Thursday, April 4, 2024

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை....!

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள், தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.விற்கு நன்கொடை வழங்கிய வினோதம்...!

ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி, தேர்தல் பத்திரங்கள் முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம்  ஒப்படைக்க எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

அந்த உத்தரவின் அடிப்படையில், தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தனது அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதனை அடுத்து, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்கள் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து அலசி ஆராயப்பட்டு வருகிறது. நன்கொடை அளித்த நிறுவனங்களுக்கும், நன்கொடை வாங்கிய கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன என்பது குறித்த தகவல்கள் ஆங்காங்கே வெளிவந்தவண்ணம் உள்ளன.

மெகா ஊழல்:

இந்தத் தரவுகளின்படி, தேர்தல் பத்திரங்களின் மூலம், கடந்த ஏப்ரல் 12, 2019 முதல், பிப்ரவரி 15, 2024 வரை பா.ஜ.க. 6 ஆயிரத்து 986  கோடி ரூபாயைப் பெற்று, முன்னிலை வகிக்கிறது. தேர்தல் பத்திரங்கள் சர்ச்சைக் குறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி,  'இது, இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழல்' என்று தெரிவித்துள்ளார். மேலும் "ஊழல் தொழிலதிபர்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள தொடர்பை இந்த சர்ச்சை தெளிவாகக் காட்டுகிறது" என்றும் அவர் கூறியுள்ளார். தரவுப் பட்டியலில் நன்கொடை அளித்த நிறுவனங்களின் பெயர்களை பார்த்தால், பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது அம்பலமாகி வருகின்றன. 

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் நன்கொடை:

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள தரவுகளின்படி 45 நிறுவனங்கள்  குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிட்டிருக்கிறது. இதில், 33 நிறுவனங்கள், கடந்த 7 ஆண்டுகளாக பூஜ்ஜிய லாபம் பெறாத நிறுவனங்கள் என தெரியவந்துள்ளது. இந்த  33 நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தமாக 576 கோடி ரூபாயை வழங்கியுள்ளன.  இதில் 75 சதவீதம், அதாவது 434 கோடி ரூபாய் பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

33 நிறுவனங்களின் மொத்த நஷ்ட தொகை ரூபாய் 1 லட்சம் கோடிக்கு மேலாக இருக்கிற நிலையில் இந்த நிறுவனங்கள் நன்கொடை தொகையை எங்கிருந்து வழங்கியது? எப்படி பெற்றது? யார் வழங்கினார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த 33 நிறுவனங்களில் 16 நிறுவனங்கள்  ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்தவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.

குறிப்பிட்ட 6 நிறுவனங்கள் வழங்கிய 646 கோடி ரூபாயில் 93 சதவீதம், அதாவது 601 கோடி ரூபாயை பா.ஜ.க. நன்கொடையாக பெற்றிருக்கிறது. இத்தகைய நிறுவனங்கள் 3 புள்ளி 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 179 மிகப்பெரிய அரசு ஒப்பந்தங்களை, நன்கொடை வழங்கிய பிறகு பெற்றுள்ளன. அதேபோல, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளின் விசாரணைகளை எதிர்கொண்டு வரும் 56 கார்ப்பரேட் நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு  2 ஆயிரத்து 592 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளன. இதில் சோதனைகளுக்கு பிறகு ஆயிரத்து 853 கோடி ரூபாய் பா.ஜ.க.வுக்கு தரப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட அதிர்ச்சியாக 16 ஷெல் நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு 419 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளன.

சந்தேகத்திற்குரிய நிதி:

மேலும், தனியார் தொலைக்காட்சியின் குழு ஒன்று நடத்திய ஆய்வில், ஏப்ரல் 12, 2019, ஜனவரி 24, 2024க்கு இடையிலான காலக்கட்டத்தில், சந்தேகத்திற்குரிய நிதி ஆதாரங்களைக் கொண்டிருந்த, லாபம் இல்லாத 45 நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆயிரத்து 432 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதில் ஏறத்தாழ 75 சதவீதம், அதாவது ஆயிரத்து 86 கோடி ரூபாய் பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த 45 நிறுவனங்களில் 33 நிறுவனங்கள் எதிர்மறையான அல்லது பூஜ்ஜிய லாபத்தைக் கொண்டிருந்ததன. தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்த 33 நிறுவனங்கள் வழங்கிய 576 கோடி ரூபாயில், 434 கோடி ரூபாயை பா.ஜ.க. பணமாக்கியுள்ளது. 2016–2023ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலக்கட்டத்தில் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் சுமார் 1 லட்சம் கோடி என கணிக்கப்பட்டுள்ளது.

நஷ்டம் ஏற்பட்டபோதும், மிகப்பெரிய தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள் வழங்கியுள்ளதால், அவை மிகப்பெரிய அளவுக்கு வரி ஏய்ப்பு, மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளப்புவதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு:

தேர்தல் பத்திர நன்கொடை மூலமாக 6 ஆயிரத்து 986 கோடி ரூபாயை, அதாவது மற்ற அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையை விட 5 மடங்கு அதிகமாக பா.ஜ.க. பெற்றுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய ஆட்சி, மக்களவை தேர்தலுக்கு பிறகு அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், தேர்தல் பத்திர நன்கொடை உள்ளிட்ட அனைத்து பா.ஜ.க.வின் ஊழல்களையும் உச்சநீதிமன்ற கண்காணிப்போடு சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன. இது, பா.ஜ.க. தலைவர்களுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது. எனினும், தற்போது நாட்டு மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பா.ஜ.க.வின் முயற்சிகள் மிகப்பெரிய அளவுக்கு பலன் அளிக்காது என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



No comments: