Tuesday, October 31, 2023

இஸ்லாமிய மருத்துவ உலகம்....!

 இஸ்லாமிய மருத்துவ உலகம்....!


பரந்து விரிந்த இந்த பூலோகத்தில் கிட்டதட்ட மொத்தம் 195 நாடுகள் இருந்து வருகின்றன. இவற்றில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்துவரும் நாடுகளின் எண்ணிக்கை சுமார்  57 ஆக உள்ளது. இந்த முஸ்லிம் நாடுகளில் ஒருசில நாடுகளை தவிர, மற்ற நாடுகளில் மருத்துவக் கட்டமைப்புகள் மிகப்பெரிய அளவுக்கு போற்றும் வகையில் இல்லை என்றே கூறலாம். 

இந்தியாவின் அண்டை நாடுகளாக இருக்கும் வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் சரியான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால், அங்குள்ள மக்கள் இந்தியாவிற்கு வந்து மருத்துவ சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, வங்கதேசத்தில் இருந்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் அதுவும், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில், மருத்துவக் கட்டமைப்புகள் மற்றும் சிறந்த மருத்துவர்கள் அதிகளவில் இருந்து வருகிறார்கள் என்பதாகும். மிக குறைந்த செலவில், தரமான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதால், பல நாடுகளில் இருந்து மருத்துவம் பார்ப்பதற்காகவே, இந்தியாவிற்கு அதிகளவு நோயாளிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு இந்திய மருத்துவர்கள் கனிவுடன் கூடிய சிகிச்சை அளித்து, அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை ஊட்டி, ஒளி ஏற்றி வருகின்றனர். 

மருத்துவப் பணி:

மருத்துவம் என்பது ஒரு தொழில் என கூற முடியாது. அப்படி கூறவும் கூடாது.  அது ஒரு மகத்தான மக்கள் சேவையாகும். மனித குலத்திற்கு சுயநலம் பார்க்காமல் மருத்துவச் சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை, நோயாளிகள் எப்போதும் மனதில் நிலை நிறுத்திக் கொண்டு, அவர்களுக்காக ஏக இறைவனிடம் எப்போதும் பிரார்த்தனை செய்துக் கொண்டே இருப்பார்கள். 

ஆனால், தற்போதைய நவீன யுகத்தில், மருத்துவம் சேவையாக இல்லாமல், தொழிலாக மாறிவிட்டது. மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க கோடிக்கணக்கில் பணம் செலவழித்து படிப்பில் சேரும் ஒரு மாணவர், பின்னர், அந்த பணத்தை திருப்பி எடுப்பதற்காக, தனது மருத்துவ அறிவை விற்பனை செய்கிறார்.  இதனால், மருத்துவர்கள் மீது மக்களுக்கு இருந்துவரும் நம்பிக்கை மெல்ல மெல்ல குறைந்துகொண்டே வருகிறது எனலாம். அதேநேரத்தில், பணத்தை குறிக்கோளாக கொள்ளாமல், சேவையை மட்டும் அடிப்படையாக கொண்டு, பரந்துவிரிந்து தூய மனதுடன் மருத்துவச் சேவையை ஆற்றும் மருத்துவர்கள் உலகில் இருந்துகொண்டே இருக்கிறார்கள். இதனால் மருத்துவ உலகின் மீது இன்னும் மக்களுக்கு நம்பிக்கை குறையவில்லை என உறுதியாக கூறலாம். 

இஸ்லாமிய மருத்துவம்: 


இஸ்லாமிய மருத்துவ பாரம்பரியம், தற்போதைய நவீன மேற்கத்திய மருத்துவம் உட்பட எதிர்கால மருத்துவத்திற்கான அடித்தளத்தை அமைப்பதோடு, மனிதர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இஸ்லாமிய மருத்துவ பாரம்பரியம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், இன்று மருத்துவ நடைமுறைகளில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துவதோடு ஐரோப்பிய மருத்துவத்திற்கும் பங்களித்து வருகிறது. 

இஸ்லாமிய சமூகம் எந்த மருத்துவ அறிவைப் பெற்றது என்பது பற்றிய தகவல்களை மிகச் சில ஆதாரங்களே வழங்குகின்றன. ஈராக்கில் உள்ள குஃபாவைச் சேர்ந்த அப்துல்மாலிக் பென் அப்கர் அல்-கினானி என்ற மருத்துவர், உமர் இபின் அப்துல் அஜீஸின் நீதிமன்றத்தில் சேர்வதற்கு முன்பு அலெக்ஸாண்டிரியாவின் மருத்துவப் பள்ளியில் பணிபுரிந்ததாகக் கருதப்படுகிறது . உமர் மருத்துவப் பள்ளியை அலெக்ஸாண்டிரியாவிலிருந்து அந்தியோக்கியாவுக்கு மாற்றினார் . 

ஆரம்பகால இஸ்லாமிய மருத்துவம் முக்கியமாக அலெக்ஸாண்டிரியா அகாடமியில் இருந்து கிரேக்க மூலங்களிலிருந்து நேரடியாகத் தெரிவிக்கப்பட்டது. அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்பது தற்போது புரிந்து கொள்ளப்படுகிறது; பாரசீக மருத்துவ பாரம்பரியத்தின் செல்வாக்கு மெட்டீரியா மெடிகாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது, இருப்பினும் பாரசீக மருத்துவர்கள் கிரேக்க மூலங்களையும் நன்கு அறிந்திருந்தனர். 

மருத்துவத்திற்கான அணுகுமுறை:

இடைக்கால இஸ்லாமிய உலகில் மருத்துவம் பெரும்பாலும் தோட்டக்கலையுடன் நேரடியாக தொடர்புடையது. பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுடன் தொடர்புடையவை. இருப்பினும் அவை நவீன மருத்துவம் கூறுவதை விட வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன.  நகைச்சுவைக் கோட்பாட்டின் பயன்பாடு மருத்துவத்தின் பெரும்பகுதியாகும். இது நோயாளிகளுக்கான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளை வடிவமைக்கிறது. இந்த வகையான மருந்து பெரும்பாலும் முழுமையானது. இத்தகைய மருத்துவ முறைகளை முஸ்லிம் மருத்துவ உலகம் கடைப்பிடித்து நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளித்து வந்தது. 

மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் :

இஸ்லாமிய பொற்காலத்தின் சிறந்த மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அதிகாரம் பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தின் கலை மற்றும் அறிவியலை பாதித்துள்ளது. மருத்துவ நெறிமுறைகள் பற்றிய அவர்களின் கருத்துக்கள் இன்றும் விவாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, உலகின் இஸ்லாமிய பகுதிகளில். மருத்துவர்களின் நடத்தை மற்றும் மருத்துவர்-நோயாளி உறவு பற்றிய அவர்களின் கருத்துக்கள் இன்றைய மருத்துவர்களுக்கு சாத்தியமான முன்மாதிரிகளாக விவாதிக்கப்படுகின்றன.

இமாம் அலி இபின் மூசா அல்-ரிடா, அலி இபின் சாஹ்ல் ரப்பான் அல்-தபரி , முஹம்மது பின் சயீத் அல்-தமிமி, அலி இபின் அல்-அப்பாஸ் அல்-மஜூசி, முஹம்மது இபின் ஜகாரியா அல்-ராஸி போன்ற இஸ்லாமிய மருத்துவர்கள் மருத்துவ உலகத்திற்கு ஆற்றிய சேவையை இன்னும் மறக்க முடியாது. பல நோய்களுக்கு இஸ்லாமிய மருத்துவர்கள் அளித்த இயற்கையான சிகிச்சை முறைகள், பக்கவிளைவுகள் எதுவும் இல்லாமல் குணப்படுத்தி நோயாளிகளின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றி அமைத்தது. எனவே, இஸ்லாமிய மருத்துவ உலகம் மீது மேற்கிந்திய நாட்டு மக்களுக்கு எப்போதும் ஓர் நம்பிக்கை இருந்தே வருகிறது. 

இயற்கை மருத்துவம்:


உலகம் முழுவதும் மருத்துவ உலகில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் கூட, இயற்கை மருத்துவம் மீது மக்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கை இருந்து வருகிறது. உணவே மருந்து என்ற கோட்பாடு, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை”  என பொன்மொழியை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நாவல் பழம், பேரீச்சம் பழம்,  மாதுளை ஆகியவை கூட, இயற்கை மருத்துவத்தில் மிக முக்கியவையாக இருந்து வருகின்றன. 

“ஜைத்தூன் பழத்தைச் சாப்பிடுங்கள். அதன் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வோரிடம் 40 நாட்களுக்கு ஷைத்தான் நெருங்க மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இடுப்பு வலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின் அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத் தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல் எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்து போய்விடும். அப்போது இந்த எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில் தேய்த்தால் மறந்து போனது நீங்கி இரத்த ஓட்டம் சீராகி விடும்.

இதேபோன்று, பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோ எந்தவிதமான விஷமோ, செய்வினையா அவரை அண்டாது என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள். 

வாய்வுத் தொல்லையால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம்.

பேரிக்காய், கருஞ்சீரகம், கோதுமை, உப்பு, இறைச்சி, முட்டை, தேன், பால், தண்ணீர், . பூண்டு, அத்திப்பழம், முள்ளங்கி, மாதுளம்பழம், சுரைக்காய், இஞ்சி, சுக்கு என இயற்கை உணவுக்கு இஸ்லாமிய மருத்துவ உலகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 

யுனானி மருத்துவம்:

கிரேக்க நாட்டில் இருந்தும் பின்னர் அரேபியாவில் இருந்தும், இந்தியாவிற்குள் வந்ததாக கூறப்படும் யுனானி மருத்துவம், தற்போது இந்திய மக்களின் ஒரு மருத்துவமாகவே மாறிவிட்டது. தீராத நோய்களுக்கு, யுனானி மருத்துவத்தில் நல்ல பலன் கிடைப்பதை அறிந்து பலர் அனுபவத்தில் நன்கு உணர்ந்து பயன் அடைந்துள்ளனர். இதேபோன்று, சித்தா, ஆயுர்வேதா ஓமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளும், மருத்துவ உலகில் பிரபலமான மருத்துவ முறைகளாக இருந்து ஏழை, எளிய மக்களுக்கு குறைந்து செலவில் பயன் அளித்து வருகின்றன. 

இந்திய முஸ்லிம்களின் மருத்துவ சேவை:

இந்தியாவில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், மருத்துவத்துறையில் முஸ்லிம்கள் நுழைந்து நல்ல சேவை ஆற்றி வருகிறார்கள். அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் முஸ்லிம்கள் சார்பில் சிறந்த கட்டமைப்புகளுடன் கூடிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், முஸ்லிம் சமுதாயத்தைவிட பிற சமுதாய மக்கள் தான் அதிகம் பயன் அடைந்து வருகிறார்கள். அதற்கு காரணம், மருத்துவத்தை ஒரு சேவையாக இஸ்லாமிய சமுதாயம் கருதுவதுதான். 

தமிழகத்தில் ஒருசில ஊர்களில் மட்டுமே, இஸ்லாமியர்களால், மருத்துவமனை நடத்தப்பட்டு வருகின்றன. அவை சிறிய மருத்துவமனையாக மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என சமுதாயத்தில் அக்கறை கொண்ட பலர் தொடர்ந்து முயற்சிகளை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். 

ஸாலிஹீன் மருத்துவமனை:

இத்தகைய சூழ்நிலையில், அறம் சார்ந்த கொள்கை முடிவுடன் 111 நல்லுள்ளம் கொண்ட அறங்காவலர்கள் ஒருங்கிணைந்து ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளையை தொடங்கி, அந்த அறக்கட்டளையின் மூலம், தமிழகத்தின் வேப்பூர்-சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், மருத்துவக் கல்லுரியை தொடங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, வரும் நவம்பர் 4ஆம் தேதி ஸாலிஹீன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்படுகிறது. இதன்மூலம் இஸ்லாமியர்கள் சார்பில் மருத்துவக் கல்லூரி இல்லை என்ற ஏக்கம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளது என கூறலாம். ஸாலிஹீன் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்ல மருத்துவச் சேவையை நிச்சயம் வழங்கும் என உறுதியாக நம்பலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: