Sunday, January 7, 2024

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள  40 தொகுதிகளிலும்  இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்...!

தென்மாநில மக்கள் பாஜகவை புறக்கணித்துவிட்டார்கள்...!!

வட மாநிலங்களில் பாஜகவின் தோல்விகள், வெற்று முழக்கங்கள் குறித்து 

மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது...!!!

பிரபல ஏசியாநெட் தொலைக்காட்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 

தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு பேட்டி:


இந்தியாவில் பிரபலமாக உள்ள தொலைக்காட்சிகளில் ஒன்றான ஏசியாநெட் தொலைக்காட்சியின் சென்னை செய்திப்பிரிவு தலைவர் ஜோபி ஜார்ஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸிலில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை சந்தித்து சிறப்பு நேர்காணலை நடத்தினார். இந்த சிறப்பு பேட்டியில் ஜோபி ஜார்ஜ் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு, கே.எம்.காதர் மொகிதீன் எளிமையான ஆங்கிலத்தில் மிகத் தெளிவாக பதில்களை அளித்தார். ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அந்த சிறப்பு பேட்டியில் இருந்து சில பகுதிகள்:

தென்மாநிலங்களில் பாஜக இல்லை:

நாடு முழுவதும் பாஜக தன்னை மிகப்பெரிய சக்தியாக காட்டிக் கொண்டு இருக்கிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாஜகவிற்கு மக்களின் ஆதரவு இல்லை என்பதுதான் உண்மையான நிலைமை. குறிப்பாக, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களை எடுத்துக் கொண்டால், பாஜகவின் சிந்தாந்தங்களையும் கொள்கைகளையும் தென்மாநில மக்கள் முழுமையாக நிராகரித்துவிட்டனர். தென்மாநிலங்களில் பாஜகவின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன. அண்மையில் நடைபெற்ற கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம், தென்மாநிலங்களில் வலிமையான சக்தியாக மாற்ற பாஜக எடுத்த முயற்சிகள் அனைத்தும் அம்மாநிலங்களின் மக்கள் முழுமையாக நிராகரித்துவிட்டனர் என்பது தெளியாக தெரிய வருகிறது. 

வட மாநிலங்களில் விழிப்புணர்வு:

வட மாநிலங்களில் மத ரீதியாக மக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தி பாஜக அரசியல் செய்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றிய பாஜக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை. இதனை மறைக்க, ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை பாஜக கையில் எடுத்து அதன்மூலம் அரசியல் லாபம் பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. பொருளாதாரம் நல்ல முன்னேற்றத்தை அடையவில்லை. பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின்படி,  ஏழை, எளிய மக்களுக்கு நல்ல நாட்கள் வரவில்லை. நாடு முழுவதும் மக்கள் இன்னும் சரியான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை பெறாமல் சிரமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். 

ஆனால், பாஜகவின் தலைவர்கள், மிகப்பெரிய சாதனைகளை செய்துவிட்டதாக வெற்று முழக்கங்களை பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த வெற்று முழக்கங்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பலன் அளிக்காது என்பதால், ராமர் கோவில் உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுத்து மக்களை திசை திருப்பி வருகிறார்கள். குறிப்பாக, வட மாநில மக்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இந்துத்துவ அமைப்புகளும் பாஜகவுடன் இணைந்து மக்களை குழப்பிக் கொண்டே இருக்கிறது. ஆனால், தற்போது நிலைமை மாறி வருகிறது. பாஜகவின் வெற்று முழக்கங்கள் குறித்து வடமாநில மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும், பாஜகவின் தோல்விகள் குறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதன்மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களிலும் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என உறுதியாக கூறலாம். 

ஒற்றுமையை சிதைக்க சதி:

இந்தியா பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், பண்பாடுகள் கொண்ட மக்கள் வாழும் ஒரு மதசார்ப்பற்ற நாடு. இந்திய அரசியலமைப்பு சட்டமும் இந்தியாவை மதசார்பற்ற நாடாக பிரகடனம் செய்துள்ளது. நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் தங்களது மொழி, கலாச்சாரம், பண்பாட்டை பின்பற்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இந்த ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என புதிய சிந்தனைகளை நாட்டில் விதைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

இந்திய மானிட இயல் சர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் 4 ஆயிரத்து 698 சமூக அமைப்புகள் உள்ளன என்றும், இந்த சமூகங்களில் உள்ள மத நம்பிக்கை, மதச் சடங்கு, மத நடவடிக்கைள் வித்தியாசமானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணிறந்த முரண்பாடுகளும், வேறுபாடுகளும் நிறைந்துள்ள சமூக அமைப்புகள் நாடு முழுவதிலும் பரவலாக இருக்கின்றன என்றும் அந்த சர்வே அறிக்கை தந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என புதிய பீதியை உருவாக்கி நாட்டு மக்களிடையே அமைதியை சீர்குலைக்க பாஜக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் ஒற்றுமையை சிதைக்க சதி நடக்கிறது. 

முஸ்லிம்கள் புறக்கணிப்பு:

நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை மறந்துவிட்டு, இந்தியாவில் வாழும் 25 கோடி முஸ்லிம்களையும் பாஜக புறக்கணித்து வருகிறது. ஒன்றியத்தில் உள்ள பாஜக அரசில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லாத நிலை இருந்து வருகிறது. பாஜகவில் முஸ்லிம் எம்.பி.க்கள் கிடையாது. முஸ்லிம்களின் வாக்குகள் தங்களுக்கு வேண்டாம் என பாஜகவினர் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இதன்மூலம் முஸ்லிம்கள் மீது அவர்கள் எத்தகைய வன்மத்துடன் இருக்கிறார்கள் என்பதை மிக தெளிவாக அறிந்துகொள்ளலாம். அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் புறக்கணிப்பட்டு வருகிறார்கள். அரசு உயர் பதவிகளில் முஸ்லிம்கள் இல்லை. நீதிமன்றங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகள் இல்லை. கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மதசார்பற்ற இந்தியாவில், முஸ்லிம்களை அழித்துவிட பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சி.ஏ.ஏ. போன்ற திட்டங்களை அமல்படுத்தி, முஸ்லிம்களுக்கு நெருக்கடிகளை தொடர்ந்து பாஜக தந்துகொண்டே இருக்கிறது. 

40 தொகுதிகளிலும் வெற்றி:



இப்படிப்பட்ட சூழ்நிலையில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை  28 கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்து சந்திக்க உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தலைமையிலான கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை புறக்கணிக்க சிறுபான்மையின மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் உறுதியாக உள்ளார்கள். எனவே, பாஜகவின் திட்டங்கள் தமிழகத்தில் ஒருபோதும் பலிக்காது. 

அதிமுகவில் ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து செயல்பட்டாலும், அக்கட்சிக்கு சிறுபான்மையின மக்கள் வாக்குகள் நிச்சயம் கிடைக்காது. தற்போது உள்ள அதிமுக, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுக இல்லை. பல அமைப்புகளாக அந்த கட்சி சிதைந்துவிட்டது. மேலும், இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த பல சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்ததை சிறுபான்மையின மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு கூட, பாஜகவின் பக்கம் அதிமுக சாய நிறைய வாய்ப்புகள் உண்டு. எனவே, சில இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவுடன் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற அதிமுகவின் கனைவு நிச்சயம் பலிக்காது. தற்போதைய அரசியல் சூழ்நிலையை முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையின மக்களும் மிகத் தெளிவாக அறிந்து இருக்கிறார்கள். எனவே, அவர்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள். 

ராமர் கோவில் விவகாரம்:

ராமர் கோவில் விவகாரத்தைப் பொறுத்த வரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மிக தெளிவான நிலைப்பாட்டுடன் இருந்து வருகிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, முஸ்லிம்களுக்கு சாதகமாக இல்லையென்றாலும், அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும் இ.யூ.மு.லீக், அந்த தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறது. எனவே, பிரச்சினையை மிகப்பெரிய அளவுக்கு மீண்டும் வளர்க்க விரும்பவில்லை. ஆனால், ராமர் கோவில் விவகாரத்தை அரசியல் லாபத்தோடு பாஜக அணுகுவதை இ.யூ.மு.லீக் எதிர்க்கிறது. தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் மத நம்பிக்கைகளை பின்பற்ற உரிமை உண்டு. அதை நாம் ஆதரிக்கிறோம். ஆனால், மக்கள் மத்தியில் மத துவேஷங்களை பரப்புவதை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. 

ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்காது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதேநேரத்தில், காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், அவர்கள் விரும்பினால், கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. அதை நாம் ஒருபோதும் தடுக்க முடியாது. அவர்களின் மத நம்பிக்கையின்படி, அவர்கள் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதை நாம் எப்படி தடுக்க முடியும்? இந்தியா கூட்டணியில் இடம்பெற்று விட்டார்கள் என்பதற்காக, விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என தடுப்பது நியாயம் இல்லையே. எனவே, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்வது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நினைக்கிறது. 

நாட்டில் தற்போது நிறைய பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில், ராமர் கோவில் ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ராமர் கோவில் விவகாரத்தில் இந்து மடாதிபதிகளே, பிரதமருக்கு எதிராக இருப்பதை நாளிதழ் செய்திகள் மூலம் அறிய முடிகிறது. எனவே, வளர்ச்சிப் பணிகளை முன்வைத்து, நாடாளுமன்றத் தேர்தலை பிரதமர் சந்திக்க வேண்டும். அப்படி சந்தித்தால், பாஜக நிச்சயம் படுதோல்வி அடையும் என்பது உறுதி. 

- நன்றி: ஏஷியாநெட் தொலைக்காட்சி

- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: