Thursday, October 12, 2023

குழப்பமே வேண்டாம்....!

படிப்பு விவகாரத்தில் குழப்பமே வேண்டாம்....!


நாட்டில் அண்மை காலமாக படிப்பு குறித்த ஒருவிதமான விவாதம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒருசில அறிவுஜீவிகள் படித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களை பார்த்து, நீங்கள் படிக்காமலேயே சாதித்து இருக்கலாம் என கூறத் தொடங்கியுள்ளார்கள். அதற்கு பல்வேறு உதாரணங்களையும் அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் படிக்காமல், சாதனை புரிந்தார். இசைக் கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மான், பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, இசைத் துறையில் சாதனை நிகழ்த்தியுள்ளார் என சிலர் பேசி வருகிறார்கள்.

ஐந்தாம் வகுப்பைக் கூட தாண்டாத சிலர், சிறு வணிகத்தில் இறங்கி, லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். எனவே, நீங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல், உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி, உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, நல்ல வருவாய் ஈட்டி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழுங்கள் என அறிவுஜீவிகளில் சிலர் தொடர்ந்து கூறி, இளைஞர்களை குழப்பி வருகிறார்கள். 

படித்தவர்களே சாதனையார்கள்:


உலகில் படிக்காமல் சாதனை நிகழ்த்தியவர்கள் ஒரு சதவீதம் என்றால், படித்து சாதனை நிகழ்த்தியவர்கள் 99 சதவீதம் என உறுதியாக கூறலாம். ஒருவர் எட்டாவது வகுப்பு வரை படித்துவிட்டு, சாதனை செய்து இருக்கிறார் என்றால், அதே எட்டாவது வகுப்பு வரை படித்துவிட்டு, வாழ்க்கையை தொலைத்தவர்கள் 99 சதவீதம் பேர் என்பது நிதர்சன உண்மையாகும். எனவே, படிக்காமல் சாதனை நிகழ்த்தியவர்கள் குறைவு. படித்துவிட்டு, உலகில் சாதனை நிகழ்த்தியவர்கள் அதிகம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். 

இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தில் சேர்ந்து சாதனை நிகழ்த்திய, கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை,  மு.வனிதா, ப.வீரமுத்துவேல், நிகார் ஷாஜி, வி.நாராயணன், ஏ.ராஜராஜன், எம்.சங்கரன், ஜெ.ஆசிர் பாக்கியராஜ் ஆகிய தமிழக விஞ்ஞானிகள் அனைவரும் நன்கு படித்துவிட்டு தான், மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். 

இதேபோன்று, மறைந்த குடியசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், தனது வறுமையையும் தாண்டி, சிறப்பான கல்வி பெற்று, விஞ்ஞானியாக உயர்ந்து இந்தியா நாட்டிற்கு பெருமை சேர்த்தார் என்பது உலக வரலாறு. 

எனவே, நன்கு படித்தால்தான் நாம் உலகில் கவுரவமான வாழ்க்கையை வாழ்ந்து குறிப்பிட்ட துறையில் சாதிக்க முடியும். படிக்காமல், எதையும் சாதிக்க முடியாது. ஒருசிலர் படிக்காமல், சில துறைகளில் நல்ல வருவாய் ஈட்டி சாதித்து இருக்கலாம். வருமானம் மட்டுமே மிகப்பெரிய சாதனையாக ஒருபோதும் கருத முடியாது. படிக்காமல் சாதித்த அவர்களிடம் கல்வி குறித்து கேட்டால், நிச்சயம், படிக்காமல் போனது குறித்து அவர்கள் வருத்தம் தான் தெரிவிப்பார்கள். 

கல்வி குறித்து இஸ்லாம்:


இஸ்லாமிய மார்க்கம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. திருக்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’. ‘நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக’ என்ற இறைவனின் கட்டளையுடன்தான் தொடங்குகிறது. கல்வியை தேடி பயணிக்குமாறு தூண்டும் படியான 70-க்கும் மேற்பட்ட வசனங்கள் திருக்குர் ஆனில் இடம்பெற்றுள்ளன. 

‘சீனம் சென்றேனும் ஞானம் கல்’ என்பது புகழ் பெற்ற இஸ்லாமிய பழமொழியாக இருக்கின்றது. கல்வி எங்கு கிடைத் தாலும் அங்கு சென்று கல்வி ஞானத்தை பெற்றுக்கொள்ள வர வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. 

"என் இறைவனே! எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவாயாக என்றும் இறைஞ்சுவீராக" (திருக்குர்ஆன் 20:-114) என அல்லாஹ் சொல்வது போல் நாம் பிரார்த்தனை புரிய வேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது. 

கல்வி குறித்த நபிமொழிகள்:

இதேபோன்று, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்குகிறார். அவ்விருவர்களில் சிறந்தவர் யார்? வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் ‘வணக்கசாலியைவிட மக்களுக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் கல்வியாளரே சிறந்தவர்’ என பதில் கூறினார்கள். (தாரமீ, திர்மிதி) 

மேலும், "இரவின் ஒரு சிறுபகுதியில் கல்வி கற்பது, இரவு முழுவதும் விழித்திருந்து இறைவணக்கம் புரிவதை விடச் சிறந்ததாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்: மிஷ்காத், அறிவிப்பவர் இப்னு அப்பாஸ்(ரலி)

"அறிவு நுட்பம் என்பது அறிவாளியின் கை விட்டுப்போன பொருளாகும். அதை எங்கு கண்டாலும் அதை பெற்றிட அவர் உரிமையுள்ளவராவார்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி, அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).

"எவரொருவர் கல்வியைத் தேடிச் செல்கிறாரோ அவருக்கு சொர்க்கம் செல்லும் பாதையை அல்லாஹ் லேசாக்கிவிடுகிறான்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:முஸ்லிம், அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).

இப்படி, கல்வியின் முக்கியத்துவத்தை மிகச்சிறந்த முறையில் சமுதாயத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக்கூறி, அனைவரும் கல்வி பெற வேண்டும் என ஊக்கப்படுத்தினார்கள். 

எனவேதான், இஸ்லாமிய மார்க்கத்தில் ஆண், பெண் இருவரும் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் அதன் தலைநகரங்களில் மிகப்பெரிய பொது நூலகங்கள் அமைக்கப்பெற்றிருந்தன. இதன்மூலம், கல்வி, படிப்பறிவு ஆகியவற்றுக்கு இஸ்லாம் எந்தளவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். 

குழப்பமே வேண்டாம்:


படிப்பு விவகாரத்தில் மக்களை குழப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய விவாதங்களை தொடங்கியுள்ளவர்கள் அனைவரும், நன்கு படித்துவிட்டு, உயர் பதவிகளில் இருப்பவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் குடும்பத்தில் அனைவரும் கல்வியறிவு பெற்று ஒவ்வொரு துறைகளிலும் நல்ல வருமானத்துடன் வளமான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள்.  இவர்கள் யாரும் படிக்காமல் சாதித்துவிடலாம் என நினைத்து சிறு வணிகங்களில் ஈடுபடுவதில்லை. மருத்துவராக, வழக்கறிஞராக, விஞ்ஞானியாக, பொருளாதார வல்லுநராக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் படித்து உயர் பதவிகளில் இன்று அவர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். 

மக்களின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, படிக்காமலேயே நல்ல வருமானத்தை ஈட்டலாம் என நோக்கில் இதுபோன்ற கருத்துகளை முன்வைத்து நாட்டு, இளைஞர்களை குழப்பிக் கொண்டு இருக்கும் இவர்களின் வாதங்களை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளவே கூடாது. படிக்காமல் சாதனை நிகழ்த்தியவர்கள் ஒரு சதவீதம் என்றால், நன்கு படித்துவிட்டு உலக அளவில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியவர்கள் 99 சதவீதம் பேர் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

‘எனவே, படிப்பு விவகாரத்தில் கொஞ்சம் கூட உங்களுக்கு குழப்பமே ஏற்படக் கூடாது. வறுமையை நினைத்து ஒதுங்கி நிற்காமல், அதையும் தாண்டி, சவால்களை சந்தித்து உயர்கல்விப் பெற்று வாழ்க்கையில் நீங்கள் சாதிக்க வேண்டும். கடைசியாக படிப்பில் ஆர்வம் கொண்ட, தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள், நிச்சயம் ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க முன்வர வேண்டும். அதற்காக ஏற்படும் அனைத்துத் தடைகளையும் அவர்கள் உடைத்து எரிந்து, குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை அளித்து, அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: