Thursday, January 11, 2024

சர்வதேச உர்தூ புத்தக் கண்காட்சி....!

உர்தூ பிரியர்களை வெகுவாக கவர்ந்த சர்வதேச உர்தூ புத்தக் கண்காட்சி....!

உர்தூ மொழியை நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் உர்தூ அகாடமி உள்ளிட்ட பல்வேறு உர்தூ அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில்,  சென்னையில் அண்மையில், நாடமாடும் உர்தூ நூலகம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதேபோன்று, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு, உர்தூ மொழியின் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

சர்வதேச உர்தூ புத்தக் கண்காட்சி:

இந்நிலையில், உர்தூ மொழி மேம்பாட்டுக்கான தேசிய கவுன்சில் மற்றும் அஞ்சுமன்-இ-இஸ்லாம் இணைந்து புதுடெல்லியில் ஜனவரி மாதத்தில் 9 நாள் சர்வதேச உர்தூ புத்தகக் கண்காட்யை நடத்தின.  இந்த கண்காட்சியில் அமைக்கப்பட்ட ஏராளமான அரங்குகளில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இடம்பெற்று இருந்தன. கண்காட்சியில் 3 கலாச்சார நிகழ்ச்சிகள், உர்தூ மற்றும் தகவல் தொழில்நுட்பம், உர்தூ இயக்கங்கள், உர்தூ கவியரங்குகள் (முஷைரா) என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டதால், கண்காட்சிக்கு வந்த மக்கள் மத்தியில் உர்தூ மொழியின் மேன்மை, இனிமை, முக்கியத்துவம் ஆகியவை குறித்து மிக எளிதாக விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்பு உருவாக்கப்பட்டது. உர்தூ கவியரங்க நிகழ்ச்சிகளில் உள்ளூர் கவிஞர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்த கவிஞர்கள் கலந்துகொண்டு, தங்களது கவித்துவமான கவிதைகளை வாசித்து கண்காட்சிக்கு வந்த வாசகர்கள் மற்றும் மக்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தனர். 

பல்வேறு தலைப்புகளில் நூல்கள்:

இந்த உர்தூ புத்தகக் கண்காட்சியில், பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள், பள்ளிப் பொருட்கள், அரசு கல்வி தேர்வுத்துறை நிறுவனங்களின் மாதிரி தேர்வு தாள் புத்தகங்கள், இஸ்லாமிய சிந்தனைகள்  மற்றும் உர்தூ மொழியை எளிமையாக கற்றல் தொடர்பான ஆயிரக்கணக்கான புத்தகங்கள் குவிந்து இருந்தன. இந்த புத்தகங்களை வாசகர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். கண்காட்சிக்கு நாட்டின் அனைத்து தரப்பு மாநிலங்களில் இருந்தும் ஆண்கள், பெண்கள் என ஏராளமான உர்தூ ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். கண்காட்சியின் சிறப்பு அம்சமாக உர்தூ நடமாடும் நூலகமும் இடம்பெற்றதால், அரிய வகையான புத்தகங்களை கண்காட்சியிலேயே வசிக்கக்கூடிய வாய்ப்பும் மக்களுக்கு கிடைத்தது. 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வம்:

உர்தூ மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கண்காட்சிக்கு வந்தது மட்டுமல்லாமல், டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் கண்காட்சிக்கு வந்து, உர்தூ மொழியின் மீது தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். கண்காட்சிக்கு வெறும் பார்வையாளர்களாக மட்டும் வராமல், தாங்கள் சேமித்து வைத்திருந்த சேமிப்பு பணத்தின் மூலம் அரிய வகை உர்தூ நூல்களை அவர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றார்கள். 

கண்காட்சியில், மில்லத் உர்தூ மேல்நிலைப் பள்ளி, ஐடியல் மேல்நிலைப் பள்ளி, மௌலானா சவுகத் அலி பள்ளி, அஞ்சுமான் இஸ்லாம் சோயப் சத்தார், ஜான் முஹம்மது காசிம் பள்ளி, அஞ்சுமான் கைருல் இஸ்லாம், பைக்கால் கலீஃபா ஹவுஸ் பள்ளி மற்றும் இமாம் பாரா பி.எட் கல்லூரி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பிற பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு, கல்வி விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். மேலும் உர்தூ மொழியின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் மக்கள் மத்தியில் சிறப்பான முறையில் எடுத்துக் கூறினார்கள். 

உர்தூ கலாச்சார அரங்கம்:


கண்காட்சியில் புத்தக அரங்குகளில் கூட்டம் அலைமோதியது போன்றே, அங்கு இருந்த கலாச்சார அரங்கிலும் அதிகமான கூட்டம் இருந்தது. கையெழுத்து கலை, எழுத்துக்கலை, கிராப்பிக்ஸ் நிபுணத்துவம், இஸ்லாமிய துக்ரா எழுத்துக்கள், ஆகியவை தொடர்பான அரிய தகவல்கள் இந்த கலாச்சார அரங்கில் மக்களுக்கு கிடைத்தால், அவர்கள் மிகவும் வியப்பும், ஆச்சரியமும் அடைந்தது மட்டுமல்லாமல், இதன்மூலம் உர்தூ மொழி குறித்த விரிவான அரிய தகவல்களை பெற வாய்ப்பு கிடைத்தாக மகிழ்ச்சி தெரிவித்தனர். 

சர்வதேச உர்தூ புத்தகக் கண்காட்சி நடைபெறுவதை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்து தாங்கள் குடும்பத்துடன் டெல்லிக்கு வந்ததாக கூறிய, குஜராத் மாநிலம் நவ்சாரி நவீன் நகரை சேர்ந்த மாணவர் ஹஸ்னைன் ராசா, கண்காட்சிக்கு வந்தது மகிழ்ச்சி அளித்தாகவும் தங்களுக்கு தேவையான உர்தூ நூல்களை வாங்கியதாகவும் தெரிவித்தார். 

பெண்கள் ஆர்வம்:


இந்த கண்காட்சிக்கு வந்த நூற்றுக்கணக்கான பெண்கள், தாங்கள் உர்தூ மொழியில் ஓரளவுக்கு பரிச்சயம் உள்ளவர்கள் என்பதால், உர்தூ மொழியை எப்படி எழுதுவது, படிப்பது, பேசுவது போன்ற தகவல்களை தரும் உர்தூ நூல்களை வாங்கிச் சென்றனர்.  மேலும், அடிப்படையான உர்தூ எழுத்தை கற்றுக்கொள்ளும் புத்தகம் ஆகியவையும் கண்காட்சியில் அதிகளவு விற்பனையாகின. இளைஞர்கள், மாணவ மாணவியர் மட்டுமல்லாமல், வயதான முதியவர்களும், கண்காட்சிக்கு வந்து உர்தூ வார்த்தைகள் மற்றும் சொற்றோடர்கள் குறித்த புத்தகங்களை தேடி வாங்கிச் சென்றனர். 

உர்தூ மற்றும் பொது அமைப்பு இணைந்து 'உர்தூ இலக்கிய இயக்கங்களும் மும்பையும்' என்ற தலைப்பில் கலாச்சார நிகழ்ச்சி நடத்தியது. இதில் பங்கேற்ற அறிஞர்கள், "உர்தூ மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் தனித்துவம் உண்டு" என்று பெருமிதம் தெரிவித்தனர். இந்த கலாச்சார நிகழ்ச்சியை கண்டு ரசித்த பொதுமக்கள் மற்றும் நூல் பிரியர்கள், உர்தூ மொழியின் இனிமை தங்களை கண்காட்சிக்கு இழுத்து கொண்டு வந்து விட்டதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். இதுபோன்ற உர்தூ நிகழ்ச்சிகள் நாட்டின் எந்த பகுதிகளில் நடந்தாலும் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை தங்களுக்கு பிறந்து இருப்பதாக பெரும்பாலானோர் கூறினர். மேலும், மிகவும் இனிமையான மற்றும் இதயத்தை தூண்டும் உர்தூ மொழியை இனி தொடர்ந்து ரசிக்க இருப்பதாக கண்காட்சிக்கு வந்துசென்ற மக்கள் கருத்து தெரிவித்தது உர்தூ ஆர்வலர்களை பெரிதும் மகிழ்ச்சி அடையச் செய்தது என்றே கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: