்கு வாயில் பண்டைய தொட்டிக்கு செல்லும் ஒரு முற்றத்தில் திறக்கிறது. பர்மா தேக்கு மரங்களால், மஸ்ஜித் அலங்கரிகப்பட்டுள்ளது. மஸ்ஜித்தில் உள்ள நீரூற்று குளத்திற்கு செல்லும் ஒவ்வொரு படிகளும், யாருமே எதிர்பார்க்காத வகையில் கட்டப்பட்டுள்ளது. அங்கு விசுவாசிகள் தொழுகைக்கு முன் 'வாசு' (சடங்கு கழுவுதல்) செய்கிறார்கள்.
மஸ்தித் அஸ்திவாரங்களை தாங்கி நிற்கும் 16 கருங்கல் வளைவுகள் மற்றும் ஐந்து வரிசை மர தூண்களால் கட்டப்பட்ட மேல் தளம், ஒவ்வொன்றும் புனித நூல்களுக்கான கொள்கலனைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. 1802-ஆம் ஆண்டு ஜுமா மஸ்ஜித் திறக்கப்பட்டாலும், 1874 மற்றும் 1898ஆண்டுகளில், 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில், பின்னர்கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு சுவர்களில் பெரிய ஜன்னல்கள் உருவாக்கப்பட்டன.
1960-ஆம் ஆண்டில் ஒரு சிறிய 'மத்ரஸா' தொடங்கப்பட்டவுடன், அந்த பள்ளி இப்போது 10-ஆம் வகுப்பு வரை 600 ஆண்-பெண்களுக்கு நவீன கல்வியை வழங்கும் உர்தூ-ஆங்கில நடுத்தர கல்வி நிறுவனமாக உள்ளது.
பழமையான நூலகம்:
மஸ்ஜித்தில், 150 ஆண்டுகள் பழமையான நூலகம் உள்ளது. இதில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஆயிரத்து 500 அரிய கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. இந்த நூல்களில் பல 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவை இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்படுகின்றன.
மும்பை ஜுமா மஸ்ஜித்திற்கு செல்லும் ஒரு முஸ்லிமுக்கு ஆச்சரியமும், அற்புதமும் தென்படும். வசு செய்ய இருக்கும் குளத்தின் உள்ளே ஒரு ஆக்ஸிஜன் தொட்டி பொருத்தப்பட்டிருக்கும். இதனால் நீர் எப்போதும் சுத்தமாகவும் சுத்திகரிக்கப்படவும் வகையில் உள்ளது. இதை காணும்போது, உள்ளத்தில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அத்துடன், இந்த மஸ்ஜித் எப்போதும் குளுமையாகவே இருக்கும். அதற்கு ஏ.சி. காரணம் இல்லை,. மாறாக, குளத்தின் மேல் எழுப்பப்பட்ட மஸ்ஜித், அந்த குளத்தின் குளுமையை பெற்றுக் கொண்டு, தொழுகையாளிகளுக்கு குளுகுளு வசதியை இயற்கையாகவே செய்து தருகிறது. மஸ்ஜித்தில் ஏ.சி. பொருத்தப்படவில்லை என்பது தனித் தகவலாகும்.
சவுதி மன்னர் பார்வை:
இந்தியாவிற்கு கடந்த 1954-ஆம் ஆண்டு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட மன்னன் சவுத் பின் அப்துல் அஸிஸ், மும்பை ஜுமா மஸ்ஜித்திற்கு வருகை தந்து பார்வையிட்டு, தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஜுமா மஸ்ஜித் அறங்காவலர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த மும்பை ஜுமா மஸ்ஜித் தற்போது, உலக முழுவதும் இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது. உள்நாட்டிலும், அதனை காண மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா வலைத்தளங்களில் மும்பை ஜுமா மஸ்ஜித் முக்கியமாக பார்வையிடும் சுற்றுலா இடம் என குறிப்பிடப்பட்டு இடம் பெற்றுள்ளது.
கொரோனா காலத்தில்:
கொரோனா காலத்தில் மும்பை நகரம் வெறிச்சோடி இருந்தபோது, ஜுமா மஸ்ஜித் நிர்வாகம், தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. மஸ்ஜித்திக்குள் இருக்கும் பழமையான குளத்தில் தொழிலாளர்கள் குழு திங்கள்கிழமை முதல் பணியில் இறங்கி, 10 அடி ஆழமுள்ள குளத்தில் இறங்கி, தங்கமீன்கள், வெள்ளிமீன்கள் மற்றும் ஆமைகள் அனைத்தையும் பிடித்து தற்காலிக மீன் தொட்டிக்கு மாற்றி, மூடுபனி கலந்த சாம்பல் கலந்த பச்சை நீரை காலி செய்தது. இந்த பணி மிகச் சிறப்புடன் நடைபெற்று மக்களின் பாராட்டுகளை பெற்றது. 12 ஆண்டுகளில் இத்தகைய பணி முதல் முறை நடைபெற்றது என தொழிலாளர்கள் அப்போது தெரிவித்தனர். தொழுகைக்காக வரும் இஸ்லாமிய விசுவாசிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மஸ்ஜித் நிர்வாகம் கொரோனா காலத்தில் இந்த நடவடிக்கையை எடுத்தது.
மும்பைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால், 250 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஜுமா மஸ்ஜித்திற்கு அவசியம் சென்று தொழுகை நிறைவேற்றுங்கள். அத்துடன், அதன் அழகை கண்டு மகிழ்ச்சி அடைந்து, மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள். இஸ்லாமிய கட்டிடக் கலை மற்றும் வரலாற்று பாரம்பரியம் ஆகியவற்றை ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment