Saturday, January 13, 2024

எதிர்ப்பு.....!

வரலாற்று சிறப்புமிக்க டெல்லி சுன்ஹாரி பாக் பள்ளிவாசலை இடிக்க இந்திய வரலாற்று காங்கிரஸ் அமைப்பு எதிர்ப்பு....!

உத்தரப் பிரரேதச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபரி மசூதியை இடித்துவிட்டு, அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்புவரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ராமர் கோவில் திறப்பு விழாவை தங்களது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இத்தகைய சூழ்நிலையில் டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சுன்ஹாரி பாக் மசூதி, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி, இந்த பள்ளிவாசலை இடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சுன்ஹாரி பாக் பள்ளிவாசலின் வரலாறு: 

டெல்லி மக்களால், சுன்ஹாரி பாக் மஸ்ஜித் என அழைக்கப்படும் கோல்டன் பாக் பள்ளிவாசல், 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. அத்துடன் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கும் பாரம்பரிய கட்டிடமாகும். சுனேஹ்ரி மஸ்ஜித்  பழைய டெல்லியில் உள்ள 18ஆம் நூற்றாண்டு மசூதியாகும். இது முகலாய பேரரசர் முகமது ஷாவின் ஆட்சியின் போது, மொகலாய பிரபு ரோஷன்-உத்-தௌலாவால் கட்டப்பட்டது. சுனேஹ்ரி மஸ்ஜித் 1721-1722 காலகட்டத்தில் கட்டப்பட்டது. இந்த மசூதி ரோஷன்-உத்-தௌலாவின் ஆன்மீக வழிகாட்டியான ஷாபிக்க்கு அர்ப்பணிக்கப்பட்டது. சுனேஹரி பாக் மஸ்ஜித்,  மூன்றாவது வகை பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

மசூதியை இடிக்க திட்டம்: 

இப்படி வரலாற்று சிறப்புமிக்க இந்த சுன்ஹாரி பாக் மஸ்ஜித், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, மஸ்ஜித்தை இடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சுன்ஹாரி பாக் மசூதி இடிப்புக்கு எதிராக மசூதியின் இமாம் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில் போக்குவரத்துக்கு இடையூறாக பள்ளிவாசல் இல்லை என விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சுன்ஹாரி பாக் மஸ்ஜித் போன்ற பாரம்பரிய கட்டமைப்பை அகற்ற புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலுக்கு சட்டம், அதிகாரம் அளிக்கவில்லை. இந்த மசூதி தொடர்ந்து செயல்பாட்டில் உள்ள ஒரு வழிபாட்டுத்தலமாக இருப்பதால், அதனை ஒருபோதும் அகற்ற முடியாது. கடந்த 1991ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வழிப்பாட்டுத்தலங்களின் நிலை குறித்த சட்டத்தின்படி, சுன்ஹாரி பாக் மசூதியை இடிக்க முடியாது என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.

இந்திய வரலாற்று காங்கிரஸ் அமைப்பு எதிர்ப்பு:

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சுன்ஹாரி மசூதியை இடிக்கும் திட்டத்தை இந்திய வரலாற்று காங்கிரஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்பை அகற்றுவதற்கான தனது திட்டத்தை கைவிட வேண்டும் என்று புதுடெல்லி  முனிசிபல் கார்ப்பரேஷனை இந்திய வரலாற்று காங்கிரஸ்  வலியுறுத்தியுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றம்:

இந்திய வரலாற்று காங்கிரஸ் அமைப்பின் மாநாடு அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. அதில் சுன்ஹாரி மசூதியை இடிக்கக் கூடாது என தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. மேலும், மசூதிக்கு ஆதரவாக வரலாற்றாசிரியர்களின் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்த முக்கியமான வரலாற்றுக் கட்டமைப்பை அகற்றுவதற்கான திட்டத்தை  முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டாம் என்று புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு (என்.டி.எம்.சி.)  வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், “சுன்ஹாரி பாக் மசூதி முகலாயர் கால கட்டடம், அது இன்னும் பயன்பாட்டில் உள்ளது. கிரேடு III கட்டிடங்களின் வரையறைகளின்படி, பிரிவு 1.12, ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின் இணைப்பு II, ஆகிய இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள கட்டிடங்கள் 'நகரத்தின் அழகிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் சுன்ஹாரி மசூதி கட்டிடக்கலை அழகியல், சமூகவியல் ஆர்வத்தை தூண்டுகிறது. வட்டாரத்தின் தன்மையை நிர்ணயிப்பதில் பங்களிக்கிறது மற்றும் பிராந்தியத்தின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கை முறையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் இந்திய வரலாற்று காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

குற்றச்சாட்டு:

அண்மை காலங்களில் நமது கட்டிடக்கலை பாரம்பரியத்தை அழிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் டெல்லி நகர வரலாற்றின் ஒரு சகாப்தத்தின் நினைவுச்சின்னமாக மசூதி இருந்து வருகிறது என்றும் இந்திய வரலாற்று காங்கிரஸ் கூறியுள்ளது. எனவே மசூதியின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்து  அதனை இடிக்காமல் புதிய நகரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் ஐ.எச்.சி. வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கடந்த 1984 ஆம் ஆண்டில் இருந்து, இந்திய வரலாற்று காங்கிரஸ் நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கும் முக்கியமான பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறது.

அந்த வகையில் “அனைத்து கட்டிடங்களும், அவற்றின் இயல்பு எதுவாக இருந்தாலும், 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருந்தாலும், நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் விதிமுறைகளின்படி கண்டிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் இவை மதக் கட்டமைப்புகளாக இருந்தால், அவற்றின் தன்மையை மாற்றக்கூடாது. மேலும், வழிபாடு நிறுத்தப்பட்ட இடத்தில், அதை மீட்டெடுக்கக் கூடாது. இது நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தற்போதுள்ள பிற சட்டங்களால் இந்திய தொல்லியல் துறையின் மீது சுமத்தப்பட்ட கடமையாகும் என காங்கிரஸ் கூறியுள்ளது. எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள கொள்கையை கண்டிப்பாகப் பின்பற்றுவது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடமையாகும். மேலும் மத அல்லது மதச்சார்பற்ற நினைவுச்சின்னத்தின் கட்டமைப்பையும் தன்மையையும் மாற்ற முயற்சிக்க வேண்டாம். மதுரா மற்றும் வாரணாசியில் உள்ள மசூதிகள் தொடர்பாக சில நீதித்துறை நடவடிக்கைகள்  நடைபெற்று வருவதைக் கருத்தில் கொண்டு இந்த   நடவடிக்கை அவசியமானது" என்றும் இந்திய வரலாற்று காங்கிரஸ்தெரிவித்துள்ளது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: