Monday, October 9, 2023

புதிய ஆயுதம்....!

 காங்கிரஸ் எடுத்துள்ள புதிய ஆயுதம்....!


மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி பைனல் ஆட்டம் இது என அரசியல் பார்வையாளர்களால் வருணிக்கப்படுகிறது. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டிசம்பர் 3ஆம் தேதி மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

காங்கிரசின் புதிய ஆயுதம்:

இத்தகைய அரசியல் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி, புதிய ஆயுதம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. டெல்லியில் 9 அக்டோபர் 2023-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அனைத்துச் சமுதாய மக்களுக்கும் உரிய உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி உறுதி அளித்துள்ளது. அத்துடன் மகளிருக்கான இடஒதுக்கீடு, உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. 

ராகுல் காந்தி கேள்வி:

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் அவசியம் என்பது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உரிய பட்டியலுடன் விளக்கம் அளித்தார். அப்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்றும், அனைத்துப் பதவிகளிலும், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்து வருவதாகவும் அவர்  புள்ளிவிவரங்களுடன் எடுத்துக் கூறினார். 

எனவே, நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உண்மையான பலன்களை அடைய சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார். 

நாடு முழுவதும் அதிர்வலைகள்:

காங்கிரஸ் கட்சி சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற புதிய ஆயுதத்தை கையில் எடுத்து இருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா, மிஜோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைக்குக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரசின் இந்த ஆயுதம், அனைத்துத் தரப்பு மக்களையும் சிந்திக்க வைக்க தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் பாஜக என்ன செய்வது என்ற அறியாமல் திகைத்து நின்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் குழப்பதை ஏற்படுத்தி, இரு சமுதாய மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் லாபம் பெற்றுவரும் பாஜக, இந்த முறை, தன்னுடைய திட்டங்கள் நிறைவேறுமா என கவலையில் மூழ்கியுள்ளது. எனினும், பல்வேறு அதிரடி திட்டங்கள் மூலம், தன்னுடைய திட்டங்களை நிறைவேற்ற பாஜக தயங்காது என்பதை அரசியல் நோக்கர்கள் நன்றாக அறிந்தே இருக்கிறார்கள். எனவே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் ஆலோசனை தந்துக் கொண்டிருக்கிறார்கள். 

முஸ்லிம்களுக்கும் பலன்:

பீகாரில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பில், அங்குள்ள முஸ்லிம்களின் உண்மையான நிலைமை, மற்றும் அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை ஆகியவை வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதேபோன்று, நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால், நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலைமை, அவர்களின் வறுமை, முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நாட்டு மக்கள் பார்வைக்கு வரும். இதன்மூலம், முஸ்லிம்கள் குறித்து பாஜக மற்றும் பாசிச அமைப்புகள் பரப்பி வரும் பொய்யான தகவல்களை அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்துகொள்ள முடியும். 

நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ள இந்த தருணத்தில், காங்கிரஸ் கட்சி, சரியான நேரத்தில், சரியான ஆயுதம் ஒன்றை கையில் எடுத்து நாட்டு மக்களை பாதுகாக்க களம் இறங்கியுள்ளது. இதற்கு நிச்சயம் நாட்டு மக்கள் அனைவரும் நல்ல ஆதரவும், ஒத்துழைப்பும் அளிப்பார்கள் என்பது உறுதி. அதை வரும் நாட்களில், தேர்தல் முடிவுகள் மூலம் நாடு நிச்சயம் அறிந்துகொள்ளும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: