Saturday, October 28, 2023

சாதிவாரிக் கணக்கெடுப்பு.....!

சாதிவாரிக் கணக்கெடுப்பும்....ராகுல் காந்தியும்....!

நாட்டின் மக்கள் தொகை 120 கோடியை தாண்டியுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் இன்னும் வளர்ச்சி அடையாமல் பின் தங்கியே இருந்து வருகிறார்கள். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மக்கள்,  நல்ல கல்வி, நல்ல தொழில், நல்ல வருவாய் கிடைக்காமல், வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், மக்கள் தொகையில் மிகவும் குறைந்த அளவுக்கு மட்டுமே உள்ள ஒருசிலர், நாட்டின் அனைத்து உயர் பதவிகளிலும் இருந்து வருகிறார்கள். அத்துடன் மிகப்பெரிய தொழில்களையும் நிர்வாகித்து வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு இதுவரை காணப்படவில்லை. இதற்கான காரணங்கள் ஆராயப்படவில்லை. அப்படி ஆராயப்பட்டாலும் அதற்கான நல்ல தீர்வு காணப்படவில்லை. முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. 

சாதிவாரிக் கணக்கெடுப்பு:

இத்தகையை சூழ்நிலையில் தான், பீகார் மாநில அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி, அதன் தகவல்களை அண்மையில் வெளியிட்டது. பீகார் அரசு வெளியிட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களில், பல நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. அங்கு வாழும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மக்களின் உண்மை நிலவரங்கள் கிடைத்துள்ளன. இந்த தகவல்களின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு அறிவித்துள்ளது. பீகார் அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன என்றே கூறலாம். 

ராகுல் காந்தி குற்றச்சாட்டு:


இந்நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தற்போது தொடர்ந்து வலியுறத்தி வருகிறார். தாம் செல்லும் இடங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் செய்தியாளர்களின் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், நாட்டில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனைத்து உயர் பதவிகளில் இருந்து வருவது ஏன் என அவர் கேள்வி எழுப்பி வருகிறார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மக்கள் உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். 

எனவே, தற்போது நாட்டில் நிலவும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியம் என்றும், அதன்மூலம் தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய நீதி கிடைக்கும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். அத்துடன், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஐந்து மாநில தேர்தல்கள்:


இத்தகையை பரப்பரப்பான சூழ்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் கடந்த நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி வரும் 30ஆம் தேதிக்குள் நிறைவு பெறுகிறது. இதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி, சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து, தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஐந்து மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்யும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உழைக்கும் என உறுதி அளித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு, ஐந்து மாநில மக்களை சற்று யோசிக்க செய்துள்ளது. 

குறிப்பாக, தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரச்சாரம் செய்யும் ராகுல் காந்தி, சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் அடிக்கடி எடுத்து கூறி வருகிறார்.  நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், சம உரிமைகள் பெற வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியுள்ள மக்களுக்கு இனியும் அநீதி இழைக்கக் கூடாது என்றும் அவர் பேசி வருகிறார். இது பேச்சு அளவில் மட்டுமல்லாமல், செயல் அளவிலும் இருக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் என்றும் அனைத்து மக்களுக்கும் நீதி வழங்கும் என்றும்  ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். 

இதுவரை எந்த வளர்ச்சியும் முன்னேற்றமும் அடையாமல், பின்தங்கி இருந்துவரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மக்கள், சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியத்தை தற்போது உணரத் தொடங்கி இருக்கிறார்கள். இது ஐந்து மாநில தேர்தல்களிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முஸ்லிம்களுக்கும் பயன்:


நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களின் நிலவரம், அவர்களின் வாழ்க்கைத்தரம், வறுமை, வேலையின்மை, கல்வி பெற முடியாத நிலை உள்ளிட்ட அனைத்து உண்மையான தகவல்கள் நிச்சயம் கிடைக்கும். இதன்மூலம், முஸ்லிம் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தேவையான பணிகளை செய்ய அரசுகளை வலியுறுத்த முடியும். இதன் காரணமாக தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமும் சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. 


தற்போது நாட்டில் வாழும் முஸ்லிம்கள், பிற சமூகங்களை விட மிகவும் வசதியாக வாழ்ந்து வருவதாக ஒரு பொய்யான பிரச்சாரம் பாசிச அமைப்புகளால் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியே இருந்து வருகிறார்கள். நன்கு படித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடும் முஸ்லிம் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே உள்ளது. நீதித்துறையிலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டியது காலத்தின் கட்டாயம். 

விழிப்புணர்வு அவசியம்:


சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து முஸ்லிம் சமூகம் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் முஸ்லிம்களுக்கு என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது என அலட்சியத்துடன் ஒருபோதும் இருந்துவிடக் கூடாது. கணக்கெடுப்பின்போது, கவுரவம் பார்க்காமல், உண்மையான தகவல்களை தெரிவிக்க வேண்டும். எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

தற்போதைய சூழ்நிலையில், நாட்டில் முஸ்லிம்களின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த நிலைமை மாற சமூகமும் தங்களை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். அதன்மூலம் மட்டுமே, இந்திய முஸ்லிம்களின் நிலைமை படிப்படியாக மாறும். அத்தகைய மாற்றதை காண வேண்டுமானால், முஸ்லீம் சமுதாயம் விழிப்புணர்வு பெற வேண்டியது மிகவும் அவசியம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: