Saturday, April 6, 2024

மக்கள் மத்தியில் மாற்றம்...!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்குப் பிறகு,  மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்...!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில், தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தயாரித்த இந்த அறிக்கையில், மக்கள் நலன் சார்ந்த ஏராளமான முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

நாட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டு மக்கள் எதை விரும்பினார்களோ, அதை தாங்கள் அறிக்கையில் இடம்பெறச் செய்து இருப்பதாகவும், இந்த வாக்குறுதிகள் அனைத்தும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய அம்சங்கள்:

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களில், சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும். நீட் போன்ற   தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம். குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்  வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும். 2025ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.  12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.டி. எஸ்.சி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். எஸ்.டி. எஸ்.சி. மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது. தேர்தல் பத்திரம் முறைகேடு தொடர்பாக விசாரணை செய்யப்படும். குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான எம்எஸ் சுவாமிநாதனின் பரிந்துரை அமல்படுத்தப்படும்.

பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும். பா.ஜ.க.வில் சேர்ந்து குற்ற வழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள். மக்களின் உணவு, உடை, காதல் திருமணம் மற்றும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயணம் செய்து வசிப்பது போன்ற தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடமாட்டோம். மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நியாயமற்ற முறையில் தலையிடும் அனைத்து சட்டங்களும் விதிகளும் ரத்து செய்யப்படும். ரயில்களில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை மீண்டும் கொண்டுவரப்படும். கட்சி தாவினால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும். நூறுநாள் வேலைத்திட்ட ஊதியம் 400 ரூபாயாக அதிகரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி, கால்நடை கல்லூரி, மருத்துவ கல்லூரி அமைக்கப்படும். வெறுப்பு பேச்சு, மதமோதல்கள், வெறுப்பு குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை. இப்படி ஏராளமான முக்கிய அம்சங்கள், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

தலைவர்கள் வரவேற்பு:

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றுள்ளனர். தி.மு.க. வலியுறுத்திய அனைத்து அம்சங்களும், வாக்குறுதிகளாக  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் உடனான கூட்டணி, தேர்தல் கூட்டணி இல்லை என்றும் கொள்கை கூட்டணி என்றும் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

இதேபோன்று, வரவேற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், புரட்சிகரமான திட்டங்களை, வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்து இருப்பதாகவும், மாநில  உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய அறிக்கையாகவும் அது இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வரவேற்று கருத்துகளை வெளியிட்டுள்ளனர். 

மக்கள் மத்தியில் மாற்றம்:

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டப் பிறகு, நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருப்பதை சமூக ஊடகங்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பெண்கள், விளிம்பு நிலையில் உள்ள மக்கள் காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் மூலம் தங்களுடைய வாழ்க்கையில்  ஒளி பிறக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

கடந்த பத்து ஆண்டு கால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில், வெறும் வெற்று முழக்கங்களை மட்டுமே, கண்டு வந்த நாட்டு மக்கள், தற்போது, காங்கிரஸ் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும், நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இருக்கிறது என்பதை உணர தொடங்கியுள்ளார்கள். 

பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் உண்மை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டதால், நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற விரும்பவில்லை. நாடு அமைதியான திசையை நோக்கிச் சென்று, உண்மையான, வேகமான வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் அடைய வேண்டும். அதற்கு தற்போது மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பது இந்தியா கூட்டணி மட்டுமே என்று உறுதியாக கூறலாம். 

ஆட்சி மாற்றம் உறுதி:

ரயில்களில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை மீண்டும் கொண்டுவரப்படும்.  நீட் போன்ற   தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம். மக்களின் உணவு, உடை, திருமணம் போன்ற தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடமாட்டோம்., மாணவர்களுக்கான கல்விக் கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களை மட்டுமல்லலாமல், அனைத்துத் தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து இருக்கின்றன. 

எனவே, நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராக விட்டார்கள் என்பதை, அவர்களின் சொல்லும், செயலும் எடுத்துக்காட்டி வருகின்றன. இதன்மூலம், ஒன்றியத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேக் கூடாது என்பதில் மக்கள் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பது தெரிய வருகிறது.  

தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்படி நாட்டு மக்களின் நலன் சார்ந்த அறிக்கையாக இருக்கிறதோ, அதேபோன்று, காங்கிரஸ் அறிக்கையும் இருப்பதால், தமிழகத்தின் நலன்கள் காக்கப்படும் என தமிழக மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  இந்த நம்பிக்கை காற்று தற்போது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மெல்ல மெல்ல வீசத் தொடங்கியுள்ளது. இந்த நம்பிக்கை காற்று வரும் நாட்களில், மிகப்பெரிய அளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி, அரசியல் களத்தை திசை  திருப்பச் செய்து, நாடாளுமன்றத் தேர்தலின் மூலம், ஒரு விரல் புரட்சியை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் ஒரே தீர்வு,  ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நல்லாட்சி அமைய வேண்டும்.  அந்த இலக்கை நோக்கித்தான் தற்போது தேசிய அரசியல் களம் சென்றுக் கொண்டிருக்கிறது என உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: