Tuesday, June 2, 2015

நீதிக்கு களங்கம்....!

நீதியை காக்க புறப்பட்ட கர்நாடக அரசு....!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கில் நீதி துறையின் தவறை திருத்திக் கொள்ளவே அப்பீல்.

ஜெ.வுக்கு தண்டனை என்பது கர்நாடக அரசின் நோக்கம் அல்ல.

நீதி துறை பல தர்ம சங்கடமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என்பதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இப்படி, ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்து இருக்கும் கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.

நீதியை காப்பற்ற வேண்டும் என்பதுதான் கர்நாடகாவின் முக்கிய நோக்கம் என்பதை நாம் பாராட்டிதான் ஆக வேண்டும்.

ஆனால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

நதிநீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசு நீதியை காப்பாற்றி இருக்கிறதா. நிலைநாட்டி இருக்கிறதா.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகம் மதித்து நடந்ததா.

காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி, உத்தரவின்படி, தமிழகத்திற்கு தண்ணீர் அளித்து நீதியை கர்நாடகம் நிலைநாட்டி இருக்கிறதா.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சிறிதும் மதிக்காமல் நடந்து கொண்டது மட்டுமல்லாமல், தமிழகத்திற்கு மிகப் பெரிய துரோகத்தை கர்நாடகம் இழைத்து நீதிக்கு களங்கத்தை ஏற்படுத்தியது.
இப்படி பல விவகாரங்களில் கர்நாடக அரசு நீதியை நிலைநாட்டவில்லை.

நீதிக்கு எதிராகதான் செயல்பட்டது. செயல்பட்டு வருகிறது.

ஆனால், ஜெயலலிதாவின் வழக்கில் மட்டும் நீதியை காப்பற்ற, நீதிதுறையின் தவறை திருத்திக் கொள்ள மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன்தான், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய முன்வந்து இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் மிகவும் வலுவான தலைவராக இருக்கும் ஜெயலலிதாவை எப்படியும் அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கமே கர்நாடகாவின் காரணமாக இருக்கிறது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் மற்ற தலைவர்களை விட கர்நாடகாவிற்கு எதிராக ஜெயலலிதா மிகவும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடி வருகிறார்.

கர்நாடகாவிற்கு மிகப் பெரிய தலைவலியாக இருந்து வருகிறார்.

எனவேதான், எப்படியும் ஜெயலலிதாவின் வலிமையை குறைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் கர்நாடக அரசு முடிவு செய்து, அதற்கு சொத்து வழக்கை கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

கர்நாடகாவில் வழக்கை நடத்த வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.

வழக்கு நடந்து தீர்ப்பு வந்துவிட்டது.

அத்துடன் கர்நாடகாவின் வேலை முடிந்து விட்டது.

இதுதான் சரியான நாகரீகம்.

ஆனால், தமிழகத்தில் ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக வீழ்த்த முடியாத தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எப்படியாவது அவரை சொத்து வழக்கில் மீண்டும் சிக்க வைத்து லாபம் அடைய வேண்டும் என துடிப்பது போன்று கர்நாடக அரசும் இப்போது இறங்கியுள்ளது எனலாம்.

காவிரி விவகாரத்தில் நீதியை கர்நாடகம் நிலைநாட்டி இருந்தால் உண்மையில் நமக்கு நம்பிக்கை வரும்.

ஆனால் கர்நாடகம் அப்படி செய்யவில்லை.

இப்போது மட்டும் ஜெயலலிதா வழக்கில் நீதியை காப்பாற்ற புறப்பட்டு விட்டது.

இதுதான் கர்நாடக அரசு நீதியை காப்பாற்றும் அழகு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: