Tuesday, October 31, 2023

சகிப்பு தன்மை.....!

சகிப்பு தன்மை குறைந்து போனால் வன்முறை கலாசாரம் பெருகி நாட்டின் வளர்ச்சி  முடங்கும்....!

ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் கருத்து.....!!

டெல்லியில் உள்ள ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பேசிய ரகுராம் ராஜன், இந்தியாவில் தற்போது, எப்போதும் இல்லாத  அளவுக்கு சகிப்பு தன்மை குறைந்து வருகிறது என்றார்.

நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு, சமுதாயத்தின் சகிப்பு தன்மைதான் பெரிதும் கைகொடுக்கிறது என்றும் பல வகையில் தொழில், வர்த்தக உறவுகளை பெருக்குகிறது என்றும் அவர் கூறினார்.

ஆனால், சமீப காலமாக இந்தியாவில் அளவுக்கு அதிகமான அரசியல் குறுக்கீடுகளும், தன்னிச்சையான முடிவுகள் திணிக்கப்படுவதும், அதை மக்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் பரவி வருவதாகவும் ரகுராம் ராஜன் வேதனை தெரிவித்தார்.

இது மக்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது  என்பதுடன், நாட்டின் சமத்துவ நோக்கத்துக்கும் பாதிப்பாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

யாரையும் உடல் ரீதியாக காயப்படுத்துவது, வார்த்தைகளால் வருத்தம் ஏற்பட வைப்பது, ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது அவர்கள் விரும்பாத விஷயங்களை கட்டாயப்படுத்துவது, பொதுவான கருத்துரிமையை அவர்களிடம் இருந்து பறிப்பது போன்றவை நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தாது என்றார் அவர்.

இதுபோன்ற எந்த நெருக்கடிகளையும், எவருடைய கட்டளைகளையும் ஒருபோதும் இந்த சமுதாயத்தில் அனுமதிக்க கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

பாலியல் வன்முறை என்பது சமுதாயத்தில் உடல் ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சரி அறவே ஒழித்தாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

ஆனால் அதற்காக தேவையில்லாத சச்சரவுகளை ஏற்படுத்த நாம் அனுமதிக்க கூடாது. ஒரு கருத்தை திணிப்பதோ, அதை ஏற்க வைப்பதோ கூடாது; சமுதாயத்தில் பல்வேறு கருத்துகள் இருக்கலாம்.  அது தவறில்லை. அதற்காக, எதிர்க்கருத்து சொல்பவர்களை தடுக்கக் கூடாது; தடை போடுவதால் கருத்து சுதந்திரத்தைதான் பறிப்பதாக பொருள். எந்த விவாதத்தையும் தடை செய்வதும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது. 

இப்படி தடை போடுவதால் சகிப்பு தன்மைதான் குறைகிறது.  தடைபோடும் விஷயத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி சகிப்பு தன்மையைத்தான் குறைக்க வைக்கிறது. வீண் விவாதங்கள் கிளம்பி, விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்பட வழிவகுக்கிறது. எல்லாருக்கும் மதிப்பு, மரியாதை உண்டு. அதை அடுத்தவர் தந்தாக வேண்டும். இல்லாது போனால், அங்கு சச்சரவு ஏற்படுகிறது. தொழில், வர்த்தகத்தில் நாம் இன்னும்  வளர வேண்டும்;  அதற்கான நடவடிக்கைகள் பலன் அளிக்க வேண்டுமானால், இந்தியாவில் சகிப்பு தன்மை சார்ந்த சமுதாயம் மீண்டும் ஏற்பட வேண்டும். 

அதை நாமே மாற்ற கூடாது. கேள்வி கேட்கும் உரிமை எல்லாருக்கும் உண்டு. அதை தடுக்க கூடாது.   சவால்களை எதிர்கொள்ளும் சமுதாயம் வேண்டும்; அது தான் நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. காலம் காலமாக எதிரெதிர் விவாதங்கள் இருக்கத்தான் செய்தது. அப்போதும் சவாலான சமயங்கள் உண்டு. ஆனால் சகிப்பு தன்மை இருந்ததால் இந்தியாவில் சமத்துவம் காணப்பட்டது. எந்த பிரிவினரின் உணர்வுகளும் புண்படக்கூடாது;  அவர்களின் சவாலான கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும். உதாசீனப்படுத்த கூடாது. ஒரு நாடு முன்னேற இதுவும் முக்கியம். ஒரு  குறிப்பிட்ட பிரிவினரை ஒதுக்கி மட்டும் நாடு வளர்ந்து விடாது. 

‘ஹிட்லர் ஆட்சியில் ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கின; எல்லா ஊழியர்களும் துல்லியமான நேரத்தில்  அலுவலகத்தில் பணி செய்தனர். 1975ல் இருந்து 77 வரை இந்தியாவில் கூட நெருக்கடி நிலையின் போது இப்படித்தான் எல்லாம் சரியாக இருந்தன. ஆனால், ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். இரும்புக்கரம் கொண்ட அரசு தேவைதான்; அதே சமயம், சட்டமும், ஜனநாயகமும்  கைகோர்ப்பதாக  அமைய வேண்டும். அப்போதுதான் திடமான அரசால் வளர்ச்சியை காண முடியும்’ 

இவ்வாறு ரகுராம் ராஜன் தமது உரையில் குறிப்பிட்டார்.

No comments: