Tuesday, January 2, 2024

தனி கவனம் செலுத்த வேண்டும்...!

 

முஸ்லிம்கள் தங்கள் நிலையை மேம்படுத்த, கல்வி, பொருளாதார துறைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும்...!

 

இந்திய முஸ்லிம்களை பொறுத்தவரை கடந்த 2023ஆம் ஆண்டு மிகச் சிறந்த ஆண்டாக அமையவில்லை. கடந்த ஆண்டில் முஸ்லிம் சமுதாயம் பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது. அரியானா உள்ளிட்ட சில வட மாநிலங்களில் முஸ்லிம்களை  குறிவைத்து பாசிச அமைப்புகள் தாக்குதல்களை நடத்தின. மேலும் முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்கவும் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், இதற்கு நாட்டு நலனின் அக்கறை கொண்டு உண்மையான சமூக ஆர்வலர்கள், விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாசிச அமைப்புகளின் திட்டங்கள் மிகப்பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை.

முஸ்லிம்கள் புறக்கணிப்பு:

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, கடந்த 10 ஆண்டுகளில், அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களின் வளர்ச்சியை தடுக்க பல்வேறு சதித்திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.  நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர் தியாகம் செய்த முஸ்லிம் தலைவர்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டு வருகின்றன. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், முஸ்லிம்கள் பீதியில் வாழ வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களின் வீடுகளை புல்டோசர் மூலம் பாஜக அரசு அகற்றி வருகிறது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறு தொழில்களை செய்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் அவர்களின் அமைதி பறிக்கப்பட்டு வருகிறது. இந்திய முஸ்லிம்கள் இந்த நாட்டின் மைந்தர்கள் என்பதை மறந்துவிட்டு, அவர்கள் மீது வன்மத்துடன் பாசிச அமைப்புகள் வன்முறைகளை நடத்தி வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் வரும் நாட்களில் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய முஸ்லிம்கள் எந்த திசையில் தங்களது கவனத்தை செலுத்தி முன்னேற வேண்டும் என்ற வினாவும் அவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. 

நான்கு துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்:

 


கடந்த ஆண்டில் மட்டுமல்ல, நாடு விடுதலை அடைந்ததில் இருந்து, நாட்டில் முஸ்லிம்கள் சந்தித்துவரும் நெருக்கடியான நிலைமையைப் பார்க்கும்போது, அவர்கள் நான்கு முக்கிய துறைகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். குறிப்பாக, மார்க்கம், சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் முஸ்லிம்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

ஆனால், துரதிஷ்டவசமாக, முஸ்லிம்கள் மத்தியில் இந்த நான்கு துறைகளிலும் ஆர்வத்துடன் கூடிய தனி கவனம் செலுத்தப்படவில்லை. அதுகுறித்த விழிப்புணர்வு முஸ்லிம்கள் மத்தியில் இன்னும் ஏற்படவில்லை. இந்த திசையில் நமது முன்னோர்களும் மிகபெரிய அளவுக்கு நல்ல முயற்சிகளை எடுக்கவில்லை. இஸ்லாமிய மார்க்கம் குறித்து தவறான புரிதல்கள் மாற்று மத சகோதர, சகோதரிகள் மத்தியில் இன்னும் இருந்து வருகிறது. அத்தகைய தவறான புரிதலை உடைக்க முஸ்லிம் சமுதாயம் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இஸ்லாமிய நெறியை முழுமையாக பின்பற்றி, பலருக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டியது முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். ஆனால், அப்படி செய்யாமல், முஸ்லிம்கள் குறித்த தவறான புரிதலை நாம் மற்றவர்களின் மனதில் உருவாக்கி இருக்கிறோம். இதன் காரணமாக அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், நமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளும் வகையில், கல்வி, சமூக, தார்மீக ரீதியில் நேர்மறையான மாற்றங்களை முன்வைக்க முஸ்லிம்கள் உறுதியேற்க வேண்டும்.

புதிய தலைமுறையினருக்கு பயிற்சி:

 


போட்டிகள் நிறைந்த இந்த வேகமான, நவீன காலத்தில் சமயப் பண்பும் சகோதரர்களுக்கும், நாட்டுக்கும் நடைமுறை அழைப்பாக அமையும் வகையிலும் முஸ்லிம் தலைமுறையினரைப் பயிற்றுவிக்க வேண்டும். அத்துடன், நாடு முழுவதும் சொந்த கல்வி நிறுவனங்களை, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான நவீன கல்விக்கான நிறுவனங்களை நிறுவ வேண்டும். இதற்காக கொண்டாட்டங்களுக்காக நாம் செய்யும் வீண் செலவுகளை நிறுத்திவிட வேண்டும். இதன்மூலம், கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கான நிதி கிடைக்கும் என மூத்த மார்க்க அறிஞர் முஃப்தி அஜிசுல் ரஹ்மான் ஃபதேபுரி யோசனை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நிறைய நேரத்தை வீணடித்துவிட்ட முஸ்லிம் சமுதாயம், நேரத்தையும் தங்களது சாதனைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எதிர்காலத்திற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்.  அதற்காக கல்வியை நோக்கி ஒரு திடமான திட்டத்தை உருவாக்க வேண்டும். நம் தலைமுறையை பயனுள்ள அறிவின் நகைகளால் சித்தப்படுத்த வேண்டும். முஸ்லிம்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, நாடு மற்றும் சமூகத்தில் அவர்களின் நிலையை வலுப்படுத்த வேண்டும். அத்துடன், சமூக உறவுகளை மேம்படுத்தி, சகோதரத்துவத்தையும் அன்பையும் முஸ்லிம்கள் பரப்ப வேண்டும். முஸ்லிம்கள் தங்களின் ஒழுக்கத்தால் மற்றவர்களின் இதயங்களை வெல்ல முயற்சி செய்ய வேண்டும்.

நம்பிக்கையை இழக்கக் கூடாது:

 


2023 இந்திய முஸ்லீம்களுக்கு கடினமான ஆண்டாகும். அரசியல் ஏற்ற தாழ்வுகளுடன், இந்த ஆண்டு அநீதிகளுக்காகவும் நினைவுகூரப்படும்.. ஆனால் நாம் முற்றிலும் நம்பிக்கையற்றவர்களாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. புதிய ஆண்டில் புதிய அபிலாஷைகளுடனும், புதிய நம்பிக்கைகளுடனும், புதிய உத்வேகத்துடனும் முன்னோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. மெழுகுவர்த்தி அணைக்கப்பட்டு, காற்று பலமாக வீசினால், காற்றை அடைத்து மெழுகுவர்த்தி அணையாமல் இருக்க நாம் சுற்றி அமர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். இதுதான் இன்று நம் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் நிலை. தற்போதைய நிலைமையைப் பற்றி முஸ்லிம்கள் மட்டும் கவலைப்படவில்லை, ஆனால் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகாத அனைத்து மக்களும் வர்க்கங்களும் குறிவைக்கப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் நாம் ஒற்றுமையாக நிலைமையை எதிர்கொள்வதும், நல்ல சக்திகளின் அமைப்புகளுடன் ஒன்றிணைவதும் அவசியமாகும். கல்வி குறித்து பேசும் முஸ்லிம்கள்  இன்றும் கல்வியை பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்துவதில்லை. கல்வியின் நோக்கம் ஆளுமையை மேம்படுத்துவதும் வேலைவாய்ப்பைப் பெறுவதும் மட்டுமல்ல, ஒருவரின் உரிமைகளை அறிந்து அவர்களுக்காக போராடுவதும் ஆகும் என  அரிஃபா கான்  ஷெர்வானி என்ற ஊடகவியலாளர் கருத்து கூறியுள்ளார்.

கடந்த 1947ல் இருந்தே இந்திய முஸ்லிம்களை பிரச்சனைகளும் துன்பங்களும் சூழ்ந்துள்ளன. இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் தனியாக இல்லை, ஆனால் அவர்களுடன் மற்றவர்கள் உள்ளனர், தங்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால், நிலைமை மாறாது.போனது போய்விட்டது. அதற்காக புலம்புவதில் பயனில்லை. கடந்த காலத்திலிருந்து உத்வேகம் பெற்று எதிர்காலத்தைத் திட்டமிடும் போது நல்ல மாற்றங்கள் ஏற்படும் என உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் நாட்டுக்கு சுமையாக இல்லாமல், நாட்டுக்கு சொத்தாக இருக்க வேண்டும். அதை நாட்டுக்கு நிரூபிக்க வேண்டும். நம்மால் எத்தனை பேர் பயனடைகிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நாம் எத்தனை பேருக்கு வாழ்வாதாரமாக இருக்கிறோம்? நம்மில் எத்தனை பேர் திருப்தி அடைகிறார்கள்? நாம் கைகளை விலக்கினால், எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள்? இதற்கு நாம் ஒரு காலத்தில் ஏகபோகமாக இருந்த நமது வர்த்தக பாரம்பரியத்தை ஒருங்கிணைக்க வேண்டும். இந்தியாவை அழகுபடுத்துவதற்கும், இந்த நிலைக்கு கொண்டு வருவதற்கும் நமது முன்னோர்கள் ஆற்றிய அளப்பரிய பணியை, நாமும் அவ்வாறே ஆற்ற வேண்டும் என்பது டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக அரபுத்துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் சாஹிம் ஆலம் உள்ளிட்ட அறிஞர்களின் யோசனைகளாக உள்ளன. இஸ்லாமிய அறிஞர்களின் இத்தகைய நல்ல யோசனைகளையும், கருத்துக்களையும் இஸ்லாமிய சமுதாயம் நன்கு உள்வாங்கி, இனி வரும் நாட்களில் நல்ல வேகத்துடன் செயல்பட்டால், முஸ்லிம்களின் நிலைமை நிச்சயம் மாறும் என கூறலாம்.

 

-             எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

No comments: