Monday, October 2, 2023

முதல் 10 நாடுகள்.....!


அதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட முதல் 10 நாடுகள்.....!

இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் பெண்களை முன்னேற்றுவது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவது போன்ற கருத்துகள் தொடர்ந்து விவாதத்தில் இருந்து வருகின்றன. ஆனால் உண்மையில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது பற்றிய கருத்துகள் வெறும் பேச்சு அளவில் மட்டுமே இருந்து வருகிறது. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தற்போது நல்ல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். கல்வி, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பெண்களின் பங்களிப்பு மிகச் சிறந்த முறையில் இருந்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், பெண்கள் சாதிக்க தொடங்கியுள்ளார்கள். எனவே, இந்திய பெண்களுக்கு அனைத்துத்  துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்கி அவர்களின் திறமைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த குரல் நாட்டில் தற்போது எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

பெண்களுக்கு 33 சதவீதம்:

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தால், அது சட்டமாகியுள்ளது. இதையடுத்து, இந்திய நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவீத பெண்கள் உறுப்பினர்களாக வர வாய்ப்பு உருவாகியுள்ளது. எனினும், இந்த நடைமுறை உடனடியாக வர வாய்ப்பு இல்லை என்றும், சில ஆண்டுகள் அதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பத்து நாடுகள்:


இத்தகைய சூழ்நிலையில், உலகில் உள்ள பல நாடுகளில் பெண்களுக்கு எப்படி உரிமைகள் வழங்கப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான பெண் எம்பிக்களைக் கொண்ட நாடுகள் எவை என ஆய்வு செய்தால், பல நல்ல தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

அந்த வகையில் அதிக பெண் எம்.பி.க்களை கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில், ருவாண்டா முதலிடத்தில் உள்ளது. ருவாண்டா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கணிசமான எண்ணிக்கையில் பெண் எம்பிக்கள் உள்ளனர். ருவாண்டாவின் கீழ்சபையான சேம்பர் ஆஃப் டெபியூட்டியில் உள்ள மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெண்கள் 61 புள்ளி 25 சதவீதமாகவும், மேல்சபையான செனட்டில் 38 புள்ளி 46 சதவீதமாகவும் உள்ளனர்.

கியூபா நாடாளுமன்றம் ஒரு சபையானது. மக்கள் சக்தியின் தேசிய சட்டமன்றமான இந்த அவையில் 53 புள்ளி 22 சதவீத பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

பொலிவியாவின் நாடாளுமன்றத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. அதேநேரத்தில், அதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பொலிவியாவின் கீழ்சபையான சேம்பர் ஆஃப் டெபியூட்டியில் உள்ள மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெண்கள் 53 புள்ளி 08 சதவீதமும், மேலவையான சேம்பர் ஆஃப் செனட்டில் 47 புள்ளி 22 சதவீதமும் உள்ளனர்.

நியூசிலாந்தின் நாடாளுமன்றம் ஒரு சபையானது. பிரதிநிதிகள் சபையான இந்த அவையில் 50. புள்ளி 42 சதவீத பெண் உறுப்பினர்கள் உள்ளனர். ஜசிந்தா ஆர்டெர்ன் நியூசிலாந்தின் பிரதமராக இருந்தவர், அரசியல் ஆதாயங்களுக்காக ஒருபோதும் எதிர்மறையான அறிக்கைகளை வெளியிடவில்லை.

ஆறாவது இடத்தில் மெக்சிகோ:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், 50 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண்கள் ஆவர். அதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளில் மெக்சிகோ ஆறாவது இடத்தில் உள்ளது. மெக்சிகன் நாடாளுமன்றம் காங்கிரஸ் என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டு அவைகளைக் கொண்டுள்ளது. கீழ்சபை பிரதிநிதிகள் சபை என்றும், மேல்சபை குடியரசு செனட் என்றும் அழைக்கப்படுகிறது. கீழ்சபையில் 48. புள்ளி 2 சதவீதமும், மற்றும் மேல்சபையில் 49 புள்ளி 22 சதவீதமும் பெண் எம்.பி.க்கள் இருந்து வருகிறார்கள்.

நிகரகுவாவின் கீழ்சபையில் 47 புள்ளி 25 சதவீத பெண் எம்.பி.க்கள் உள்ளனர், இது அதிக பெண்களைக் கொண்ட ஏழாவது நாடாக உள்ளது. ஸ்வீடனின் கீழ்சபையில் 46 புள்ளி 99 சதவீத பெண் எம்பிக்களும், கிரெனடாவில் 46 புள்ளி 67 சதவீத பெண்களும், மேலவையில் 30 புள்ளி 77 சதவீத பெண்களும் உள்ளனர். கிரெனடாவின் கீழ் சபை பிரதிநிதிகள் சபை என்றும், மேல் சபை செனட் என்றும் அழைக்கப்படுகிறது. அன்டோரா நாடு 46 புள்ளி 4 சதவீத பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது மற்றும் அதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளில் 10வது இடத்தில் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் நிலை:

பெண் எம்.பி.க்கள் அதிகம் உள்ள நாடுகளைப் பார்த்து பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று பேசுவது புரியாததல்ல. குறிப்பிடப்பட்ட பட்டியலில் முதல் 5 நாடுகளில் ஒரு ஐரோப்பிய நாடு கூட இல்லை என்பதை நாம் அறிய முடிகிறது. ஆனால் இரண்டு ஐரோப்பிய நாடுகள் ஸ்வீடன் மற்றும் அன்டோரா முதல் 10 நாடுகளில் உள்ளன.

அதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட முதல் 20 நாடுகளைப் பற்றி பேசினால்,. மேலே குறிப்பிட்டுள்ள முதல் பத்தாவது வரை, பதினோராவது முதல் இருபதாம் எண் வரை தென்னாப்பிரிக்கா, பின்லாந்து, கோஸ்டாரிகா, ஸ்பெயின், செனகல், நமீபியா, சுவிட்சர்லாந்து, நார்வே, மொசாம்பிக், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் அதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: