Friday, April 5, 2024

லஞ்ச ஊழல் வழக்குகள் நிறுத்திவைப்பு...!

 பா.ஜ.க.வில் சேர்ந்தவுடன், லஞ்ச ஊழல் வழக்கில் தொடர்புடைய 

23 எதிர்க்கட்சித் தலைவர்களின் வழக்குகள் நிறுத்திவைப்பு...!

"ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்"

"இந்தியாவில் யாரையும் ஊழல் செய்ய விட மாட்டேன். அப்படி ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" இப்படி கூறி, கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி, செயல்பட்டு வருகிறார். சரி, ஊழல் விவகாரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு சரியான முறையில் தனது பணிகளை செய்ததா? அல்லது பிரதமர் நரேந்திர மோடி, நடவடிக்கை எடுத்தாரா? என்ற கேள்வி எழுப்பினால், ஆம், அவர் நடவடிக்கை எடுத்தது உண்மை தான். அந்த நடவடிக்கையெல்லாம் எதிர்க்கட்சிகளை சிதைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. 

பா.ஜ.க.விற்கு பெரும் சவாலாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை தன்னுடைய வழிக்கு கொண்டு வரும் நோக்கில், அல்லது அவர்களை மிரட்டும் நோக்கி ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து, பின்னர், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், அவர்களின் 23 எதிர்க்கட்சித் தலைவர்களின் வழக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதும், "தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்" ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டி பிரதமர் மோடியின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. 

வழக்குகள் நிறுத்திவைப்பு:

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை சந்தித்துக் கொண்டிருந்த 25 எதிர்க்கட்சித் தலைவர், பா.ஜ.க.வில் ஐக்கியமானதும், அவர்களின் 23 பேருக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. 20 வழக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 

2024ஆம் ஆண்டு முதல் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஒன்றிய அரசின் முகமைகளின் விசாரணைகளைச் சந்தித்துக் கொண்டிருந்த 25 முக்கிய அரசியல்வாதிகள், பா.ஜ.க.விற்கு தாவினர். காங்கிரஸ் கட்சியில் இருந்து 10 பேர், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனையில் இருந்து தலா 4 பேர், திரிணாமுல் காங்கிரசில் இருந்து 3 பேர்,  தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து இரண்டு பேர், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி,.பி.யில் இருந்து தலா ஒருவர்  என மொத்தம் 25 பேர் கட்சித் தாவல் செய்தவுடன், அவர்களுக்கான தண்டனை ஒத்திவைப்பாக மாறியுள்ளது என "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

ஊழல் வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள், பா.ஜ.க.வில் இணைந்தால், அவர்கள் சட்ட விளைவுகளை, சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டியதில்லை என்ற நிலை தற்போது பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. 

வழக்கு ஒத்திவைக்கப்பட்ட தலைவர்கள்:

மத்திய புலனாய்வுத்துறை அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, அவர்கள் சேரும் கட்சியின் அடிப்படையில் செயல்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித்பவார் மீது நடவடிக்கையை கூறலாம். இதேபோன்று பிரஃபுல் படேல், பிரதாப் சர்நாயக், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹசன் முஷ்ரிப், பாவனா கவாலி, யாமினி மற்றும் யஷ்வந்த ஜாதவ், சி.எம்.ரமேஷ், ரனிந்தர் சிங், சஞ்சய் சேத், சுவேந்து அதிகாரி, கே.கீதா, சோவன் சாட்டர்ஜி, சாகன் புஜ்பால், கிருபாசங்கர் சிங், திகம்பர் காமத், அசோக் சவான், நவீன் ஜிண்டால், தபஸ் ராய், அச்சனா பாட்டீல், கீதா கோடா, பாபா சித்திக், ஜோதி மிர்தா, சுஜானா சவுத்ரி, ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்தவுடன் அவர்கள் மீது வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சிலர் வழக்குகளில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். 

பா.ஜ.க.வின் மோசடி அரசியல்:

ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய செயல்பாடுகள் மூலம் அந்த கட்சி ஊழல் விவகாரத்தில் எப்படி செயல்படுகிறது என்பது தற்போது நாட்டு மக்கள் நன்கு தெரியவந்துள்ளது. தங்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு சவாலாக உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டும் வகையிலும் அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையிலும் பா.ஜ.க. மோசடி அரசியல் செய்து வருவதை, நாம் மேலே குறிப்பிட்ட தகவல்கள் மூலம் நன்கு ஊர்ஜிதம் ஆகிறது. 

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஊழலில் ஈடுபடுபவர்கள் தப்பிக்க முடியாது என கூறி வருகிறார். ஆனால், ஊழல் வழக்குகளில் தொடர்புடைய 23 எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு அவர் விளக்கம் அளிக்க விரும்பவில்லை. அல்லது அதுகுறித்து எதையும் பேச மறுக்கிறார்.

இதன்மூலம், ஊழல் ஒழிப்பில் பா.ஜ.க.விற்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதும், ஊழல் விவகாரத்தை தன்னுடைய அரசியல் மோசடிக்கு பயன்படுத்துவதையை அக்கட்சி விரும்புகிறது என்பதும் தெள்ளித் தெளிவாக தெரியவந்துள்ளது. ஊழல் செய்துவிட்டு, பா.ஜ.க.வில் இணைந்துவிட்டால், அனைவரும் புனிதராக மாறிவிடலாம் என்பது தான் பா.ஜ.க.வின் கொள்கை சிந்தாந்தமாக இருந்து வருகிறது. அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: