Friday, October 13, 2023

காரியம்....!

காரியம் முடிந்ததும்....!

வேலூரில் எனக்கு நண்பர் ஒருவர் இருந்தார்.

இப்போதும் அவர் உயிருடன்தான் இருக்கிறார்.

ஆனால் என் நட்பு வட்டத்தில் அவர் தற்போது இல்லை.

அந்த நபரின் பெயர் அஸிமுதீன்.

தமக்கு ஏதாவதொரு காரியம் வேலை நடக்க வேண்டுமானால் நம்மை தேடி வருவார்.

நம்மை புகழ்ந்து பேசுவார்.

உங்களால்தான் அது முடியும் என்பார்.

இப்படி பேசி பேசியே தனக்கு நடக்க வேண்டிய காரியங்களை நம்மிடம் இருந்து செய்ய வைத்து விடுவார்.

ஆரம்பத்தில் அவர் கடைப்பிடித்து வரும் இந்த டெக்னிக்கை நான் புரிந்துகொள்ளவில்லை.

நமக்குதான் வெளுத்தது எல்லாம் பால் என நினைக்கும் பண்பாச்சே.

அதனால் அஸிமுதீன் குறித்து நண்பர்கள் சிலர் குறை கூறியபோது அதை நான் நம்பவில்லை.

பிறகுதான் போக போக அவரின் உண்மை முகம் எனக்கு தெரியவந்தது.

ஒருநாள் கடை வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த அவருக்கு சலாம் கூறினேன்.

பதிலுக்கு அந்த நபர் என்ன செய்தார் தெரியுமா.

முகத்தை சடார் என திருப்பிக் கொண்டு கண்டும் காணாமல் போய்க் கொண்டே இருந்தார்.

அப்போதுதான் இந்த மரமண்டைக்கு லேசாக புரிய ஆரம்பித்தது.

அஸிமுதீன் குறித்து நண்பர்கள் சிலர் கணித்தது சரிதான் என்றும் அதில் உண்மை இருப்பதையும் உணர்ந்தேன்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் என் வீட்டை தேடி அஸிமுதீன் வந்தார்.

ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றார்.

என்னால்தான் அந்த பணியை செய்து முடிக்க முடியும் என தனது பழைய டெக்னிக்கை என் முன் வைத்தார்.

அமைதியாக பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த நான் பின்னர் எரிமலையாக சீறி வெடித்தேன்.

அவமானத்தில் தலை குனிந்து சென்ற அஸிமுதீன் மீண்டும் என்னிடம் நட்பை வளர்க்க பல முறை முயன்றார்.

ஆனால் அதெல்லாம் வீணாகவே முடிந்தது.

காரியம் முடிந்ததும் கழற்றி விடும் இதுபோன்ற நபர்களை நாமும் கழற்றி விடுவதுதான் சரியான முடிவாக இருக்கும்.

இதுதான் அஸிமுதீன் மூலம் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த படிப்பினை.

ஊடகத்துறையிலும் இதுபோன்ற ஏராளமான நபர்களை நான் தற்போது சந்தித்து வருவது வேறு விஷயம்.

No comments: