Friday, January 12, 2024

அலிகர் முஸ்லிம் பல்கலை. வழக்கு...!

சிறுபான்மை அந்தஸ்துக்கான அனைத்து அம்சங்களும்  

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு பொருந்துகிறது…!

சட்டப்பிரிவு 30 சிறுபான்மையினருக்கு கலாச்சார, கல்வி 

உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்கிறது….!

அலிகர் முஸ்லிம் பல்கலை. வழக்கில் 

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்…!!!

புதுடெல்லி,ஜன12-உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உலக புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை நீக்கி கடந்த 1967ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 8 மனுக்கள் மீதான விசாரணை,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முதல்நாள் விசாரணையில், அலிகர் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், பல்கலைக்கழகத்தில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்படுவதாகவும் வகுப்புவாத நிறுவனமாக அலிகர் பல்கலைக்கழகம் இல்லை என்றும் குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்க சிறுபான்மை அந்தஸ்து பாதுகாப்பு தேவை என்றும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களை கட்டாயப்படுத்த அரசுக்கு உரிமை இல்லை என்றும் தவான் கூறினார்.

புதன்கிழமையன்று இரண்டாவது நாள் நடைபெற்ற விசாரணையில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அலிகர் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்தை அளித்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், அதை ரத்து செய்ய முடியாது என வாதிட்டார். 

சிறுபான்மை தன்மை:

வியாழன்கிழமை 3வது நாள் விசாரணை மீண்டும் தொடங்கியபோது, அதில் பங்கேற்று தனது வாதத்தை தொடர்ந்த வழக்கறிஞர் கபில் சிபல், ஒரு கல்வி நிறுவனம் சிறுபான்மை தன்மை உள்ளதா இல்லையா என்பதை அதன் தோற்றத்தில் இருந்து அறிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் பேசிய அவர், ஒரு கல்வி நிறுவனம் தொடங்குவதற்கான உத்வேகம், அதற்கு நிதி அளிப்பதற்கான அத்தியாவசிய காரணங்கள், இவை அனைத்தும் சிறுபான்மை சமூகத்தினரால் இருக்க வேண்டும் என கூறினார். இந்த அம்சங்கள் அனைத்தும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு பொருந்துவதாக அவர் தெரிவித்தார். எனவே அந்த நிறுவனத்தை ஏற்றுக்கொண்டு, சிறுபான்மை அந்தஸ்தை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அத்துடன் அலிகர் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம், அதன் சிறுபான்மை தன்மையை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாகும் என்றும் சிபல் தெரிவித்தார். விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் மூலம், பல்கலைக்கழகங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே மாதிரியான நெறிமுறைகளுக்கு இணங்குவதன் மூலம், ஒரு கல்வி நிறுவனம் அதன் சிறுபான்மைத் தன்மையை இழக்க முடியாது என்றும் கபில் சிபல் திட்டவட்டமாக கூறினார். 

சிறப்பு உரிமைகள்:

இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 30(1)வை சுட்டிக் காட்டி வாதிட்ட கபில் சிபல், இந்த சட்டம், சிறுபான்மையினருக்கு கலாச்சார மற்றும் கல்வி உரிமைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதாக குறிப்பிட்டார். சட்டப்பிரிவு 30 இந்திய சிறுபான்மை சமூகங்களுக்கு கல்வி பெறும் உரிமையை உறுதி செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார். 

முஸ்லிம் சமூகத்தால் நிறுவப்பட்டது: 

இதேபோன்று மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷதன் ஃபராசத், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஒரு வெற்றிகரமான சிறுபான்மை நிறுவனம் என தெரிவித்தார். சிறுபான்மை அந்தஸ்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வெளியேறச் செய்வதற்கு எந்த காரணமும் அடிப்படையாக இருக்க முடியாது என்றும், ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம், தேசிய முக்கியத்தும் வாய்ந்த நிறுவனமாக இருக்க முடியும் என்றும் அவர் கூறினார். 

இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் பெண்கள் தங்களது உயர்கல்வியை தொடர அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகமாக இருக்கிறது என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார். ஒரு சிறுபான்மை சமூகம் தங்களது அடையாளத்தைத் தக்க வைத்து கொள்வதற்கும், தேசிய வாழ்க்கை மற்றும் பிரதான நீரோட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான உரிமை உள்ளது என்றும் வழக்கறிஞர் ஃபராசாத் வாதிட்டார். 

வியாழன்கிழமை மூன்றாவது நாள் விசாரணை நிறைவு பெற்ற நிலையில், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: