Tuesday, September 30, 2025

என்ன செய்ய போகிறார்கள் தமிழக முஸ்லிம்கள் ?

 "நெருக்கிவிட்ட தேர்தல் நேரம்"

- என்ன செய்ய போகிறார்கள் தமிழக முஸ்லிம்கள் ? - 

- ஜாவீத் -

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு, அதாவது 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக அணிகள் முழு வீச்சில் மாநிலம் முழுவதும் தங்களது பிரச்சாரங்களை செய்யத் தொடங்கியுள்ளார்கள்.  மக்களை கவர பல்வேறு நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளார்கள். 

இத்தகைய சூழ்நிலையில், தமிழக முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்களின் தேர்தல் பொறுப்புகள் என்ன? தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எப்படி ஒற்றுமையாக செயல்பட்டு, தமிழகத்தில் அமைதி எப்போதும் நிலவ செயல்பட வேண்டும்? என்பன போன்ற பல கேள்விகள் எழுந்துக் கொண்டே இருக்கின்றன. தமிழக அரசியல் வரலாற்றில் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் மிக முக்கியமான தேர்தலாகும். தமிழகத்தில் எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பாஜக பல்வேறு அரசியல் காரியங்களை செய்து வருகிறது.  சிறுபான்மையின மக்களின் வாக்குகள் சிதறிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் களத்தில் காரியங்கள் ஆற்றப்பட்டு வருகின்றன. இந்த செயல்பாடுகளை சாதாரண, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் அறிந்து இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பினால், நிச்சயம் இல்லை என்றே கூறலாம். அதற்கு காரணம் அவர்களிடம் அரசியல் தெளிவு இன்னும் பிறக்கவில்லை. ஒற்றுமை என்ற ஒரே குடையின் கீழ் முஸ்லிம்கள் வரவில்லை. இன்னும் பிரிந்து நின்றுக் கொண்டு இருக்கிறார்கள். 

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுரை :

தமிழக முஸ்லிம்களின் நிலைமை இப்படி இருக்க, கடந்த மாதம் சென்னையில் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 1500வது பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழா மேடையில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் அமர்ந்து இருந்தார்கள். அரங்கம் முழுவதும் நிறைந்து இருந்தது. பல்வேறு அமைப்புகளின் முஸ்லிம் பிரதிநிதிகள் அரங்கத்தை அலங்கரித்து அமர்ந்து இருந்தார்கள்.  இந்த விழாவில் பேசிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தார்கள். 

இறுதியில் நிறைவுரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது உரையின் ஆரம்பத்திலேயே ஓர் அறிவுரையை முஸ்லிம் சமுதாயம் முன், அதாவது முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களின் முன் வைத்தார். அது அறிவுரை என்பதைவிட வேண்டுகோள் என்றே கூறலாம். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் அமர்ந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து அதற்கு தீர்வு காணும் முதலமைச்சர், முஸ்லிம் சமுதாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைகளுக்கும் நல்ல தீர்வு கண்டு வருகிறார். புதிய வக்பு சட்டம், வக்பு வாரியம் தொடர்பான பிரச்சிகள் என பல்வேறு பிரச்சினைகளுக்கு முஸ்லிம் சமுதாயம் திருப்தி அடையும் வகையில் அவரது பணிகள் இருந்து வருகின்றன. 

எனினும் முஸ்லிம் தலைவர்கள் அல்லது சமுதாயம் இன்னும் பிரிந்து பல்வேறு கூறுகளாக சிதறிக் கிடப்பதை பார்த்து முதலமைச்சருக்கு உண்மையில் மன வருத்தம் இருந்து வருகிறது. அதன் காரணமாக தான் மேடையில் அமர்ந்து இருந்த பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்த அவர், "இந்த மேடையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் ஒற்றுமையாக அமர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மேடையில் மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும், எப்போதும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்படி ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, சிறப்பான பணிகளை ஆற்ற முடியும். வெற்றியை குவிக்க முடியும்" என்று தனது ஆசையை, விருப்பத்தை வெளிப்படுத்தினார். 

உண்மை நிலை என்ன ?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் மூலம் முஸ்லிம் சமுதாயம் இன்னும் ஒற்றுமையாக இல்லை என்பது உறுதியாக தெரியவருகிறது. தமிழகத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் நேரத்தில் மட்டும் இந்த அமைப்புகள் வெளியே தலைக்காட்டி, சமுதாய மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பதை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், முஸ்லிம்களின் வாக்குகள் சிதறி போக வாய்ப்புகள் அதிகம் உண்டு.  இவற்றை கடந்த கால தேர்தல்களின் மூலம் நாம் கண்டு இருக்கிறோம். முஸ்லிம் வாக்குகள் சிதறி போன காரணத்தால், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வாணியம்பாடி போன்ற தொகுதிகளில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தோல்விஅடைந்தார்கள். 

அரசியல் களத்தில் மட்டுமல்லாமல், பொது தளத்திலும் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இல்லை என்றே கூறலாம். எந்தவொரு பிரச்சினையிலும் அவர்கள் ஒற்றுமையாக செயல்பட மறுக்கிறார்கள். ஒற்றுமையாக செயல்பட்டு காரியங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம், விருப்பம் முஸ்லிம் சமுதாயம் மத்தியில் இல்லை என்றே கூறலாம். இதன் காரணமாக அவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். 

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, முஸ்லிம் சமுதாயம் மீது மிகுந்த அக்கறையுடன் செயல்படும் அரசாக இருந்து வருகிறது. முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் சென்று படிக்க ஆண்டு 36 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல திட்டங்களை திராவிட மாடல் திமுக அரசு நிறைவேற்றி, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகளில் முஸ்லிம்களும் உண்டு. அண்மையில் சென்னையில் நடந்த கல்வியில் திறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கூட, முஸ்லிம் மாணவ மாணவியர்கள், தங்களுடைய சாதனைகளை எடுத்துகூறியதை காண முடிந்தது.  நிலைமை இப்படி இருக்க, முஸ்லிம்கள் இன்னும் ஒற்றுமையாக செயல்படாமல் இருப்பது நியாயமா என்ற முதலமைச்சரின் ஆதங்கம் சரியானது ஒன்று என்றே கூறலாம். 

முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் ?

தமிழக முஸ்லிம்கள் தங்களிடம் உள்ள கருத்துவேறுபாடுகளை மறந்துவிட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம் சமுதாயத்திற்கு திராவிட மாடல் அரசு என்னென்ன நன்மைகளை செய்து இருக்கிறது? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அப்படி ஆய்வுசெய்யும்போது, மற்ற கட்சிகளை விட முஸ்லிம்களின் நலனில் உண்மையாக அக்கறை கொண்ட கட்சியாக திமுக இருப்பதை நிச்சயம் அறிந்துகொள்ள முடியும். எந்தவொரு பிரச்சினைக்கு முன்நின்று தீர்வு காணும் கட்சியாக திமுகவும், திமுக அரசும் இருப்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ள முடியும்.

எனவே முஸ்லிம்கள் இனி பிரிந்து கிடக்காமல், ஒற்றுமையாக செயல்பட வேண்டும். வடநாட்டில் உள்ள நிலைமையை போன்ற ஒரு நிலைமையை தமிழகத்தில் கொண்டு வர அண்மைக் காலமாக தொடர்ந்து காட்சிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களின் வாக்குகளை பறித்துகொண்டு, அல்லது பிரித்துவிட சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, தமிழக முஸ்லிம்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை அணுக வேண்டும். சமுதாயம் அமைதியாக, நிம்மதியாக வாழ வேண்டுமானால், முஸ்லிம் தலைவர்கள் தங்களுடைய கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டே தீர வேண்டும். இனி பிரிந்து கிடக்கும் நேரமில்லை என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். 

கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்த அம்மாநில முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, சட்டப்பேரவைத் தேர்தலில் செயல்பட்டார்களோ, எதிர்கொண்டார்களோ அதேபோன்று, தமிழக முஸ்லிம்களும் செயல்பட வேண்டும். தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் ஒரு வாக்கு கூட சிதறி போய் விடக் கூடாது. வரும் தேர்தல் மிகவும் நெருக்கடியாக காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். எனவே தமிழக முஸ்லிம்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட்டு, தங்களுடைய காரியங்களை ஆற்ற வேண்டும். 

தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கிறதே என்று எண்ணிவிட்டு, ஓய்வாக வீட்டில் அமர்ந்துகொண்டு இருக்கும் நேரம் இதுவல்ல என்பதை தமிழக முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இன்னும் 6 மாத காலத்திற்கு ஓய்வே இல்லை என்ற மனநிலை முஸ்லிம்கள் மத்தியில் பிறக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தால் நமக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது என்ற நினைப்பு முஸ்லிம்கள் மத்தியில் இருக்கவே கூடாது. தேர்தல் பணி என்பது அரசியல் பணி என்ற எண்ணம் முஸ்லிம்களிடம் இருப்பது வேதனை அளிக்கிறது. அதன் காரணமாகதான் பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். அரசியலும் வாழ்க்கையின் ஒரு பங்கு என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

தமிழகத்தை பொறுத்தவரை, முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு ஆதரவான அரசு தமிழகத்தில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு நல்ல ஆட்சியை வீழ்த்த தான் சதி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சதி வலையில் முஸ்லிம்கள் சிக்கிவிடக் கூடாது. முஸ்லிம்களின் நண்பனாக இருக்கும் திமுகவிற்கு முஸ்லிம் சமுதாயம் ஆதரவு கொடுக்க வேண்டும். முஸ்லிம்கள் தங்களது வாக்குகள் அனைத்தும் 100 சதவீதம் அளவுக்கு திமுக அணிக்கு வழங்க பணிகளை ஆற்ற வேண்டும். இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் இந்தமுறை நிச்சயம் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும். 

திமுக அணி சார்பாக நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றிவாகை சூட வேண்டும். அதற்கு ஒரே வழி ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமை என்று கூற முடியும். எனவே தேர்தலுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்ற நினைப்பில் இருக்காமல், சமுதாய நலனுக்காகவும், தமிழகத்தின் அமைதிக்காவும், முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில் ஒரு நல்லாட்சி மீண்டும் தொடர முழுவீச்சில் செயல்பட வேண்டும். இது ஓய்வுபெறும் நேரமே இல்லை. இப்போதே பணிகளை தொடங்கினால் மட்டுமே, இலட்சியத்தை எட்ட முடியும் என்பதை மனதில் உள்வாங்கிக் கொண்டு, முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையாக செயல்பட்டு, வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பணிகளை ஆற்ற வேண்டும். அதன்மூலம் மட்டுமே, சமுதாயம் அமைதியாக வாழ முடியும் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். 

=======================================

யோசனை....!

 இது எப்படி இருக்கு....?



சும்மா....!

 சும்மா பாருங்க....!



எப்படி....?

 வேகம்....!



ஆனந்தம்....!

 என்னுடைய மூத்த சகோதரர் முத்தவல்லி இப்ராஹிம் சாயிப் அவர்களின் மூத்த மகன் அப்துல் இலாஹியின் திருமணம் 28.9.25 மற்றும் வலிமாவில் 29.9.25 கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ச்சி அடைந்த இனிய தருணம்..



மகிழ்ச்சி....!

 என்னுடைய மூத்த சகோதரர் முத்தவல்லி இப்ராஹிம் சாயிப் அவர்களின் மூத்த மகன் அப்துல் இலாஹியின் திருமணம் 28.09.2025  மற்றும் வலிமாவில் 29.09.2025  கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ச்சி அடைந்த இனிய தருணம்.

வேதனை....!

 காஸா வேதனை...!

A barefoot girl walks through the rubble, collecting firewood  for her family, as daily Israeli bombardment leave neighborhoods in ruins and basic supplies scarce.



தகவல்....!

 BREAKING: 


Netyanahu AGREES to the Trump-Gaza peace plan, Trump announced:

" - I want to thank Netanyahu for agreeing to Gaza plan.

- Arab and Islamic countries will be responsible for dealing with Hamas movement.

- If accepted by Hamas, the proposal calls for immediate release of all hostages.

- Hamas is the only party left to agree to the peace deal. If they reject it, Netanyahu has my full support.

- Gaza deal board of peace will include Tony Blair, several others will be named over the next few days.

- Netanyahu strongly opposes the establishment of a Palestinian state and I understand that.

- Netanyahu is a warrior. He doesn’t know about getting back to normal life. Israel is lucky to have him.

- Several countries foolishly recognized the Palestinian State, some of our European friends."

- After a few days, the bullets must be silent in Gaza.

- The Israelis were generous in giving up the Gaza Strip in 2005.

- World leaders begged me not to recognize Jerusalem as the capital of Israel, yet I recognized it.

- Who knows maybe even Iran can get into the Abraham Accords, we hope we can get along with Iran, I think they will be open to it.. they can be a member.

- I withdrew from the terrible Iranian nuclear deal imposed by Obama and Biden on Israel.

- We destroyed Iran's ability to enrich uranium.

- No American President was better for Israel than me."

வலியுறுத்தல்....!

 நடிகர் விஜய் கரூர் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு  தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி...!



விளக்கம்...!

கூட்ட நெரிசலில் 41 பேர் பலி...!

நடிகர் விஜய் விளக்கம்...!


20 அம்ச அமைதித் திட்டம் பலன் தருமா?

 

காசாவில் போரை நிறுத்த 20 அம்ச அமைதித் திட்டம்....!

உண்மையில் பலன் தருமா?

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

பாலஸ்தீன மக்களின் சொந்த பூமியான காசாவில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்களில் பலர், பாலஸ்தீனத்தை தாங்கள் அங்கீகரிப்பதாக உறுதிப்பட அறிவித்தனர். காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அதற்காக விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பல தலைவர்கள் வலியுறுத்தினர். ஒருபடி மேலாக கொலம்பிய நாட்டு அதிபர் பெட்ரோ, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களுடன் கலந்துகொண்டு, இஸ்ரேலிலின் கொடூர செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அதற்காக சர்வதேசப் படையை உடனே காசாவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். கொலம்பிய அதிபரின் இந்த பேச்சு உலகம் முழுவதும் பெரும் அளவுக்கு வரவேற்பை பெற்றது. மலேசியாவும் இதேபோன்று கருத்தை தெரிவித்தது.

பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அவமானம் :

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றியபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏறக்குறைய அனைத்து நாடுகளும், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. கொலம்பிய நாட்டு பிரதிநிதிகள், இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு, அவையில் இருந்து வெளியேறியது உலக பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதன் காரணமாக வெற்று அரங்கத்திற்குள், பார்வையாளர்கள் யாரும் இல்லாத வகையில் இருந்த காலி இருக்கைகளைப் பார்த்துக் கொண்டு இஸ்ரேலிய பிரதமர் தனது உரை ஆற்ற வேண்டிய கட்டாய நெருக்கடி உருவானது. இதன்மூலம் இஸ்ரேலுக்கு எதிராக முழு உலகமும் தற்போது திரும்பி விட்டதை உணர்ந்துகொண்ட பெஞ்சமின் நெதன்யாகு,, தனது பேச்சின்போது பழைய கம்பீர தொனியில் பேச முடியவில்லை. சர்வதேச நீதிமன்றத்தால் போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பெஞ்சமின் நெதன்யாகுவை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், தங்கள் நாட்டிற்குள் அவர் நுழைந்தால், உடனே கைது செய்யப்படுவார் என்று பல நாடுகள் அறிவித்தால், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அவர் விமானம் மூலம், தனது வழக்கமான பயண திட்டத்தின்படி செல்ல முடியவில்லை. கைது பயம் காரணமாக சுற்றிவளைத்து நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய ஒரு நெருக்கடி இஸ்ரேலிய பிரதமருக்கு ஏற்பட்டது.

முன்பு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரித்து, காசா போருக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அறிவித்துவிட்டன. இதுவும் இஸ்ரேலுக்கு கிடைத்த ஒரு மரண அடி என்றே கூற வேண்டும். அத்துடன் பல நாடுகள், இஸ்ரேல் உடனான வணிக உறவுகளை துண்டித்துக் கொள்ள முன்வந்து அதை உறுதிப்பட அறிவித்துவிட்டன. இதனால், இஸ்ரேல் தற்போது பொருளாதார ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. இப்படி, பல்வேறு வகைகளில் இஸ்ரேல் மற்றும் அதன் ஒருசில நட்பு நாடுகள், குறிப்பாக அமெரிக்கா உலக மக்களின் பெரும் கோபத்திற்கு ஆளாகி மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு விட்டது. இஸ்ரேல் ஒரு சாத்தானின் நாடு என்று கூறும் வகையில் தற்போது உலகம் இஸ்ரேலை, ஒரு சாத்தானாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்பாவி மக்களை கொன்று குவித்த பெஞ்சமின்  நெதன்யாகு, சிறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய நபர் என்ற உண்மையை உலகம் தற்போது நன்றாக புரிந்துகொண்டு, காசா மக்கள் மீது தனது கருணை பார்வையை திருப்பி இருக்கிறது. இதன் காரணமாக, காசா போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நடவடிக்கைகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளன. 

20 அம்ச அமைதித் திட்டம் :

அந்த வகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 20 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் ரம்ப் முன்மொழிந்து. இந்த திட்டத்தை அவர் வரவேற்றுள்ளார். ஹாமாஸை நிராயுதபாணியாக்கக் கோரும் புதிய திட்டத்தை, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆட்சி செய்யும் பாலஸ்தீன ஆணையம் (PA) மற்றும் சில பிராந்திய அரபு நாடுகளும் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளன. ஹமாஸ் அமெரிக்க திட்டத்தை "நல்ல நம்பிக்கையுடன்" ஆய்வு செய்து வருவதாகக் கூறுகிறது. அதேநேரத்தில் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) குழு இந்த திட்டம் "பிராந்தியத்தை வெடிக்கச் செய்வதற்கான ஒரு செய்முறை" என்று கூறுகிறது.

காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேர்மையான மற்றும் அயராத முயற்சிகளை"வரவேற்பதாகவும், அமைதிக்கான பாதையைக் கண்டுபிடிக்கும் அமெரிக்க அதிபரின் திறனில் அதன் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகவும் பாலஸ்தீன ஆணையம் தெரிவித்துள்ளது. "காசாவிற்கு போதுமான மனிதாபிமான உதவிகளை வழங்குதல், பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை விடுவித்தல் ஆகியவற்றை உறுதி செய்யும் ஒரு விரிவான ஒப்பந்தத்தின் மூலம் காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா, பிராந்திய நாடுகள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அதன் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது மீண்டும் வலியுறுத்துகிறது" என்று பாலஸ்தீன வஃபா செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"பாலஸ்தீன மக்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளை நிறுவுதல், போர்நிறுத்தத்திற்கான மரியாதை மற்றும் இரு தரப்பினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்தல், பாலஸ்தீனியர்கள் நிலம் கையகப்படுத்தப்படுவதையும் இடம்பெயர்வதையும் தடுப்பது, சர்வதேச சட்டத்தை மீறும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை நிறுத்துதல், பாலஸ்தீன வரி நிதிகளை விடுவித்தல், இஸ்ரேலியர்கள் முழுமையாக வெளியேறுவதற்கு வழிவகுத்தல் மற்றும் கிழக்கு ஜெருசலேம் உட்பட காசா பகுதி மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீன நிலம் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைத்தல்" என்றும் அது அழைப்பு விடுத்தது. “இது ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, இரு நாடுகள் தீர்வின் அடிப்படையில் ஒரு நியாயமான அமைதிக்கு வழி வகுக்கும், சர்வதேச சட்டத்தின்படி பாதுகாப்பு, அமைதி மற்றும் நல்ல அண்டை வீட்டாருடன் இஸ்ரேல் அரசுடன் இணைந்து வாழும் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசுடன்,” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பாலஸ்தீன் ஆயுதக் குழு எதிர்ப்பு :

ஹமாஸுடன் இணைந்து போராடும் பாலஸ்தீன ஆயுதக் குழுவான PIJ, அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டத்தை பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கான செய்முறை என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம், இஸ்ரேல் அமெரிக்கா வழியாக போரின் மூலம் சாதிக்க முடியாததைத் திணிக்க முயற்சிக்கிறது. “எனவே, அமெரிக்க-இஸ்ரேலிய பிரகடனத்தை பிராந்தியத்தைத் தூண்டுவதற்கான ஒரு சூத்திரமாக நாங்கள் கருதுகிறோம்,” என்று குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், எகிப்து, இந்தோனேசியா, ஜோர்டான், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் டிரம்பின் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேர்மையான முயற்சிகளை வரவேற்று, அமைதிக்கான பாதையைக் கண்டுபிடிக்கும் அவரது திறனில் தங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றனர்" என்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். இந்த வகையில், போரை முடிவுக்குக் கொண்டுவருதல், காசாவை மீண்டும் கட்டியெழுப்புதல், பாலஸ்தீன மக்களின் இடம்பெயர்வைத் தடுத்தல் மற்றும் விரிவான அமைதியை முன்னெடுப்பது தொடர்பான அதிபர் டிரம்பின் அறிவிப்பையும், மேற்குக் கரையை இணைப்பதை அனுமதிக்க மாட்டேன் என்ற அவரது அறிவிப்பையும் அமைச்சர்கள் வரவேற்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காசாவிற்கு போதுமான மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்குதல், பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வதைத் தடுக்குதல், பணயக்கைதிகளை விடுவித்தல், அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு பாதுகாப்பு பொறிமுறை, இஸ்ரேலியர்களை முழுமையாக வெளியேற்றுதல், காசாவை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் இரு நாடுகள் தீர்வின் அடிப்படையில் ஒரு நியாயமான அமைதிக்கான பாதையை உருவாக்குதல் ஆகியவற்றை உறுதி செய்யும் ஒரு விரிவான ஒப்பந்தத்தின் மூலம் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற நாடுகள் தயாராக உள்ளன என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. இதன் கீழ், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை அடைவதற்கான திறவுகோலாக சர்வதேச சட்டத்தின்படி பாலஸ்தீனத்தில் காசா மேற்குக் கரையுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது

துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு :


போர் நிறுத்தத்தை ஏற்படுத்த டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்கு துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் பாராட்டியுள்ளார். "காசாவில் இரத்தக்களரியை நிறுத்தி போர் நிறுத்தத்தை அடைவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிகளையும் தலைமையையும் நான் பாராட்டுகிறேன்" என்று எர்டோகன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். துருக்கி இராஜதந்திர செயல்முறையை தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நிறுவ உதவுவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேபோன்று, இந்த திட்டத்தை வரவேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.  பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நீடித்த அமைதி பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவருவதில் அவசியம் என்பதில் தாம் உறுதியாக உள்ளதாக தனது சமூக வலைத்தளப்பதில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.  மேலும், "இந்த மிக முக்கியமான மற்றும் அவசரமான புரிதலை யதார்த்தமாக்குவதற்கு தேவையான எந்த வகையிலும் உதவ அமெரிக்க அதிபர் டிரம்ப் முழுமையாகத் தயாராக இருக்கிறார் என்பதும் தனது உறுதியான நம்பிக்கையாகும். அதிபர் டிரம்பின் தலைமையையும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆற்றிய முக்கிய பங்கையும் தாம் பாராட்டுவதாகவும், பிராந்தியத்தில் நீடித்த அமைதியை உறுதி செய்வதற்கு இரு நாடுகள் திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் ஷெரீப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபரின் திட்டம் குறித்து கருத்து கூறியுள்ள இஸ்ரேலிய எதிர்க்கட்சி அரசியல்வாதி பென்னி காண்ட்ஸ், "பணயக்கைதிகள் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கும் இஸ்ரேலிய பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும் அதிபர் டிரம்பின் அசாதாரண முயற்சிகளை தாம் பாராட்டுவதாகவும், இப்போது முன்முயற்சிக்கான நேரம் இது என்றும், அதிபர் டிரம்பின் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், தங்கள் பணயக்கைதிகள் வீட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும், இஸ்ரேலின் செயல்பாட்டு சுதந்திரம் பராமரிக்கப்பட வேண்டும், காசாவில் ஹமாஸின் பயங்கரவாத ஆட்சி மாற்றப்பட வேண்டும், அதற்கு பதிலாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாம் முன்மொழிந்தபடி மிதவாத அரபு நாடுகள் நிறுவப்பட வேண்டும். பணயக்கைதிகளை மீண்டும் கொண்டு வருவதற்கும், எங்கள் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும், பிராந்திய இயல்புநிலை வட்டங்களை விரிவுபடுத்தும் ஒரு 'மூலோபாய திருப்பத்தை' ஊக்குவிப்பதற்கும் வாய்ப்பை நாம் இழக்கக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா, பிரான்ஸ் ஜெர்மனி நாடுகள் வரவேற்பு :

இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தை வரவேற்றுள்ளார்.  இது இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் பிராந்தியத்திற்கு அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான நீண்டகால வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது என்றும்,   சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்முயற்சியின் பின்னால் ஒன்றுபட்டு, மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டும் இந்த முயற்சியை ஆதரிப்பார்கள் என்று தாங்கள் நம்புகிறோம் என்றும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  "கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பு" என்று  ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல் ஒரு அறிக்கையில், இந்த திட்டம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.  

இதேபோன்று இந்த திட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேல் உறுதியுடன் ஈடுபடும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவித்து இந்தத் திட்டத்தைப் பின்பற்றுவதைத் தவிர ஹமாஸுக்கு வேறு வழியில்லை என்றம் என்று பிரெஞ்சு அதிபர்  இம்மானுவேல் மக்ரோன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  மேலும், இந்த கூறுகள், இரு நாடுகள் தீர்வு மற்றும் பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவின் முன்முயற்சியின் அடிப்படையில், 142 ஐ.நா. உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில், பிராந்தியத்தில் நீடித்த அமைதியைக் கட்டியெழுப்ப அனைத்து தொடர்புடைய கூட்டாளிகளுடனும் ஆழமான விவாதங்களுக்கு வழி வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோன்று, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், ஐரோப்பிய கவுன்சில் என பல நாடுகளில் இந்த 20 அம்ச அமைதித் திட்டத்தை வரவேற்றுள்ளன.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :

இந்த 20 அம்ச அமைதித் திட்டத்தை இரு தரப்பும் ஒப்புக் கொண்டால், உடனடியாக போர் நிறுத்தப்படும். இஸ்ரேல் காசாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்தி படிப்படியாக வெளியேறத் தொடங்கும். பாலஸ்தீனர்களை கொண்ட ஒரு குழு காசாவில் இடைக்கால நிர்வாகத்தை மேற்கொள்ளும். அமெரிக்காவின் தலைமையில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட குழு இந்த திட்டத்தைக் கண்காணிக்கும். பாலஸ்தீன் ஆணையம் தனது சீர்திருத்தத் திட்டத்தை முடிவுக்கும் வரை காசாவில் மறுசீரமைப்புக்கு நிதி திரட்டுவது இந்த குழுவின் பணியாகும்.காசா பகுதி தீவிரவாதம் இல்லாத அமைதியான மண்டலமாக மாற்றப்படும். காசா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்த 48 மணி நேரத்திற்குள் அனைத்துப் பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். போர் உடனடியாக நிறுத்தப்படும்.  இப்படி பல அம்சங்கள் இந்த 20 அம்ச அமைதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

உண்மையில் பலன் தருமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்துள்ள இந்த அமைதித் திட்ட முயற்சி உண்மையில் பலன் தருமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. பாலஸ்தீன் பூமி என்பது பாலஸ்தீனர்களின் சொந்த நாடாகும். ஆனால், அதனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் பெரும் பகுதியை தனது கட்டுக்குள் வைத்துக் கொண்டு தொடர்ந்து அட்டூழீயம் செய்துக் கொண்டே இருக்கிறது. பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் அடிக்கடி நடத்தும் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. அமைதித் திட்டம் முன்மொழிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது கூட இஸ்ரேல் காசாவில் தாக்குதல்களை நடத்தி தன்னுடைய திமிர் தனத்தை காட்டிக் கொண்டே இருந்தது.

ஆனால் ஓர் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது காசா மக்களின் உறுதியான ஈமான் ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்கதல்களை நடத்தி, அட்டகாசம் செய்தபோதிலும், காசா மக்கள் ஏக இறைவ்ன் மீது நம்பிக்கையை இழக்கவில்லை. தங்களது சொந்த பூமியை விட்டு போக விரும்பவில்லை. செத்தாலும் காசாவில் செத்து மடிவோம் என்று உறுதியாக கூறிக் கொண்டே, இஸ்ரேலிய தாக்குதல்களை நாள்தோறும் சந்தித்துக் கொண்டே இருந்தார்கள். இப்போதும் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை சந்தித்த இஸ்ரேல் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் மீது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதன் அநீதிகளை எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்ற உண்மை தற்போது உலகத்தின் பார்வைக்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இது ஒரு வகையில் காசா மக்களின் உறுதிக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். நீண்ட காலம் அநியாயம் உலகில் நீடிக்காது என்பது உண்மையாகும். தற்போது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உலகிலேயே மிகவும் வெறுக்கப்படும் நபராக இருந்து வருகிறார். உலக மக்கள் அனைவரும் நெதன்யாகுவை மிகவும் வெறுத்து வருகிறார்கள். காசா போர் முடிவுக்கு வந்ததும், சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவாளி நெதன்யாகு நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்று உறுதி.

இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் காசாவில் போரை நடத்தியது என்ற உண்மை உலகம் தற்போது அறிந்துகொண்டுவிட்டது. இதன் காரணமாக அமெரிக்க அதிபருக்கு வேறு வழியில்லாமல், காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு விட்டது. காசா மக்களின் வாழ்வில் இனி அமைதி திரும்ப வேண்டும். அவர்களின் மனங்களில் ஒளி பிறக்க வேண்டும். வாழ்க்கையில் நிம்மதி கிடைக்க வேண்டும். போர் இல்லாத காசாவாக மாறி பாலஸ்தீன மக்கள் தங்களது பாரம்பரியம், கலாச்சாரம், வரலாற்றை பின்பற்றி உறுதியான ஈமானோடு ஏக இறைவனுக்கு எப்போதும் நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியாக, காசா போர் முடிவுக்கு கொண்டு வர இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், அமைதி வழி பேரணிகள், கருத்தரங்குகள் ஆகியவையும் முக்கிய பங்கு என்பது வரலாறு பதிவு செய்து இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

==============================================

காசாவில் போரை நிறுத்த 20 அம்ச அமைதித் திட்டம்


காசாவில் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 

20 அம்ச அமைதித் திட்டம்

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்பு

காசாவில் விரைவில் அமைதி திரும்பும் என நம்பிக்கை

நியூயார்க்,செப்.30-காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்துள்ள 20 அம்ச அமைதித் திட்டத்தை இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் வரவேற்றள்ளன.

காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் என 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் கிடைக்காமல், காசா மக்கள் நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலக நாடுகள் கோரிக்கை :

இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் உடனே தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அண்மையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இரண்டு நாடுகள் தீர்வை முன்வைத்து பேசின. மேலும், இஸ்ரேல் மீது கடும் கண்டனங்களையும் பல நாடுகள் தெரிவித்தனர். இஸ்ரேல் பிரதமர் ஐ.நா.பொது அவையில் பேசும்போது பெரும்பாலான நாடுகள் அவரது பேச்சை புறக்கணித்தன.

டிரம்ப் 20 அம்ச அமைதித் திட்டம் :

இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது, காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அழைத்து பேசிய அதிபர் டிரம்ப், காசாவில் போரை நிறுத்த 20 அம்ச அமைதித் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய சூழ்நிலையில், அமைதி மிகவும் அவசியம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதிபர் டிரம்ப்பின் இந்த இஸ்ரேல் பிரதமர் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து விரையில் 20 அம்ச அமைதித் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு :

காசாவில் போரை நிறுத்த அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள 20 அம்ச அமைதித் திட்டத்தை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் பிராந்தியத்திற்கு அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான நீண்டகால வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது என்றும்,   சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்முயற்சியின் பின்னால் ஒன்றுபட்டு, மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டும் இந்த முயற்சியை ஆதரிப்பார்கள் என்று தாங்கள் நம்புகிறோம் கூறியுள்ளார்.

இதேபோன்று, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், பாகிஸ்தான், சவுதி ஆரேபியா உள்ளிட்ட பல நாடுகள்  20 அம்ச அமைதித் திட்டத்தை வரவேற்றுள்ளன. ஹமாஸ் போராளிகள் குழுவும் இந்த திட்டத்திற்கு சம்பந்தம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :

இரு தரப்பும் இந்த திட்டத்தை ஒப்புக் கொண்டால், உடனடியாக போர் நிறுத்தப்படும். இஸ்ரேல் காசாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்தி படிப்படியாக வெளியேறத் தொடங்கும். பாலஸ்தீனர்களை கொண்ட ஒரு குழு காசாவில் இடைக்கால நிர்வாகத்தை மேற்கொள்ளும். அமெரிக்காவின் தலைமையில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட குழு இந்த திட்டத்தைக் கண்காணிக்கும். பாலஸ்தீன் ஆணையம் தனது சீர்திருத்தத் திட்டத்தை முடிவுக்கும் வரை காசாவில் மறுசீரமைப்புக்கு நிதி திரட்டுவது இந்த குழுவின் பணியாகும். இப்படி பல அம்சங்கள் இந்த 20 அம்ச அமைதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Friday, September 26, 2025

True journalism...!

 This is called true journalism.

Must watch this episode of Ravish Kumar fearlessly discussing the former CJI Chandrachud's comment on the Babri Masjid verdict.

Hats off to Ravish Kumar.



விளக்கம்....!

 நான் முதல்வன் திட்டம்...?



Wednesday, September 24, 2025

மனிதநேயப் பணி....!

" ஊடகவியலாளர்கள், புகைப்படக் கலைஞர்களின்னி மனிதநேயப் பணி "

'காஸாவில் உயிர் பிழைக்க ஓடும் மக்கள்' என்ற தலைப்பில் கடந்த 19ஆம் தேதி மணிச்சுடர் நாளிதழில், தொடரும் காஸா மக்களின் துயரங்கள் குறித்து ஒரு கட்டுரையை எழுதி இருந்தோம். அந்த கட்டுரையில் சிறுவன் ஜாதூவா தனது தம்பி கலீத்தை முதுகில் சுமந்து கொண்டு அழுதுக் கொண்டே ஓடிச் செல்லும் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றிருந்தது.

ஜாதூவா மற்றும் கலீத் ஆகியோரின் இந்த துயரமான புகைப்படம் காஸாவில் இஸ்ரேல் நடத்தும் கொடுமைகளுக்கு ஒரு சிறிய சான்றாக அமைந்து இருந்தது. இதேபோன்று, ஆயிரக்கணக்கான குழந்தைகள் காஸாவில் சிக்கி உயிர் பிழைக்க நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் செய்தியும் தற்போது உலகம் முழுவதும் எட்டிக் கொண்டிருக்கிறது.

கூடாரத்தில் தஞ்சம் :

சிறுவர்கள் ஜாதூவா மற்றும் கலீத் ஆகியோரின் புகைப்படம் வெளியான பிறகு, ஒரு ஊடகவியலாளரின் உதவியுடன் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு, அகதிகளுக்கான கூடாரத்தில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு, உணவு, உடை உள்ளிய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால்

 காஸாவில் இஸ்ரேலிய தாக்குல் காரணமாக இடம்பெயர்வின் கடுமையான சாலைகள் வழியாக ஜாதூவா தனது தம்பி கலீத்தை தோள்களில் சுமந்து சென்ற துயரம் தற்போது நீங்கி, தற்போது இருவரும் கூடாரத்தில் அமர்ந்து துயரத்தை கொஞ்சம் மறந்து சிரித்து விளையாடி மகிழ்கிறார்கள்.

போரின் சுமையைத் தாங்கும் குழந்தைப் பருவத்தின் அடையாளமாக இருந்த அவர்களின் வாழ்க்கை தற்போது மாறி,இரண்டு சகோதரர்கள் ஒரு எளிய கூடாரத்திற்குள் அமர்ந்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட குழந்தைப் பருவத்தை  மீட்டெடுக்கும் வகையில் ஒரு சிறிய சிரிப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் மூலம் உயிர்வாழும் ஒரு தலைமுறையின் கதையாக உள்ளது. மேலும் இது உலகிற்கு மீள்தன்மையின் பாடத்தை வழங்குகிறது.

எகிப்து தொழில் அதிபரின் மனிதநேயம் :

இது ஒருபுறம் இருக்க, எகிப்து தொழில் அதிபரின் மனதை கூட சிறுவர்கள் ஜாதூவா மற்றும் கலீத் ஆகியோரின் துயரம் தாக்கியுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வளர்க்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். காஸா போரில் தாய், தந்தையை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான சிறுவர்களை அந்த தொழில் அதிபர் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு அழகிய வாழ்வை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் சிறுவர்கள் ஜாதூவா மற்றும் கலீத் ஆகியோருக்கும் உதவ அவர் முன் வந்துள்ளார். சிறுவர்கள் இருவர் குறித்த விவரங்களை ஊடகவியலாளர் ஒருவரிடம் கேட்டுள்ள அந்த தொழில் அதிபர், முழு விவரங்களையும் அனுப்ப அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, சிறுவர்கள் இருவரின் விவரங்கள் தற்போது எகிப்து தொழில் அதிபரின் பார்வைக்கும் கவனத்திற்கும் சென்றுள்ளது.இதன்மூலம் ஜாதூவா மற்றும் கலீத் ஆகிய இரண்டு சிறுவர்களின் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

புகைப்படக் கலைஞர்களின் சேவை :

காஸாவின் துயரங்களை நேரடியாக படம் பிடித்துக் காட்டும் புகைப்படக் கலைஞர்களின் அரிய சேவை மூலம் காஸா சிறுவர்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்றே கூறலாம்.

காஸா போர்க்களத்தில் துணிச்சலுடன் செயல்படும் ஊடகவியலாளர், புகைப்படக் கலைஞர்கள் மூலமாக இஸ்ரேலின் கொடூரம் உலகம் முழுவதும் சென்று சேர்ந்துக் கொண்டிருக்கிறது. காஸா மக்கள் மீது குறிப்பாக, சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்தும் தாக்குதல்கள், செய்யும் கொடுமைகள் தற்போது உலகம் நேரடியாக கண்டு வருகிறது. இஸ்ரேலிய அரசுக்கு மேற்கத்திய நாடுகள் பெரும் அழுத்தம் கொடுக்கும் வகையில் தற்போது நிலைமை மாறி வருகிறது. இதன்மூலம் காஸாவில் போர் நின்று விரைவில் அமைதி திரும்ப வாய்ப்பு உருவாகியுள்ளது என்றே கூறலாம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Tuesday, September 23, 2025

நவீன சவூதி அரேபியாவின் தந்தை.....!

 " நவீன சவூதி அரேபியாவின் தந்தை மன்னர் அப்துல்அஜீஸ் அல் சவுத் "

உலகமே வியக்கும் வகையில் தற்போது சவூதி அரேபியா  நவீனமயமாக காட்சி அளிக்கிறது. அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவில் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சிப் பணிகள் மூலம், உலகம் முழுவதும் இருந்து வரும் முஸ்லிம்கள், அந்த நகரங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்டு, வியப்பு அடைவதுடன், சிறப்பான வசதிகளையும் பெற்று மகிழ்ச்சி அடைகிறார்கள். 

சவூதி இஸ்லாமியர்களின் வரலாற்று தாயகமாகும். சவூதி அரேபியா கலாச்சாரத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக பெண்கள் உரிமைகள் மற்றும் சமூக வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெண்கள் சமூக வாழ்வில் அதிக அளவில் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர். இது சவூதி அரேபியாவின் சமூக அமைப்பில் ஒரு பெரிய மாற்றமாகும். நாட்டின் உள்கட்டமைப்பு மிகவும் நவீனமடைந்து வருகிறது. புதிய நகரங்களும், பெரிய திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன.  நாட்டின் பொருளாதாரம் எண்ணெயை மட்டும் சார்ந்திராமல், சுற்றுலா மற்றும் பிற துறைகளிலும் வளர்ந்து வருகிறது.  சவூதி அரேபியா நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இது சுற்றுலா மற்றும் வணிகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

இப்படி சவூதி அரேபியாவின் பல மாகாணங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. உலக சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரியாத், ஜித்தா மற்றும் பிற நகரங்களில் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் பணிகள் மூலம் சவூதி அரேபியா நவீனமயமாக காட்சி அளிக்கிறது.  சரி, இந்த நவீனமயமாக்கலின் தந்தை யார் என கேள்வி எழுப்பினால், மன்னர் அப்துல் அஜீஸ் அல் சவுத் என்று அனைவரும் சொல்கிறார்கள். அவரது பணிகள் மூலம் பாலைவன நாடாக இருந்து எண்ணெய் வளத்தையும், நவீன உள்கட்டமைப்புத் திட்டங்களையும் கொண்ட ஒரு தேசமாக உருவெடுத்துள்ளது. இது மத்திய கிழக்கில் அமைந்துள்ள ஒரு அரபு நாடு, மற்றும் அதன் வரலாறும் கலாச்சாரமும் மிகவும் பழமையானது என்றாலும் தற்போது இந்த வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் இணைந்து நவீனத்தை நோக்கிப் பயணிக்கிறது. 

நவீன சவூதி அரேபியாவின் தந்தை :

மன்னர் அப்துல்அஜீஸ் அல் சவுத்தின் ஆட்சி, நவீன சவூதி அரேபியாவின், தொடக்கத்தின்  முதல்  காலமாகும். 1932 ஆம் ஆண்டில் சவூதி ராஜ்ஜியத்தை ஒன்றிணைத்த மன்னர் அப்துல்அஜீஸ் அல் சவுத், ஒரு நவீன அரசின் அடித்தளத்தை கட்டியெழுப்பத் தொடங்கினார். அவரது தலைமையில் தொடங்கிய நிறுவனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஒப்பந்தங்கள், வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு சவூதி அரேபியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றன. 

1932 இல் வெளியிடப்பட்ட சவூதி ராஜ்ஜியத்தின் முதல் பட்ஜெட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி  14 மில்லியன் ரியால்கள் ஆகும். இன்றைய தரநிலைகளின்படி அது எளிமையானது. இது செங்கடலில் இருந்து அரேபிய வளைகுடா வரை நீண்டிருந்த ஒரு மாநிலத்தில் நிதி நிர்வாகத்தை நிறுவனமயமாக்குவதற்கான ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. இது இறுதியில் சவூதி ராஜ்ஜியத்தை உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றும் ஒரு செயல்முறையின் தொடக்கத்தையும் குறித்தது.

முதல் அமைச்சகங்கள் :

அரசு கட்டமைப்பின் ஆரம்பகால செயல்களில் அமைச்சகங்களை உருவாக்குவதும் அடங்கும். 1930 இல் நிறுவப்பட்டு இளவரசர் பைசலுக்கு ஒப்படைக்கப்பட்ட வெளியுறவு அமைச்சகம், அரேபிய தீபகற்பத்தின் முதல் நவீன அமைச்சகமாகும். பின்னர், வருவாய் மற்றும் செலவினங்களை நிர்வகிக்க அப்துல்லா பின் சுலைமான் அல்-ஹம்தான் தலைமையில் நிதி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் நாட்டை பொருளாதார சவால்களை கடந்து செல்லவும் வெளிநாட்டு உறவுகளை கட்டியெழுப்பவும் அனுமதிக்கும் நிர்வாக முதுகெலும்பை வழங்கின.

1933 ஆம் ஆண்டில், மன்னர் அப்துல்அஜீஸ் கலிபோர்னியாவின் ஸ்டாண்டர்ட் ஆயிலுடன் முதல் சலுகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது சவூதி இராச்சியத்தில் எண்ணெய் ஆய்வுக்கு வழிவகுத்தது. பல வருட ஆய்வுகள் மற்றும் துளையிடுதலுக்குப் பிறகு, 1938 ஆம் ஆண்டில், தம்மம் கிணறு எண் 7 வணிக அளவில் எண்ணெயை உற்பத்தி செய்தபோது திருப்புமுனை ஏற்பட்டது. ஒரு வருடம் கழித்து, 1939 ஆம் ஆண்டில், மன்னர் தனிப்பட்ட முறையில் ராஸ் தனுராவில் உள்ள வால்வைத் திறந்து சவூதி கச்சா எண்ணெயின் முதல் கப்பலை ஒரு டேங்கரில் ஏற்றினார். இது நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணம்.

முதல் ரயில், விமான நிலையங்கள் :

தனது பரந்த சவூதி ராஜ்ஜியத்தை இணைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த மன்னர் அப்துல்அஜீஸ் போக்குவரத்து உள்கட்டமைப்பின் வளர்ச்சியை மேற்பார்வையிட்டார். முதல் ரயில் ரியாத்தை தம்மத்துடன் இணைத்தது. இது நவீன நிலப் போக்குவரத்திற்கான அடித்தளத்தை அமைத்த ஒரு திட்டமாகும். நீண்ட கேரவன் வழித்தடங்களை நம்பியிருந்த ஒரு நாட்டில், தகவல் தொடர்பு மற்றும் பயணத்தை எளிதாக்கும் ஆரம்பகால விமான ஓடுபாதைகளுடன் விமான நிலையங்களும் தோன்றத் தொடங்கின.

இதேபோன்று, கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பும் முன்னுரிமைகளாக இருந்தன. மன்னர் அப்துல்அஜீஸின் கீழ் நிறுவப்பட்ட முதல் பள்ளிகள் எழுத்தறிவு மற்றும் கற்றலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. ரியாத், தைஃப் மற்றும் ஜித்தாவில் பல மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள்  கட்டப்பட்டன. இவை ஒரு காலத்தில் வரையறுக்கப்பட்ட வசதிகள் மட்டுமே இருந்த கட்டமைக்கப்பட்ட சுகாதார சேவைகளை வழங்கின. இந்த நிறுவனங்கள் பிற்கால தசாப்தங்களில் பின்பற்றப்படும் நாடு தழுவிய அமைப்புகளுக்கு அடித்தளம் அமைத்தன.

உலக அரங்கில் சவூதி அரேபியா :

மேலும், மன்னர் அப்துல்அஜீஸ் சவூதி அரேபியாவை உலக அரங்கில் நிலைநிறுத்தினார். அவர் முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினார். தூதரகங்களைத் திறந்தார். வெளிநாட்டு தூதர்களை வரவேற்றார். 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதில் அவரது இருப்பு, சர்வதேச நிறுவனங்களில் சவூதி இராச்சியத்தின் முதல் பங்கேற்பைக் குறித்தது. சவூதி அரேபியாவை ஒரு பிராந்தியத் தலைவராகவும் உலகளாவிய தலைவராகவும் அவரது பார்வையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த முதல் முயற்சிகள் ஒவ்வொன்றும்  பட்ஜெட்டுகள், அமைச்சகங்கள், சலுகைகள் மற்றும் நிறுவனங்கள் நிர்வாகச் செயல்களை விட அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்தின. சவூதி அரேபியாவை ஒருங்கிணைந்த நிலத்திலிருந்து நவீன நாடாக மாற்றுவதில் அவை மைல்கற்களாக இருந்தன. சவூதி இராச்சியம் அதன் 95வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வேளையில், மன்னர் அப்துல்அஜீஸின் கீழ் இந்த தொடக்கங்களின் நினைவு நிலைத்திருக்கிறது. இன்றைய செழிப்பான தேசத்தின் அடித்தளங்கள் மீள்தன்மை, தொலைநோக்கு மற்றும் வரலாற்று முதன்மையான சாதனைகளின் சகாப்தத்தில் அமைக்கப்பட்டன என்பதை அவை நினைவூட்டுகின்றன.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Monday, September 22, 2025

உதவி....!

 பஞ்சாப் கனமழை, வெள்ளம்....!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆய்வு..!



Sunday, September 21, 2025

மதரஸா, பள்ளி மாணவர்களின் ரோஜா பூ வரவேற்பு.....!

மதரஸா, பள்ளி மாணவர்களின் ரோஜா பூ வரவேற்பு.....!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.....!!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 1500 பிறந்தநாள் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மதரஸா மற்றும் பள்ளி மாணவர்கள் ரோஜா பூ கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தி சிறப்பாக வரவேற்பு அளித்தனர். கலைவாணர் அரங்கத்திற்குள் முதலமைச்சரின் வாகனம் நுழைந்ததும், வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய முதலமைச்சருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இன்ப அதிர்ச்சி, மதரஸா மற்றும் பள்ளி மாணவர்களின் அன்பான ரோஜா பூ வரவேற்பாக இருந்தது. ஒவ்வொரு மாணவர்களும், தங்களது கைகளில் வைத்திருந்த ரோஜா பூவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்து, தங்களது அன்பை வெளிப்படுத்தி, அவரை மகிழ்ச்சியுடன் விழாவிற்கு அழைத்தனர். அப்போது முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்து ரோஜா பூவைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் மாணவர்களின் தோளை தட்டி அவர்களை உற்சாகப்படுத்தினார். சில மாணவர்களிடம் அவர்கள்  படிக்கும் படிப்பு மற்றும் நலன் குறித்தும் அவர் கேட்டு, சிறப்பாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார். 

முதல் வரிசையில் இருந்த மதரஸா மாணவர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர், எதிர்திசையில் இருந்த இரண்டாவது வரிசைக்கு சென்றபோது, மீண்டும் வரிசையில் இருந்த முதல் மாணவனின் திசைக்குச் சென்று, அங்கிருந்த மாணவனின் கைகளில் இருந்து ரோஜா பூவைப் பெற்றுக் கொண்டு வரவேற்பை தொடங்கியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதரஸா மற்றும் பள்ளி மாணவர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்ற காணொளியை காணும்போது, உண்மையில் உள்ளம் மகிழ்ச்சி அடைந்தது. முதலமைச்சருக்கு வித்தியாசமான முறையில் அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு, அவரை பெரிதும் கவர்ந்தது என்பதை அவரது முகத்தை காணும்போது தெளிவாக தெரிந்தது. புன்சிரிப்புடன், ஒவ்வொரு மாணவரும் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்ததும், காணொளியில் மூலம் அருமையாக தெரியவந்தது. உண்மையில் மதரஸா மற்றும் பள்ளி மாணவர்களின் இந்த அன்பான வரவேற்பு, முதலமைச்சரை மட்டுமல்லாமல், இஸ்லாமிய சமுதாயத்தையும் தமிழக மக்கள் அனைவரையும் கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்றது என்றே கூறுலாம்.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=================================