Saturday, January 20, 2024

எச்சரிக்கை...!

நீங்கள் நின்றுகொண்டு உணவு சாப்பிடும் பழக்கம் உள்ளவரா...! 

புற்றுநோய் ஆபத்து எச்சரிக்கை...!!


உலகில் வாழும் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ ஆசைப்படுகிறார்கள். அதற்காக நல்ல சத்தான உணவுகளை தேடி தேடி வாங்கி தங்கள் உணவு முறைகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதன்மூலம் நோய் இல்லாத ஆரோக்கிய வாழ்வு கிடைத்துவிடும் என பெரும்பாலோர் நம்புகிறார்கள். ஆனால், உண்மையில் மனிதனுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க, சத்தான உணவுகள் மட்டும் போதாது. அத்துடன் ஆரோக்கியமான, நல்ல உணவுப் பழக்கங்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது தான், நீண்ட நாள் வாழ்க்கிறோமோ இல்லையோ, குறைந்த அளவு, நோய் இல்லாமல் வாழ முடியும். 

மாறிவரும் உணவு முறைகள்:

தற்போது உலகம் முழுவதும் உணவு சாப்பிடும் முறைகளில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்றைய நவீன உலகம் நின்றுகொண்டு, உணவுகளை சாப்பிடுவதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறது. திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் உணவுகள் நின்றுகொண்டு சாப்பிடும் வகையில் பறிமாறப்படுகிறது. இதற்காக நீண்ட வரிசையில் விருந்தாளிகள் நின்று உணவுகளை வாங்கிச் சென்று நீண்ட நேரம் நின்றுகொண்டே சாப்பிடுகிறார்கள். ஒருசிலர், நிகழ்ச்சிகளில் ஏற்பாடு செய்யப்படும் மேஜைகளில் உணவுகளை வைத்துக் கொண்டு, பின்னர் நிதானமாக அமர்ந்து அவற்றை சாப்பிடுகிறார்கள். இப்படி, சாப்பிடுகிறவர்களை, அங்குள்ள சிலர், கேலியாக பார்ப்பதையும் நாம் காண முடிகிறது. 

இப்படி, மாறிவரும் உணவு பழக்கங்கள் மூலம் மிகப்பெரிய அளவுக்கு ஆபத்துக்கள் உள்ளன என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. அப்படி உணர்ந்துகொண்டால், நின்றுகொண்டு சாப்பிடுவதை, அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். நின்றுகொண்டு சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிட்டு, நன்றாக அமர்ந்து சாப்பிட்டு தங்களுடைய வாழ்க்கையை ஆரோக்கிய வாழ்வாக மாற்றிக் கொள்வார்கள். 

ஆரோக்கிய வாழ்விற்கு:

இந்தியர்கள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், முன்பு மிகவும் ஆரோக்கியமாக வாழ காரணமாக அமைந்தது அவர்களின் உணவுமுறையும் உணவு பழக்கவழக்கங்களும் தான். இதனால் முந்தைய தலைமுறை மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தது. பல ஆண்டுகள் எந்தவித நோய் இல்லாமல், நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்தார்கள். எனவே நாம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமானால், நமது உணவுகளில் மட்டுமல்லாமல், உணவு உண்ணும் முறைகளிலும் சில நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு இந்த பழக்க வழக்கங்கள் மிகவும் அவசியம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

ஆய்வில் அதிர்ச்சி தகவல்:


ஆரோக்கியமாய் வாழ எத்தகையை உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து உலகம் முழுவதும் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, அண்மையில் நின்றுகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, லக்னோவில் உள்ள கல்யாண் சிங் பல்நோக்கு புற்றுநோய் மருத்துவமனை ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நின்றுகொண்டு உணவுகளை சாப்பிடுவதால், குடல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், உள்ளிட்ட ஆபத்துக்கள் ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், உணவுக்குழாயில் பல்வேறு புதிய வகை நோய்கள் உருவாகும் என்றும் ஆய்வு எச்சரிக்கை செய்துள்ளது. 

இது மட்டுமல்ல, உடலில் கட்டிகள் உருவாக வாய்ப்பு உண்டு என்றும், நின்றுகொண்டு சாப்பிடுவதால், அடிக்கடி உடல் பாதிப்பு ஏற்பட்டு, நோய்கள் வரும்  என்றும் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

செரிமானக்கோளாறு:

லக்னோ புற்றுநோய் ஆராய்ச்சி மைய மருத்துவர்களின் ஆய்வின்படி, நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது என்றும், இதனால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுகிறது என்றும், இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நின்றுகொண்டு சாப்பிடும்போது, ஒருவர் அதிக நேரம் சாப்பிட நேரிடும் என்று கூறியுள்ள மருத்துவர்கள், எனவே, எப்பொழுதும் அமர்ந்து நிதானமாக சாப்பிடுவதே ஆரோக்கியமானது ஆலோசனை கூறியுள்ளனர். மருத்துவரீதியாக நின்று கொண்டு சாப்பிடுவது உணவு செரிப்பதை 30 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும்  பசி எடுக்க தொடங்கிவிடும். விரைவான செரிமானம்  ஆபத்தானது. ஏனெனில் உணவிலிருந்து முழுமையாக சத்துக்களை உறிஞ்சும் முன் உணவு செரித்து விடுவதால் மீதமுள்ள சத்துக்கள் வாயுவாகி உடலில் தங்கிவிடுகிறது. இது குடல் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, கார்போஹைட்ரேட்டுகள் முழுமையாக செரிக்காத போது அது வீக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். 

உட்கார்ந்து சாப்பிடுங்கள்:

எப்போதும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு செரிமானம் சீராக இருக்கும் என்றும்,  அதிகமாக சாப்பிடுதல், தவறான நேரங்களில் பசி எடுத்தல் போன்ற பிரச்சினைகள் வராது என்றும் உட்கார்ந்து சாப்பிடும்போது வயிறு நிறைந்தவுடன் தானாக மூளை வயிறுக்கு சிக்னல் அனுப்பிவிடும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடும்போது நரம்பு மண்டலம் சீராக இருப்பதால் உணவில் உள்ள சத்துக்கள் நேரடியாக உடலுக்கு கிடைப்பதுடன் முழுமையாக செரிமானமடையும். எனவே உடல் எடை கூடுவது தடுக்கப்படுகிறது. அமர்ந்து சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படாது என்றும், உடலின் தசைகளை வலுவாக்குவதுடன் செரிமான மண்டலத்தை சரியாக செயல்பட வைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவது இடுப்பை சுற்றியுள்ள பகுதிகளை வலுவாக்கி, முதுகு வலியை குறைக்கிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதய ஆரோக்கியத்திற்கும் உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதுதான் சிறந்த முறையாகும். 

இஸ்லாமிய முறை:

மனித வாழ்க்கை எப்படி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கு, இஸ்லாமிய நெறிமுறைகளில் அழகான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக தான், நின்றுகொண்டு சாப்பிடுவது, நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பது ஆகியவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்து இருக்கிறார்கள். நின்று கொண்டு சாப்பிடுவதும் குடிப்பதும் மக்ரூஹ் மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த பழக்கங்களுக்கு சில ஹதீஸ்கள் கடுமையாக எச்சரிக்கின்றன. உட்கார்ந்த நிலையில் சாப்பிடுவதும் குடிப்பதும் இஸ்லாமிய வழக்கம் என்றும் நமக்கு அழகாக சொல்லப்பட்டுள்ளது. சாப்பிடும் பழக்க வழக்கங்கள் குறித்து நடத்தப்படும் பல்வேறு ஆய்வுகளை நாம் கவனத்தில் எடுத்துகொண்டு,நமது முன்னோர்கள் கடைப்பிடித்த நல்ல பழக்கவழக்கங்கள் மூலம் உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து நிச்சயம் தப்பிக்கலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: