Tuesday, October 31, 2023

காங்கிரசின் சடுகுடு....!

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் துணிச்சலுடன் சடுகுடு விளையாடும் காங்கிரஸ்....!

இந்திய அரசியல் விளையாட்டில் செமி ஃபைனலாக கருத்தப்படும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில  சட்டப்பேரவைத் தேர்தல்கள், வரும் 7ஆம் தேதி தொடங்கி, 30ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் எதிரொலிக்கும் என நம்பப்படுகிறது. இதனால், இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இந்த தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி, படுவேகத்தில் பிரச்சாரம் செய்து வருகிறது. இதேபோன்று, பாஜகவும், எப்படியும் ஐந்து மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது வழக்கமான பணிகளில் இறங்கியுள்ளது. 

காங்கிரசின் துணிச்சல்:

மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டபேரவைகளுக்கான தேர்தல் அட்டவணை அறிவிக்கும் முன்பே, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பணிகளை தொடங்கி, இந்த ஐந்து மாநிலங்களிலும் மக்கள் மத்தியில் தனது வாக்குறுதிகளை அளித்து வருகிறது. கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த ஐந்து வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக் காட்டும் காங்கிரஸ், அதே பாணியில், ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், மக்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்து வருகிறது. 

அத்துடன், இந்த ஐந்து மாநில தேர்தலை காங்கிரஸ் கட்சி மிகவும் துணிச்சலுடன் எதிர்கொண்டுள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கை ஒளியை காங்கிரஸ் ஏற்றி வருகிறது. ஒன்றிய பாஜக ஆட்சியின் அவலங்கள் மற்றும் மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தற்போது உள்ள அரசுகளால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், துயரங்கள் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பட்டியலிட்டு வருகிறது. காங்கிசின் இந்த புதிய தேர்தல் அணுகுமுறை, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

பயமே வேண்டாம்:


ஐந்து மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஆதரவான நிலை உருவாகியுள்ளதால், அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக, தனது வழக்கமான தந்திர வேலைகளில் இறங்கியுள்ளது. ஒன்றிய அரசின் சுதந்திரமான புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை ஏவி, காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்து அவர்களை அச்சுறுத்தி வருகிறது. ஆனால், இந்த அச்சுறுத்தல்களை கண்டு நாங்கள் அஞ்சப் போவதில்லை என உறுதியாக கூறியுள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெய்லாட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், எத்தகைய பிரச்சினைகள், நெருக்கடிகள் வந்தாலும் அதை சட்ட ரீதியாக கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதன்மூலம் பயம் என்ற வார்த்தையை கண்டு அச்சம் கொள்ளும் நிலையில் இருந்து காங்கிரஸ் வெளியே வந்துவிட்டதாகவே தெரிகிறது.

ராகுல் காந்தி அதிரடி:

இந்திய ஜனநாயக தேர்தலில் அரையிறுதிப் போட்டியாக கருத்தப்படும் இந்த ஐந்து மாநில தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கி முழக்கமாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இருந்து வருகிறார்கள். ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இவர்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருவது அரசியல் பார்வையாளர்களை மிகவும் வியப்பு அடையச் செய்துள்ளது. 

குறிப்பாக, ராகுல் காந்தி, தனது பிரச்சாரத்தின்போதும், செய்தியாளர்கள் சந்திப்பின்போதும், ஒன்றிய பாஜக அரசின் குறைபாடுகள், மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் ஆகியவை குறித்து தொடர்ந்து பேசி, குற்றம்சாட்டி வருகிறார். இதேபோன்று, சாதிவாரிக் கணக்கெடுப்பு, வேலையில்லா திண்டாட்டம், நசுங்கி வரும் தொழில் துறை உள்ளிட்ட விவகாரங்களை பேசும் ராகுல் காந்தி, அதன் காரணமாகவே, எதிர்க்கட்சிகளை அடக்க ஒன்றிய பாஜக அரசு, பல்வேறு நடவடிக்களை எடுத்து வருவதாகவும் கூறி வருகிறார். இதையெல்லாம் கண்டு, தானும், காங்கிரஸ் தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் சிறிதும் பயம் கொள்ள மாட்டார்கள் என மக்கள் மத்தியில் அவர் கூறும்போது, அங்கு எழுச்சி குரல்கள் எழுகின்றன. ராகுல் காந்தியின் இத்தகைய பிரச்சார உத்திகள், தேசிய அளவில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

பாஜக அதிர்ச்சி:

ஐந்து மாநில தேர்தல் பிரச்சார கூட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி அலை உருவாகி வரும் நிலையில், பாஜகவிற்கு மக்கள் ஆதரவு இல்லை என்பது அந்த கட்சி நடத்தும்  கூட்டங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அந்த கூட்டங்களின் வீடியோகளையும், புகைப்படங்களையும் பார்க்கும்போது அதை நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. பாஜகவின் தேசிய தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் கூட, நாற்காலிகளில் உட்கார ஆட்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சேர்கள் காலியாக இருப்பதை சமூக வலைத்தளங்களில் வீடியோகள் மூலம் சிலர் பதிவு செய்து வருகிறார்கள். 

அத்துடன், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளின் படி, ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என முடிவுகள் வந்துள்ளன. இதனால் பாஜக மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் மத்தியில் கோஷ்டி பூசல் உருவாகி உள்ளதால், தேர்தலில் அது எதிரொலிக்கும் என்பதால் பாஜக மேலிடம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் 5ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில், அங்கு இதுவரை பிரதமர் நரேந்திர மோடி, பிரச்சாரம் செய்ய செல்லவே இல்லை. மணிப்பூரை ஒட்டியுள்ள மிசோரம் மாநிலத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா கூறியுள்ளதால், பாஜகவினர் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

காங்கிரசின் சடுகுடு:


இத்தகையை அரசியல் சூழ்நிலையில்தான், காங்கிரஸ் கட்சி மிகவும் துணிச்சலுடன் தனது சடுகுடு விளையாட்டை ஆடி வருகிறது. காங்கிரஸ் தலைவர்களின் இந்த துணிச்சலான விளையாட்டு, அக்கட்சியின் தொண்டர்களை மேலும் உற்சாகம் அடையச் செய்துள்ளது. தொடர் தோல்விகளால் சோர்ந்து கிடந்த காங்கிரஸ் தொண்டர்கள், கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, ஒரு புதிய நம்பிக்கையுடன் அரசியல் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய நம்பிக்கையை ஊட்டி, பயம் இல்லாமல் துணிச்சலுடன் இறங்கி விளையாட வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த துணிச்சல் ஐந்து மாநில தேர்தல்களில் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் என கூறலாம். 

முஸ்லிம்களின் நிலை:

ஒன்றிய பாஜக ஆட்சியில் இந்திய முஸ்லிம்கள் அனுபவித்து வரும் வேதனைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கடந்த காலங்களில் அரசியல் களத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாத காரணத்தால், முஸ்லிம்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கு பிரிந்து போனதால், அதன்மூலம், மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்தனர். ஆனால், கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், அம்மாநில முஸ்லிம்கள் சரியான அரசியல் முடிவு எடுத்து ஒட்டுமொத்தமாக, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார்கள். இதனால், முஸ்லிம்களின் வாக்குகள் சிதறாமல், காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே விழுந்தது. கர்நாடக முஸ்லிம்களின் இந்த சரியான அணுகுமுறையால், தற்போது அங்குள்ள முஸ்லிம்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களுக்கு காங்கிரஸ் அரசு வந்தபிறகு, தீர்வு காணப்பட்டுள்ளது. இதேபோன்று, பல பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன. 

கர்நாடகா மாநில முஸ்லிம்களின் இந்த அணுகுமுறை, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் , தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநில முஸ்லிம்களையும் சற்று யோசிக்க செய்துள்ளது என்றே கூறலாம். எனவே, இந்த மாதம் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்த ஐந்து மாநில முஸ்லிம்களும் சரியான அரசியல் முடிவு எடுத்து, தங்களது வாக்குகள் சிதறி விடாமல் இருக்க ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார்கள் என உறுதியாக நம்பலாம். ஏக இறைவன் விரும்பினால், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மூலம், நாட்டில் ஒரு புதிய அரசியல் மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: