Monday, October 16, 2023

தேர்தல் திருவிழா.....!

 ஐந்து மாநில தேர்தல் திருவிழா.....!

இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி....!!


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் நவம்பர் 7ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டப் பிறகு, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, தேர்தல் பணிகளில் அதிக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இதேபோன்று பாஜகவும் தேர்தல் பிரச்சாரத்தை பல்வேறு வகைகளில் செய்து வருகிறது.

ஓங்கும் காங்கிரசின் கை:


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தற்போதையை நிலவரப்படி காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியுள்ளது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த நான்கு மாநிலங்களிலும் மிகப்பெரிய செல்வாக்குடன் இருப்பதால், தனித்தே போட்டியிடுகிறது. அதேநேரத்தில் மத்திய பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தல் களத்தை சந்திக்கிறது. 

மத்திய பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை, அங்கு ஆட்சியில் உள்ள பாஜக, கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அத்துடன், எப்போது பார்த்தாலும், அரசியலுடன் மதத்தை இணைத்துக் கொண்டு, மக்களை பாஜக குழப்பி வருகிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் என நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது, அடிக்கடி மத ரீதியாக மக்களை குழப்பி அரசியல் லாபம் பெற முயற்சி செய்யும் பாஜகவை தற்போது மத்திய பிரதேச மாநில மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் மற்றும், உண்மையான பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளை பார்க்கும்போது, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கி இருப்பது தெளிவாக தெரிகிறது. 

மத்திய மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மக்களின் நன்மதிப்பை பெற்றவராக இருந்து வருகிறார். அத்துடன், காங்கிரஸ் வெற்றிபெற்றால், மக்கள் நலப்பணிகள் முழுவீச்சியில் செயல்படுத்தப்படும் என அக்கட்சி உறுதி அளித்துள்ளது. கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைப் போன்று, மத்திய பிரதேசத்திலும் ஏழை, எளிய மக்கள் பயன் அடையும் வகையில் காங்கிரஸ் கட்சி சில நல்ல வாக்குறுதிகளை அளித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. அரசியல் பார்வையாளர்களின் கருத்தும் இதுவாகவே இருந்து வருகிறது. 

ராஜஸ்தான், சட்டீஸ்கர் நிலைமை:

ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பல்வேறு நல்ல திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. இரு மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவுக்கு மத மோதல்கள் நடைபெறவில்லை. அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படும் வகையில், காங்கிரஸ் கட்சி, தனது பணிகளை செய்து திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதனால், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சிக்கு வரும் என ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே கருத்தை அரசியல் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களும் உறுதிப்பட கூறி வருகின்றனர். 

தெலுங்கானாவில் மாற்றம்:

தெலுங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் கையே ஓங்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள தெலுங்கானா ராட்டீரிய சமிதி கட்சி மீது பல்வேறு புகார்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் அக்கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள், தற்போது காங்கிரசில் இணைந்து வருகிறார்கள். இதனால், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அதிர்ச்சி அடைந்துள்ளார். தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி ஆறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. இது அம்மாநில பெண்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. தெலுங்கானா மாநில முஸ்லிம்கள் கூட, இம்முறை காங்கிரஸ் கட்சிக்கே தங்களது வாக்குகளை அளிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்குகள் பிரிந்து போகாமல் இருக்க, கர்நாடக மாநில முஸ்லிம்கள் எடுத்த முடிவின்படி, தெலுங்கானாவிலும் முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார்கள் என கூறப்படுகிறது. 

இதேபோன்று, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில முஸ்லிம் வாக்காளர்களும், இந்த தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்குகளை அளிப்பார்கள் என உறுதிப்பட கூறலாம். 

மிசோரம் உற்சாகம்:

மிசோரம் மாநிலத்தில் வரும் நவம்பர் 7ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மிகப்பெரிய அளவுக்கு மக்கள் வரவேற்பு அளித்து இருப்பது நாட்டில் உள்ள அனைத்து அரசியல் பார்வையாளர்களையும் வியப்பு அடையச் செய்துள்ளது. எனவே, மிசோரம் மாநில மக்கள் மிகப்பெரிய அளவுக்கு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. மிசோரமில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என உறுதிப்பட நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வெற்றி உறுதி:


மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் திருவிழாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி, மிகப்பெரிய அளவுக்கு வெற்றிபெற்று பாஜகவை வீழ்த்தும் என்பதே தற்போதைய நிலவரமாக இருந்து வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக, மீண்டும் தனது பழைய பாணியில் மக்கள் குழப்பும் பணியை தொடங்கியுள்ளது. வளர்ச்சிப் பணிகள் குறித்து எதுவும் பேசாமல், மத ரீதியாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், தற்போதைய எம்.பி.க்களை வேட்பாளர்களாக பாஜக அறிவித்து இருப்பதன் மூலம், அதன் தோல்வி உறுதியாக தெரிய வருகிறது. 

வரும் டிசம்பர் 3ஆம் தேதிக்குப் பிறகு, நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்பதை, இந்த ஐந்து மாநில தேர்தல் திருவிழாவின் முடிவுகள் இருக்கும் என உறுதியாக கூறலாம். அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவை வீழ்த்தும் பணியில் இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள், ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இணைய வாய்ப்பு உண்டு என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை நாடே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: