" நம்பிக்கையின் கதிர்களாக விளங்கும் தென் மாநிலங்கள் "
இந்திய மக்கள் தொகையில் இரண்டாவது மிகப்பெரிய தொகையாக முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில், சுமார் 25 கோடி பேர் முஸ்லிம்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முஸ்லிம்களில் கிட்டத்தட்ட 60 சதவீத பேர் உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களின் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை பங்கு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தபோதிலும், இந்த மாநிலங்களில் வாழும் முஸ்லிம்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ளனர். இந்த வட மாநிலங்களின் முஸ்லிம்கள் இந்தியப் பிரிவினையால் அதிகம் பாதிக்கப்பட்டனர். இது அவர்களுக்கு ஒரு கூட்டு பாதிக்கப்பட்டவர் என்ற உணர்வையும் தோல்வியுற்ற கதையையுமே விட்டுச் சென்றது.
இந்தப் பகுதிகளில் தோன்றிய தலைமை பெரும்பாலும் அடையாளப் பிரச்சினைகளை உயிருடன் வைத்திருப்பதன் மூலம் செழித்து வளர்ந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு ஷா பானோ வழக்கிலிருந்து, வடக்கில் முஸ்லிம் அரசியல், சல்மான் ருஷ்டி மற்றும் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய புத்தகங்களைத் தடை செய்தல், பாபரி மஸ்ஜித் தகராறு, முத்தலாக் விவாதங்கள் மற்றும் ஈத் மிலாதுன் நபி விடுமுறைகள் போன்ற உணர்ச்சி மற்றும் மதப் பிரச்சினைகளைச் சுற்றியே சுழன்றுள்ளது. அதேநேரத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி மற்றும் பொருளாதார சீர்திருத்தம் போன்ற அழுத்தமான கவலைகளைப் புறக்கணிக்கிறது.
அறிவொளியின் கலங்கரை விளக்கம் :
சுதந்திரம் அடைந்த எட்டு தசாப்தங்களுக்குப் பிறகும், வட மாநிலத் தலைமை, நவீன உலகின் யதார்த்தங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மதரஸாக்களால் ஆதரிக்கப்படும் உணர்ச்சிபூர்வமான சொல்லாட்சிகளால் மக்களை தொடர்ந்து ஈடுபடுத்துகிறது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும், சுமார் 23 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட மதரஸாக்களும், பீகாரில் சுமார் 4 ஆயிரம் மதரஸாக்களும் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு ஏராளமான ஜகாத், ஃபித்ரா மற்றும் தொண்டு நிதிகள் கொட்டப்படுகின்றன. அதேநேரத்தில் ஆசிரியர்கள் ரமழானில் சொகுசு உம்ரா பயணங்களின் வசதியை அனுபவிக்கிறார்கள். ஒருசில ஆசிரியர்கள் அனைத்து வசதியையும் விட்டுவிட்டு, மார்க்கத்திற்காக உண்மையாக உழைக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது.
இந்தப் பின்னணியில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அறிவொளியின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது. இருப்பினும், சர் சையது அகமது கானின் சீர்திருத்த நோக்கம் மதகுருமார்களின் எதிர்ப்பால் குறைமதிப்பிற்கு உட்பட்டது. இது வட இந்தியாவில் பாரம்பரிய மதரஸாக்களின் வெள்ளத்திற்கு வழிவகுத்தது. எனவே வட மாநிலங்களில் நவீன கல்விக்கான நிறுவனங்கள் உருவாகவில்லை. அதில் வட மாநில முஸ்லிம்கள் அதிக கவனம் செலுத்தவில்லை.
தென்மாநிலங்களில் நவீன கல்வியில் முதலீடு :
இதற்கு நேர்மாறாக, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள தென்னிந்திய முஸ்லிம்கள் சரியான பாடங்களைக் கற்றுக்கொண்டனர். அவர்கள் நவீன கல்வியில் முதலீடு செய்தனர். இன்று அவர்களின் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்முறை நிறுவனங்களை நிறுவினர்.
தமிழ்நாட்டில், முகமதியன் கல்லூரி 1905 இல் சென்னையில் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய கல்லூரி (1951) மற்றும் எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரி (நீதிபதி பஷீர் அகமது சயீத் நிறுவினார்). வாணியம்பாடி என்ற சிறிய நகரம் 1919 இல் இஸ்லாமியா கல்லூரியை நிறுவியது. இப்போது ஒரு நூற்றாண்டுக்கும் மேலானது. திருச்சி ஜமால் முகமது கல்லூரி, மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி என பல கல்வி நிறுவனங்கள் தமிழக முஸ்லிம்கள் நிறுவி முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல், அனைத்துச் சமுதாய இளைஞர்களும் பயன்பெறும் வகையில் கல்விப் பணியை ஆற்றி வருகிறது. இன்று, மாநிலத்தில் சுமார் 35 பட்டப்படிப்பு மற்றும் முதுகலை கல்லூரிகள், இரண்டு பல்கலைக்கழகங்கள், 20 பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும் முஸ்லிம்கள் மக்கள் தொகையில் 5 புள்ளி 6 சதவீதம் மட்டுமே உள்ளனர்.
கர்நாடகா மாநிலமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 55 பல்கலைக்கழகங்களில், ஐந்து பல்கலைக்கழகங்கள் முஸ்லிம்களால் நிறுவப்பட்டவை. டாக்டர் மும்தாஜ் அகமது கான் 1964 ஆம் ஆண்டு அல்-அமீன் கல்லூரியை நிறுவினார். இது 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் வலையமைப்பாக வளர்ந்தது. பெங்களூருவில் மட்டும் சுமார் 550 முஸ்லிம்களால் நிர்வகிக்கப்படும் உயர்நிலைப் பள்ளிகள், 600 தொழில்துறை அலகுகள் மற்றும் ஏராளமான செழிப்பான முஸ்லிம் தொழில்முனைவோர் உள்ளனர்.
கொரோனா பேரிடர் நெருக்கடியின் போது, பெங்களூருவில் உள்ள ஒரு முஸ்லிம் தன்னார்வ தொண்டு நிறுவனமான மெர்சி மிஷன், 20 சமூக சமையலறைகளை நடத்தி, ஏழைக் குடும்பங்களுக்கு 14 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவை விநியோகித்தது. இந்த சேவை மிகவும் திறமையாக இருந்து மிகப்பெரிய அளவுக்கு பாராட்டு பெற்றது. அப்போதைய பாஜக ஆட்சியின் கீழும் கூட, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பெட்டிகளை வழங்கும் பொறுப்பை மாநில அரசு அவர்களிடம் ஒப்படைத்தது.
கேரளாவில் ஒரு அரிய நிகழ்வு :
கேரளாவின் முன்னேற்றம் சமமாக ஊக்கமளிக்கிறது. அதன் முதல் முஸ்லிம் கல்லூரியான ஃபாரூக் கல்லூரி (1949), 150 க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு கல்லூரிகள் மற்றும் டஜன் கணக்கான பொறியியல் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் வலையமைப்பிற்கு வழி வகுத்தது. யூசுப் அலி (லுலு குழுமம்) மற்றும் எம்.ஏ. யூசுப்ஃபாலி (மலபார் கோல்ட்) போன்ற முஸ்லிம் தொழிலதிபர்கள் உலகளாவிய பெயர்களாகிவிட்டனர். கேரளாவில், மக்கள் தொகையில் சுமார் 27 சதவீதம் முஸ்லிம்கள் விகிதாசார அரசியல் பிரதிநிதித்துவத்தை அனுபவிக்கின்றனர். இது இந்தியாவில் ஒரு அரிய நிகழ்வு.
கேரள முஸ்லிம்கள் உலக அளவில் மிகப்பெரிய அளவுக்கு சாதித்து வருகிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம், கல்வியில் அவர்கள் அதிக கவனம் செலுத்தியது என்றே கூறலாம். பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட கல்வியை கூட, மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்ற ஆவல் கேரள முஸ்லிம் பெண்களிடம் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அவர்கள் திருமணம் முடிந்து, குழந்தைகளைப் பெற்றபிறகு கூட, படிக்க கல்வியில் சேருகிறார்கள். நல்ல படிப்பை தேர்வு செய்து அதில் வெற்றியும் குவித்து வருகிறார்கள்.
பாடம் தெளிவாக உள்ளது :
இத்தகைய சூழ்நிலையில், வட மாநில முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டவர் மற்றும் குறை அரசியலுக்கு அப்பால் உயர வேண்டும். அவர்கள் தங்கள் மனநிலையை நவீனமயமாக்க வேண்டும். கல்வி மற்றும் தொழில் நிறுவனத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் தென் மாநிலங்களின் வெற்றியைப் பின்பற்ற வேண்டும். மதரஸாக்களிலிருந்து உருவாகும் தலைமை 21 ஆம் நூற்றாண்டுக்குத் தயாராக இல்லை என்ற ஒரு வாதம் இருந்தாலும், மதரஸாக்களை நவீனமயமாக்கி, மார்க்கக் கல்வி, உலகக் கல்வி ஆகிய இரண்டிற்கும் பயன்படும் வகையில் முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வியைச் சொல்லித்தர முன்வர வேண்டும். மேலும் சமூகத்தை காலாவதியான சிந்தனைக்குள் அடைத்து வைக்கும் போக்கை உடனே கைவிட வேண்டும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னேற, இந்திய முஸ்லிம்கள் சீர்திருத்தம், அறிவு மற்றும் நவீன ஈடுபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தென்மாநில முஸ்லிம்கள் கல்வித்துறையில் செய்த சாதனைகளையும், வெற்றிகளையும் அறிந்துகொள்ள வட மாநில முஸ்லிம்கள் முன்வர வேண்டும். தென் மாநிலங்களில் பயணம் செய்து, அங்குள்ள முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். தென் மாநிலங்களில் எப்படி முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை அறிந்துகொள்ள முன்வர வேண்டும். தற்போது இந்திய முஸ்லிம்கள் பல்வேறு சவால்களை சந்தித்து மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்துவரும் நிலையில், அவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆர்வம் கொள்ள முன்வர வேண்டும். முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு கல்வி மற்றும் அதன்மூலம் அமையும் நல்ல தொழில் என்பதை மனதில் உள்வாங்கிக் கொண்டு, உடனே செயலில் இறங்க வேண்டும். முஸ்லிம்களுக்கு மதரஸாக்களும் வேண்டும். நவீன கல்விக்கான பல்கலைக்கழங்களும் வேண்டும். அப்போதுதான் அவர்கள் 21 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாக சுவாசிக்க முடியும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்







No comments:
Post a Comment