Tuesday, August 20, 2024

காலத்தைத் தோழனாக்கி....!

காலத்தைத் தோழனாக்கி....!

வாழ்க்கையில் தங்களது கடுமையான உழைப்பால், உலகத்தைப் புரட்டிப் போட்ட, எத்தனையோ வரலாற்று சாதனையாளர்கள் நம்முன் இருந்துகொண்டு இருக்கிறார்கள். தற்போதும் இருந்துக் கொண்டே இருக்கிறார்கள். சாதாரண  மற்றும் நடுத்தரக் குடும்பங்களில் பிறந்து, வாழ்வதற்கே வசதி இல்லாமல், பணம் இல்லாம், எப்போதும் வறுமையைச் சுவைத்துக் கொண்டே இருந்த அவர்கள், தங்களுடைய இலட்சியத்திற்காக, காலத்தைத் தோழனாக்கிக் கொண்டு, கடுமையாக உழைத்து வாழ்க்கையில் சாதித்து இருக்கிறார்கள். 

இப்படி உலகத்தைப் புரட்டிப் போட உங்களுக்கும் ஆசை இருந்தால், நீங்களும் காலத்தைத் தோழனாக்கிக் கொண்டு, உங்களது ஒவ்வொரு நொடியையும் சிறப்பான முறையில், பயன் அளிக்கும் வகையில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். 

கவலை வேண்டாம்:

தற்போது உங்களது நிலை எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அது குறித்து சிறிதும் கவலைப்படாமல், உங்கள் இலட்சியம், மற்றும் இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கி, சென்றுக் கொண்டே இருந்தால், நிச்சயம் காலம் உங்களுக்கு கை கொடுக்கும். உயர்ந்த இலட்சியத்தை அடைய வறுமை எப்போதும் தடையாக இருந்து இல்லை. இலட்சியம் அடைய கடுமையாக உழைத்தால், வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்கு உதவிச் செய்ய நல்ல உள்ளங்கள் வரிசைக் கட்டி நிற்பார்கள். பணம் இல்லையே என்ற அச்சம் இல்லாமல், உழைப்பு, உழைப்பு என்ற முழக்கத்துடன் உங்கள் இலட்சியப் பயணத்தை நீங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். 

அப்படி, இலட்சியப் பயணம் மேற்கொள்ளும்போது பல தடைகள், சிரமங்கள், பயமுறுத்துதல்கள் என பல நெருக்கடிகள் உங்களை தாக்கும். அத்தகைய சவால்களை நீங்கள் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். ஒருபோதும், அச்சம் அடைந்து, மனச்சோர்வு அடைந்து இலட்சியத்தில் இருந்து பின்வாங்கி விடக்கூடாது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, வாழ்க்கையில் சாதித்த அனைவரும் பெரிய பணக்காரர்கள் இல்லை. செல்வ குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்ல. மாறாக, வறுமையை சுமந்துகொண்டு, வாழ்க்கையை தொடங்கியவர்கள். அத்தகைய வறுமையிலும், அவர்களிடம், எப்படியும் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. அந்த இலட்சிய வெறி அவர்களை வெற்றி கனியை சுவைக்க செய்தது. எனவே கவலைப்படாமல், உங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருங்கள். 

தோல்வியால் சோர்வு வேண்டாம்:

ஒரு இலக்கு அல்லது இலட்சியத்தை அடைய வேண்டுமானால், அதற்கு கடின உழைப்பு மிகமிக அவசியம் தேவை. இப்படி கடினமாக உழைத்தால் கூட, உடனடியாக வெற்றி கிடைத்து விடாது. தொடர் தோல்விகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த தொடர் தோல்விகளைக் கண்டு, ஒருபோதும் சோர்வு அடைந்துவிடக் கூடாது. தோல்வியில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். எங்கு தவறு நிகழ்ந்து இருக்கிறது? அந்த தவறை மீண்டும் செய்யாமல், எப்படி, முழு வேகத்துடன் பயணிப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இந்த சிந்தனை, உங்கள் செயல்களில், பணிகளில், புதிய புதிய மாற்றங்களை நிச்சயம் கொண்டுவரும். அந்த மாற்றங்கள், இலட்சியப் பயணத்தை எளிமையாக்கி வைக்கும்.

ஒன்றிய அரசின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்காக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படி நடத்தப்படும் தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் பங்குபெற்று தேர்வு எழுதுகிறார்கள். ஆனால் அவர்களில், குறைந்த அளவு பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். எனினும், உயர்ந்த இலட்சியம் கொண்ட இளைஞர்களில் சிலர், அந்த தேர்வில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன் தங்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி தேர்வை எழுதுகிறார்கள். தோல்வியால் சோர்வு அடைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், நமக்கு இந்த தேர்வு சரிப்பட்டு வராது என நினைத்துவிட்டு, இலட்சியத்தில் இருந்து பின்வாங்கி விடுகிறார்கள். 

ஆனால், தொடர் தோல்வியைச் சந்தித்தாலும், எப்படியும் உயர் பதவியில் அமர்ந்து, சமுதாயத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என இலட்சியப் பயணத்தை தொடரும், இளைஞர்களில் சிலர், அந்த இலட்சியத்தை தொட்டு, சாதனை நிகழ்துகிறார்கள். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதும் அனைவரும் வசதிப் படைத்தவர்கள் என நினைத்துவிடாதீர்கள். அண்மைக் காலமாக சாதாரண, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர், இந்த தேர்வு எழுதி, சாதித்து வருகிறார்கள். 

எந்தவித வசதியும் இல்லாமல், வறுமையை வாழ்க்கையாக கொண்டு, வாழும் இந்த இளைஞர்கள், தங்கள் வறுமையை வெல்ல வேண்டும். அதன்மூலம் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்கும் பயன் அளிக்கும் வகையில் சேவை ஆற்ற வேண்டும் என்ற இலட்சிய வெறியை மனத்தில் உருவாக்கிக் கொண்டு, கடுமையாக உழைப்பதன் மூலம், வெற்றிக் கனியை பறிக்கிறார்கள். அண்மைக் காலமாக, 'ஏழை கூலித் தொழிலாளியின் மகன் மாவட்ட ஆட்சியர் ஆனார் ' போன்ற செய்திகளை நாம் செய்தித்தாள்களில் படித்துக் கொண்டே இருக்கிறோம்.  இந்த செய்தியில் இருக்கும் உண்மையை நாம் சிந்தித்துப் பார்க்க மறந்துவிடுகிறோம். ஏழை கூலித் தொழிலாளியின் மகன் எப்படி தேர்வில் வெற்றி பெற்றார் என ஆய்வு செய்தால், அதற்கு கடும் உழைப்பு என்ற பதில் நமக்கு கிடைக்கும். 

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் வெற்றி பெற்ற பல இளைஞர்கள், செலவுக்கு பணம் இல்லாமல், அதற்காக தனியாக உழைத்துக் கொண்டே, தங்கள் இலட்சியப் பயணத்திற்காகவும் நேரத்தை ஒதுக்கி, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து இருக்கிறார்கள். காலத்தைத் தோழனாக்கிக் கொண்டு, செயல்பட்ட அவர்கள், வறுமையை வென்று, தற்போது வறுமை நிலையில் இருக்கும் பலருக்கு சேவை ஆற்றி வருகிறார்கள். அதாவது, மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் பதவிகளில் அமர்ந்துகொண்டே, ஏழை, எளிய மக்களின் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

காலத்தைத் தோழனாக்கி:

உலகத்தைப் புரட்டிப் போட்டு, சாதிக்க வேண்டுமானால், நீங்கள் காலத்தைத் தோழனாக்கிக் கொண்டு, உழைப்பு, உழைப்பு என்ற முழக்கத்தை மட்டுமே, மனதில் எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். அண்மைக் காலமாக சாதாரண, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இந்த மந்திரத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு, செயல்பட்டு சாதித்துக் கொண்டே இருக்கிறார்கள். உங்களுடைய தற்போதைய நிலை எப்படி இருந்தாலும் சரி. வறுமை உங்களை வாட்டி எடுத்தாலும் சரி, பிறர் உங்களை கேலி செய்தாலும் சரி, மற்றவர்கள் உங்களை அலட்சியம் செய்தாலும் சரி, பிறர் உங்களை ஒதுக்கினாலும் சரி,  'என்னால் முடியும்' என்று உறுதியாக மனதில் நினைத்துக் கொண்டு, செயலில் இறங்கி, உங்களை பணிகளை ஆற்றுங்கள். உங்கள் இலட்சியப் பயணத்தில் நீங்களே எதிர்பாராத வகையில், பலர் உங்களுக்கு உதவிச் செய்ய முன்வருவார்கள். 

உங்கள் மீது அக்கறை கொண்டு, அழகிய, அற்புதமான ஆலோசனைகளை தருவார்கள். அந்த ஆதரவு மற்றும் ஆலோசனைகள் உங்களை மேலும் உற்சாகம் அடையச் செய்யும். மனதில் தோன்றும் உற்சாகம், அனைத்துச் சோர்வுகளையும் நீக்கிவிட்டு, உங்களை முழு வேகத்துடன் செயல்பட வைக்கும். ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, நீதி, நேர்மையுடன் கடின உழைப்பை உங்கள் இலட்சியத்தில் முதலீடு செய்தால், அந்த முதலீடு மிகப்பெரிய இலாபத்தை உங்களுக்கு ஈட்டித்தரும். என்ன, காலத்தைத் தோழனாக்கி, உலகத்தைப் புரட்டிப் போட உங்களுக்கு ஆர்வம் வந்துவிட்டதா? தயக்கமே வேண்டாம். இப்போதே, இந்த வினாடியே, உங்கள் இலட்சியப் பயணத்தை தொடங்கி விடுங்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: