Thursday, January 18, 2024

முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தீர்மானம்…!

 

முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்…..!

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தீர்மானம்…!!

 


ஹைதராபாத், ஜன,19- அகில இந்திய முஸ்லிம் தனியர் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு கூட்டம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அல்-மஹத்-உல்-அலி-இஸ்லாமியில் 18.01.2024 அன்று நடைபெற்றது.

வாரியத்தின் தலைவர் மௌலானா காலித் சைபுல்லா ரஹ்மானி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணைத் தலைவர் ஜனாப் சையத் சஅததுல்லா ஹுசைனி, மௌலானா முஹம்மது உமரின் மஹ்ஃபூஸ் ரஹ்மானி, மௌலானா அஹ்மத் வாலி பைசல் ரஹ்மானி, மௌலானா டாக்டர் யாசின் அலி உஸ்மானி, வாரியப் பொருளாளர் பேராசிரியர் ரியாஸ் உமர், வாரியச் செயலாளர்கள், ஜம்மியத் உலமாவின் தலைவர் மஹ்மனா ஸ்யீத் மௌதானா அசாத் மதனி, மத்திய ஜம்மியத் அஹ்ல் ஹதீஸ் அமீர் மௌலானா அஸ்கர் அலி இமாம் மெஹ்தி ஸலபி, நீதியரசர் சையத் ஷா முஹம்மது காத்ரி, மௌலானா கலீலுர் ரஹ்மான் சஜ்ஜாத் நௌமானி, மௌலானா சாகீர் அஹ்மத் ரஷாதி, மௌலானா அதிக் அஹ்மத் பஸ்த்வி, மௌலானா அதிக் அஹ்மத் பஸ்த்வி, மௌலானா முஹம்மது ஜாபர் பாஷா சாஹிப், மௌலானா மசூத் ஹுசைன் முஜ்தஹ்தி, மூத்த வழக்கறிஞர் யூசுப் ஹாதிம் மச்சாலா, டாக்டர். சையத் காசிம் ரசூல் இலியாஸ்  மௌலானா அப்துல் அலீம்ஹத்கலா. , டாக்டர். ஜாஹீர் ஐ காசி, முஹம்மது தாஹிர் ஹக்கீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய மகளிர் அணி தலைவர் பாத்திமா முசப்பர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்:

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. வாரியத்தின் உறுப்பினர்களின் அளித்து ஆலோசனைகளும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர், முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, வாரணாசியில் உள்ள கியான் வாபி மசூதி மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா தொடர்பாக கீழ் நீதிமன்றங்களில் எழுந்துள்ள புதிய சர்ச்சைகள் குறித்து கவலை தெரிவித்த முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், டெல்லி சுன்ஹாரி மசூதி விவகாரம் உள்ளிட்ட புதிய பிரச்சினைகளை தற்போது கிளப்பி இருப்பது வேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளது. சுன்ஹாரி மசூதி மற்றும் பிற மசூதிகள் பாரம்பரிய கட்டுமானங்களில் சேர்க்கப்பட்டுள்ளதால், அவற்றைச் சீர்குலைப்பது நாட்டின் வரலாற்றுப் பாரம்பரியத்தை சேதப்படுத்துவதற்குச் சமம் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனம்-இந்திய அரசுக்கு வேண்டுகோள்:

பாலஸ்தீனப் பிரச்சனை ஒரு மனிதாபிமானப் பிரச்சனை என்று கூறியுள்ள வாரியம், அங்கு இஸ்ரேல் வடிவில் உள்ள ஒரு அடக்குமுறை சக்தி, அந்நாட்டின் பூர்வீகக் குடிகளை அழிப்பதில் குறியாக உள்ளது என்றும், சத்தியத்திற்காக போரடும் பாலிஸ்தீன மக்களுக்கு இஸ்லாமிய உலகம் துணையாக நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீன் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட இந்திய தலைவர்கள் கடைப்பிடித்த நிலைப்பாட்டை, தற்போது உள்ள பாஜக அரசும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.

பொது சிவில் சட்டம் வேண்டாம்:

பல்வேறு மத, மொழி மற்றும் கலாச்சாரம் கொண்ட இந்தி நாட்டிற்கு ஒரே மாதிரியான சிவில் சட்டம் முற்றிலும் பொருத்தமானது அல்ல என்பதை வாரியம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதை மீண்டும் சுட்டிக் காட்டிய வாரியம், இதுபோன்ற முயற்சிகள் நாட்டின் அரசியலமைப்பின் நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது.  நாட்டில் பெண்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்க அரசு பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்த வாரியம், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது மட்டுமே பிரச்சினைக்கு தீர்வாகாது என்றும் கூறியுள்ளது.

வக்பு சட்டங்கள்:

 

வக்பு சட்டங்கள் மீதான சர்ச்சைகளை குறித்து விவாதித்த வாரியம், அந்த சட்டங்களை ரத்து செய்வதற்கான முயற்சிகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. வக்பு சட்டங்கள் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வக்பு சொத்துக்கள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற வக்பு வாரியங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வக்பு சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதற்கும் வாரியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

உலகில் நீதியை நிலைநாட்ட வேண்டிய முஸ்லிம் சமூகமே தற்போது, பல்வேறு தீமைகளில் ஈடுபட்டுள்ளதாக வேதனை தெரிவித்த வாரியம், பல்வேறு பிரிவினருக்கு எதிராக, குறிப்பாக வயதான பெற்றோர் மற்றும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் கொடுமை சம்பவங்கள் ஏராளமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது. திருமணங்களை எளிமையாக நடத்த முஸ்லிம்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. குடும்பம் மற்றும் சமூக விஷயங்களில் ஷரியாவின் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று இக்கூட்டம் அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

முஸ்லிம் அறிஞர்களுக்கு வேண்டுகோள்:

வெள்ளிக்கிழமை சொற்பொழிவுகள், மதரஸா கூட்டங்கள், திருமணங்கள் மற்றும் பிற கூட்டங்களில் சமுதாயத்தை சீர்திருத்துவது பற்றி முஸ்லிம் அறிஞர்கள் அதிகம் பேச வேண்டும் என்றும்,  குறிப்பாக, வரதட்சணை மற்றும் வீண் செலவுகளுக்கு எதிராகப் பேச வேண்டும் என்றும் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.  சமுதாய சீர்திருத்தத்தில், குறிப்பாக விவாகரத்து சம்பவங்களை குறைக்க, மகன் மற்றும் மருமகள் உறவை மகிழ்ச்சியாக ஆக்க, சட்டவிரோத பழக்கவழக்கங்கள் மற்றும் திருமணங்களை தடுக்க, பெண் குழந்தைகளுக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும், பெண்கள்,  சமூகம் மற்றும் குடும்பத்தின் சீர்திருத்தத்தில் முன்மாதிரியான பங்கை வகிக்க வேண்டும் என்றும் முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: