Sunday, October 29, 2023

சமூக ஊடகங்களின் சக்தி.....!

சமூக ஊடகங்களின் சக்தியும் வலிமையும்....!

அறிவியல் வளர்ச்சியால், உலகில் மிக வேகமான மாற்றங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், மனித வாழ்க்கையை மிக எளிமையானதாக மாற்றிவிட்டன. அதேநேரத்தில், மனித வாழ்க்கை ஒரு எந்திரமயமான வாழ்க்கையாக மெல்ல மெல்ல மாறிவிட்டது.  வேகமான உலகில், மனிதனுக்கு நிம்மதி கிடைக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றே பதில் வருகிறது. 

ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்க்கையை வாழ விரும்பும் மனிதன், தன்னுடைய பழக்க வழக்கங்களால், இன்று மகிழ்ச்சியை இழந்து தவிக்கிறான். பணம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தும் சிலருக்கு வாழ்க்கையில் உ்ணமையான ஆனந்தம் கிடைப்பது இல்லை. இதற்கு முக்கிய காரணம், அவனது மனமே என்று உறுதியாக கூறலாம். ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டிய மனதை, அலைபாயும் மனமாக மாற்றி அமைத்துக் கொண்டதே, இதற்கு முக்கிய காரணமாகும். 

வாசிப்பு பழக்கம்:


விஞ்ஞான மாற்றங்களால், மக்கள் மத்தியில் கணினி, செல்பேசி போன்ற புதிய கண்டுபிடிப்புகள் நுழைந்தபிறகு, அவனது வாழ்க்கையை இன்று மிகவும் மாறிவிட்டது. வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், நல்ல நல்ல புத்தகங்களை தேடி தேடி வாசித்த மக்கள் இன்று, கணினி, செல்பேசிக்கு அடிமையாக கிடக்கிறார்கள். நாள்தோறும், 24 மணி நேரமும், செல்பேசியை பிடித்துக் கொண்டே அலைகிறார்கள். இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. 

ஒருசில அறிவுஜீவிகள் மட்டுமே, நல்ல நூல்களை தேடிச் செல்கிறார்கள். ஒரு காலத்தில் நூலகங்களில் அலைமோதிய கூட்டம், இப்போது இல்லை என்றே கூறலாம். மிகப்பெரிய நூலகங்களில், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான நூல்கள் குவிந்து கிடக்கின்றன. ஆனால், அதை தூசித் தட்டி வாசிக்க ஆட்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. 

மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டதால், பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நூல் விற்பனை நிலையங்கள் தற்போது மூடப்பட்டு விட்டன. இதேபோன்று, நாளிதழ், வார இதழ் உள்ளிட்ட அனைத்து வகையான இதழ்களின் விற்பனையும் கிடுகிடுவென சரிந்துவிட்டது. இதனால், இளம் எழுத்தாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. சிந்திக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. 

சமூக ஊடகங்களின் சக்தி:


உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் புத்தங்கள் படிக்கும் பழக்கம் குறைந்துவரும் நிலையில், சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அனைத்து நாளிதழ்களின் நிறுவனங்கள் கூட, சமூக ஊடகங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளன. உலகில் நடக்கும் அனைத்து வகையான சம்பவங்களின் தகவல்கள், ஒருசில நொடிகளில் டுவிட்டர், வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட அனைத்து வகையான சமூக ஊடகங்களில் கிடைத்து விடுகின்றன. இதனால், தகவல்களை பெற நாளிதழ், வார இதழ் ஆகியவைகளுக்காக பல மணி நேரம், பல நாட்கள் காத்து இருக்க வேண்டிய சூழல் தற்போது மக்களுக்கு இல்லை. 

அதேநேரத்தில், சமூக ஊடகங்களில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் உண்மை என கூற முடியாது நிலை இருந்து வருகிறது. அதன் காரணமாக சிலர், பொய்யான தகவல்களை பரப்பி மக்களை குழப்பி வருவதும் அதிகரித்துள்ளது. 

சத்யபால் மாலிக் கருத்து:

அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிகை டெல்லியில் சந்தித்து, கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் பேசிய சத்யபால் மாலிக், சமூக ஊடகங்களின் சக்தி குறித்து பல வியப்பு அளிக்கும் கருத்துகளை தெரிவித்தார்.  தற்போது தொலைக்காட்சிகளை பார்ப்பதும், அங்கு ஒளிபரப்பாகும் செய்திகளை, நேர்காணல் மற்றும் கலந்துரையாடல் ஆகியவை காண்பதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிட்டது என கூறிய மாலிக், சமூக ஊடகங்களின் பக்கம் மக்களின் பார்வை தற்போது திரும்பி விட்டதாக தெரிவித்தார். 

எனவே, பாசிச அமைப்புகள் மக்களை குழப்ப போலியான கணக்குகளை தொடங்கி தங்களது திட்டங்களை அரங்கேற்றி வருவதாக அவர் கூறினார். இந்த சூழ்நிலையில், சமூக ஊடகங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிக நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் சத்யபால் மாலிக் அறிவுறுத்தினார். 

அரசியல் மாற்றம்:


தற்போது நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையில், மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், அது சமூக ஊடகங்கள் மூலம் மட்டுமே நிகழும் என்றும் சத்யபால் மாலிக் உறுதிப்பட கூறியுள்ளார். நாட்டு மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வர சமூக ஊடகங்கள் காரணமாக இருந்து வருவதாகவும், மிக விரைவில் தகவல்கள் மக்களுக்கு கிடைத்து விடுவதால், மிகவும் வலிமையாக இருக்கும் அனைத்து வகையான சமூக ஊடகங்களையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள சிறிதும் தயங்கக் கூடாது என்றும் முன்னாள் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். 

சத்யபால் மாலிகின் இந்த கருத்து ஒப்புக் கொண்ட ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியும் சமூக ஊடகங்களின் மீது தனது பார்வையை செலுத்து தொடங்கியுள்ளதாக கூறினார். அதேநேரத்தில் ஆளும் தரப்பு, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நசுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். 

இஸ்லாமிய சமுதாயம்:


உலகம் வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், முஸ்லிம் சமுதாயம் இன்னும் நீண்ட உறக்கத்தில் இருந்து வருகிறது. சமூக ஊடகங்களின் பக்கம் தன்னுடைய கவனத்தை சரியான முறையில் திருப்பி முஸ்லிம் சமுதாயம் அணுகவில்லை. இஸ்லாமிய நெறிமுறைகள், வாழ்க்கை நெறிகள், இஸ்லாமிய சகோதரத்துவம், பெண்ணுரிமை உள்ளிட்ட தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் அனைத்துப் பிரிவு மக்கள் மத்தியில் இஸ்லாமியர்கள் கொண்டு சேர்க்கவில்லை. சமூக ஊடகங்களை சரியாக பயன்படுத்தவில்லை. 

இதனால், இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் தப்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அதற்கு, ஒருசில இஸ்லாமிய ஊடக தோழர்கள் மட்டுமே, பதிலடி கொடுத்து, விளக்கம் அளித்து வருகின்றனர். பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் கண்டும் காணாமல் போய்விடுகின்றனர். 

தற்போதைய சூழ்நிலையில் சமூக ஊடகங்களின் சக்தியும் வலிமையும் இஸ்லாமிய சமுதாயம் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றுவதுடன், உலகத்தின் பக்கமும் தங்களது பார்வைகளை திருப்ப வேண்டும். இஸ்லாத்திற்கு எதிராக செய்யப்பட்டு வரும் பொய் பிரச்சாரங்களையும் வதந்திகளையும் முறியக்க வேண்டும். அதற்காக, சமூக ஊடகங்களை மிகவும் சரியான முறையில், பயன்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களின் மூலம் மக்கள் மத்தியில் அன்பையும், அமைதியையும் ஏற்படுத்த வேண்டும். 

இஸ்லாம் குறித்தும், அதன் வாழ்க்கை நெறி குறித்தும் மேற்கிந்திய நாடுகளின் மக்கள் மத்தியில் நிலவி வரும் போலியான கற்பனைகளையும், பொய்யான தகவல்களையும் முறியடிக்க சமூக ஊடகங்களை இஸ்லாமிய இளைஞர்கள் சரியாக பயன்படுத்தி, அதன்மூலம், இஸ்லாம் குறித்து உண்மையான படத்தை அனைத்துத் தரப்பு மக்களிடம சேர்க்க வேண்டும். கடைசியாக, மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்., தற்போதைய சூழ்நிலையில், சமூக ஊடகங்களின் சக்தி மிகவும் வலிமையானது என்பதை மட்டும் எப்போதும் மறந்துவிடாதீர்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: